மாணவியை மீட்டதில் 4 மணி நேரம் தாமதம் ஏன்? இபிஎஸ் சரமாரி கேள்வி!!
EPS questions TN Police: கோவையில் கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 3 நபர்களை போலீசார் சுட்டுப்பிடித்த நிலையில், கோவை ஆணையர் செய்தியாளர்களை சந்தித்து விளக்கமும் அளித்தனர். இதில், 4 மணி நேரமாக மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை எனக் கூறியது சர்சையாகியுள்ளது.

இபிஎஸ்
கோவை, நவம்பர் 05: கோவையில் நள்ளிரவில் ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவ்விவகாரம் தொடர்பாக கல்லூரி மாணவி இரவு 11 மணிக்கு எதற்காக அந்த இடத்திற்கு சென்றார் என ஒரு தரப்பும், போலீசார் உரிய பாதுகாப்பு அளிக்கவில்லை என மறு தரப்பும் மாறி மாறி சமூக வலைதளங்களில் மோதிக்கொண்டன. போலீசார் தரப்பில் மாணவி எந்த நேரத்திலும் எங்கும் செல்வது என்பது அவரது தனிப்பட்ட உரிமை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், இந்த விவகாரத்ததை தீவிரமாக கையில் எடுத்த அதிமுக, பாஜக, தவெக உள்ளிட்ட கட்சிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளன.
கூட்டு பாலியல் வன்கொடுமை:
கடந்த (நவ.2) ஞாயிற்றுக்கிழமையன்று இரவு கோவை விமான நிலையம் பின்புறம் உள்ள காலியான மைதானப் பகுதியில், தனியார் கல்லூரியில் சேர்ந்த மாணவி ஒருவர் தனது ஆண் நண்பருடன் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.அப்போது அந்த வழியாக வந்த மூன்று அடையாளம் தெரியாத நபர்கள் காரிலிருந்த இளைஞரை வலுக்கட்டாயமாக வெளியே இழுத்து சரமாரியாக தாக்கியுள்ளனர். தொடர்ந்து, மாணவியை வலுக்கட்டாயமாக தூக்கிச்சென்ற அந்த நபர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
குற்றவாளிகள் சுட்டுப் பிடிப்பு:
இதனிடையே, காயமடைந்த ஆண் நண்பர் காவல்துறைக்கு புகார் அளிக்கவே, சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்துள்ளனர். எனினும், மாணவியை அவர்கள் சுமார் 4 மணி நேர தேடுதலுக்கு பின்பு அதிகாலையிலேயே மீட்டுள்ளனர். தொடர்ந்து, பாலியல் வன்கொடுமை செய்த 3 பேரையும் 7 தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், கோவை துடியலூர் அருகே குற்றவாளிகள் மூன்று பேரும் பதுங்கி இருந்த தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அவர்களை சுட்டுப் பிடித்தனர். தொடர்ந்து, கோவை காவல் ஆணையர் இச்சம்பவம் குறித்து விரிவாக பேட்டி அளித்திருந்தார்.
இதையும் படிக்க : கோவை கூட்டு பாலியல் வன்கொடுமை.. நள்ளிரவில் 3 பேரை சுட்டுப்பிடித்து காவல்துறை அதிரடி..
4 மணி நேரம் தாமதமானது ஏன்?
இந்நிலையில், மாணவியை மீட்டதில் 4 மணி நேரம் தாமதமானது ஏன்? என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து இபிஎஸ் தனது சமூக வலைதளபக்கத்தில் கூறியதாவது, கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு பற்றி விளக்கம் அளித்த கோவை காவல் ஆணையர் சரவணசுந்தர், ஞாயிற்றுக் கிழமை இரவு 11:20 மணிக்கு காவல்துறைக்கு மாணவியின் நண்பர் தொடர்பு கொண்டு உதவி கோரியதாகவும், 11:35 மணிக்கு சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், மறுநாள் அதிகாலை 4 மணிக்கு தான் மாணவியைக் கண்டதாகவும், அதுவும் அம்மாணவி தானாக வந்து சேர்ந்ததாகவும் தெரிவித்தார்.
இரவு 11:35 மணி முதல், அதிகாலை 4 மணி வரை, 4 மணி நேரம் 25 நிமிடம் என்ன செய்துகொண்டு இருந்தது காவல்துறை? என்பதே தற்போது எழுந்துள்ள கேள்வி. குற்றவாளிகளை பிடித்துவிட்டதாக தம்பட்டம் அடித்துக்கொள்ளும் பொம்மை முதல்வர் ஸ்டாலின், தனது காவல்துறையால் சம்பவ இடத்தில் நின்றுக்கொண்டே நான்கரை மணி நேரம் பாதிக்கப்பட்ட மாணவியை கண்டுபிடிக்க வக்கில்லாமல் போனதற்கு வெட்கித் தலைகுனிய வேண்டும்.
தேடுதல் வேட்டை நடத்திய போலீசார்:
100 போலீசார் இணைந்து பெரிய தேடுதல் வேட்டை நடத்தியதாக காவல் ஆணையர் சொல்கிறார். நான்கரை மணி நேரம், 100 போலீசாரால் சம்பவ இடத்தில் இருந்த பாதிக்கப்பட்ட மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை என்பது அதிர்ச்சியாக இருக்கிறது. இந்த சூழலில், “ஆக… குற்றவாளிகள் கைது, குற்றப் பத்திரிகை ஒரு மாதத்தில் தாக்கல் செய்து விடுவோம்” என்று பெருமை பேசுகிறார் முதல்வர்.
இதையும் படிக்க : கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை.. த.வெ.க கண்டன ஆர்ப்பாட்டம்.. முழு விவரம் உள்ளே..
ஸ்டாலின் அவர்களே- அதற்கு முன்னால், உங்கள் காவல்துறை 4 மணி நேரம் 25 நிமிடம் பாதிக்கப்பட்ட மாணவியைக் கண்டுபிடிக்க வக்கில்லாமல் போனது ஏன்? என்பது பற்றி விளக்கம் அளிக்க வேண்டும். ஏனென்றால், In case you’ve forgotten, காவல்துறை உங்கள் கட்டுப்பாட்டில் தான் உள்ளது (ஏட்டளவில்) என்றும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.