“சகோதரர் விஜயை நாங்களாக திட்டவில்லை”.. செல்லூர் ராஜூ விளக்கம்!!
எம்ஜிஆர் அரசியலுக்கு வந்தபோது மக்களோடு மக்களாக நின்றார். மக்கள் துயரங்களில் பங்கெடுத்தார். மக்களுக்கான திட்டங்களை செய்தார். ஆனால் அவரோடு விஜயை ஒப்பிட முடியாது. அவர் அறைக்குள் இருந்து அரசியல் செய்கிறார். கரூர் சம்பவத்தில் 41 உயிர்கள் பலியான போது கூட பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரில் வந்து அனுதாபம் தெரிவிக்க அவரால் முடியவில்லை.
மதுரை, ஜனவரி 30: சகோதரர் விஜய்யை நாங்களாக திட்டவில்லை, அவர் எங்களை திட்டும்போது நாங்கள் திட்டாமல் இருக்க முடியுமா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இதுவரை விஜய்யின் அரசியல் வருகை குறித்து நிதானமான போக்கை கடைப்பிடித்து வந்த அதிமுக, தற்போது அவரை கடுமையாக சாடி வருகிறது. குறிப்பாக, அண்மையில் விஜய் அதிமுகவை கடுமையாக விமர்சித்த நிலையில், அக்கட்சி நிர்வாகிகள் பலரும் விஜய்க்கு எதிராக கருத்து தெரிவிக்க தொடங்கியது தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, விஜய்க்கு ஆதரவாகவே கருத்து தெரிவித்து வந்தார். இந்நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், கரூர் விவகாரத்தில் விஜய்யின் செயல்பாடு குறித்து கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார்.
இதையும் படிக்க : 2026 சட்டமன்ற தேர்தல்: திமுக உடன் கைக்கோர்க்கும் தேமுதிக.. எத்தனை இடங்கள் தெரியுமா?
இக்கட்டான சூழலில் விஜய் எங்கே போனார்?
அப்போது, 41 உயிர்கள் பலியானதைச் சுட்டிக்காட்டிய எடப்பாடி பழனிசாமி, அந்த இக்கட்டான சூழலில் விஜய் எங்கே போனார் என்று கேள்வி எழுப்பினார். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நேரில் சென்று ஆறுதல் சொல்லக் கூடத் துணிவில்லாதவர்கள் எப்படி மக்களுக்காகக் கட்சி நடத்த முடியும் என்று அவர் ஆவேசமாகக் கேட்டார். ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் சுனாமி மற்றும் கஜா புயல் போன்ற இயற்கை பேரிடர்களின் போது அதிமுக அமைச்சர்கள் களத்தில் தங்கிப் பணியாற்றியதை அவர் அந்தத் தருணத்தில் நினைவு கூர்ந்தார்.
அரசியலை விட்டே போய்விடலாம்:
அதேபோல், முன்னதாக பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, கரூரில் 41 பேர் இறந்த நிலையில், அவர்களின் உறவினர்களை தன் வீட்டிற்கு அழைத்து ஆறுதல் கூறுகிறார். விஜய்யின் அழிச்சாட்டியத்தால் அரசியலை விட்டேபோய் விடலாம் என்பது போல் இருக்கிறது என்று கடுமையாக விமர்சித்திருந்தார். இந்நிலையில், இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜூவிடம், விஜய்யை விமர்சிப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
சகோதரர் விஜய்யை விமர்சனம் செய்ய வேண்டிய நிலை:
அதற்கு பதிலளித்த அவர், மக்கள் செல்வாக்கு பெற்ற யாராக இருந்தாலும், அரசியலுக்கு வரலாம். சகோதரர் விஜய் புதிதாக கட்சி தொடங்கி இருக்கிறார். அவர் அதிமுகவை விமர்சனம் செய்ததால் நாங்களும் அவரை விமர்சனம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. எம்ஜிஆர் அரசியலுக்கு வந்தபோது மக்களோடு மக்களாக நின்றார். மக்கள் துயரங்களில் பங்கெடுத்தார். மக்களுக்கான திட்டங்களை செய்தார். ஆனால் அவரோடு விஜயை ஒப்பிட முடியாது. அவர் அறைக்குள் இருந்து அரசியல் செய்கிறார்.
இதையும் படிக்க : பரந்தூர் விமான நிலையத்தால் சென்னைக்கு மிகப்பெரிய ஆபத்து? ஆராய்ச்சியாளர்கள் சொல்வதென்ன?
விஜய் நேரில் சென்றிருக்கலாம்:
கரூர் சம்பவத்தில் 41 உயிர்கள் பலியான போது கூட பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரில் வந்து அனுதாபம் தெரிவிக்க அவரால் முடியவில்லை. இது வினோதமாக இருக்கிறது. அவரை தமிழக மக்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள். அவர் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்க வந்திருக்க வேண்டும். தமிழக போலீசார் மீது நம்பிக்கை இல்லையென்றால், மத்திய போலீஸிடம் அனுமதி கேட்டு விஜய் கரூருக்கு நேரில் சென்றிருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.