பரந்தூர் விமான நிலையத்தால் சென்னைக்கு மிகப்பெரிய ஆபத்து? ஆராய்ச்சியாளர்கள் சொல்வதென்ன?
Parandur Airport: காஞ்சிபுரத்தில் பரந்தூர் பகுதியில் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கப்பட்டால் சென்னைக்கு வெள்ள பாதிப்பு ஏற்படும் என்றும், அந்த விமான நிலையம் அமைய உள்ள இடத்தில் 26.5 சதவீதம் நீர் நிலைகளாக இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர் .
காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூர் பகுதியில் ரூ.27,400 கோடியில் 2- ஆவது பசுமை வெளி விமான நிலையம் அமைப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்காக அந்த பகுதியில் உள்ள 11- க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், உவகை ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் விதுபாலா சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பரந்தூர் பகுதியில் பசுமை வெளி விமான நிலையம் அமைப்பதற்கு அந்தப் பகுதியில் வசித்து வரும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இந்த எதிர்ப்பை தொடர்ந்து கடந்த 2023- ஆம் ஆண்டு பரந்தூர் பகுதியில் விமான நிலையம் அமைப்பதற்கு ஏதுவான பகுதியா என்பது தொடர்பாக ஆய்வு ஆய்வு மேற்கொண்டு சாத்தியக்கூறு அறிக்கை தயார் செய்வதற்காக மச்சேந்திர நாதன் ஐஏஎஸ் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
பரந்தூர் பகுதியில் 26 சதவீதம் நீர் நிலை
இந்த குழு தயார் செய்த நீரியல் மற்றும் சுற்றுச்சூழல் சாத்தியக்கூறு அறிக்கைகள் தற்போது வரை பொதுமக்கள் முன்பு வெளியிடப்படவில்லை. இந்த அறிக்கை வெளியிடப்படுவதற்கு முன்பாகவே தமிழ்நாடு அரசு சுமார் 5,746 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்துவதற்கு அரசாணை பிறப்பித்திருந்தது. பரந்தூரில் பசுமை வெளி விமான நிலையம் அமைய உள்ள இடத்தில் பல வல்லுநர்கள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில், விமான நிலையம் அமைய உள்ள இடத்தில் 26.5 சதவீதம் நீர்நிலைகளாக இருப்பது தெரியவந்தது.
மேலும் படிக்க: வீட்டில் நடத்தப்பட்ட அதிரடி சோதனை..கிலோ கணக்கில் கடல் அட்டைகள்-குதிரைகள் பறிமுதல்..ராமநாதபுரத்தில் பரபரப்பு!




சென்னைக்கு மிகப் பெரிய வெள்ள பாதிப்பு
இது தொடர்பாக வெளியிடப்பட்ட தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்படவில்லை. எனவே, பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்பட்டால் சென்னை மாவட்டம் வெள்ள பாதிப்புக்குள்ளாக வாய்ப்பு உள்ளது. விமான நிலைய திட்டத்தில் போதிய நீரியல் ஆய்வுகள் இல்லாமல் இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, பரந்தூரில் பசுமை வெளி விமான நிலையம் அமைப்பதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்குவதையும், நில பயன்பாடு மாற்றத்தையும் உடனடியாக நிறுத்த வேண்டும். மேலும், மச்சேந்திரநாதன் ஐஏஎஸ் தலைமையிலான நிபுணர் குழு மேற்கொண்ட அறிக்கையை வெளியிட வேண்டும்.
விமான நிலைய திட்டத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும்
பசுமை வெளி விமான திட்டத்தில் மாற்று வழிகள் குறித்து மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்காக அந்தப் பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்கு, அந்தப் பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு குறிப்பிட்ட விவசாயிகளிடம் கையொப்பம் பெறப்பட்டு விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இது முறையாக மேற்கொள்ளப்படவில்லை என்று புகார் எழுந்திருந்தது. தற்போது, அந்த பகுதியில் 26 சதவீதம் நீர் நிலைகளாக இருக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க: காவல் நிலையத்தில் தந்தை-மகள் விஷம் குடித்த சம்பவம்..தென்காசியில் 3 காவலர்கள் சஸ்பெண்ட்…எஸ்.பி.மாதவன் அதிரடி உத்தரவு!