நேற்று முளைத்த காளான்! பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.. விஜய்க்கு பதிலடி கொடுத்த அமைச்சர் சேகர் பாபு!
Tamil Nadu CM Stalin's Delhi Visit: தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் புதுடெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொண்டது குறித்து, விஜய் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அமலாக்கத் துறையின் விசாரணைகளில் இருந்து தனது குடும்பத்தைக் காப்பாற்றவே ஸ்டாலின் மோடியைச் சந்தித்தார் என அவர் கூறினார். இதற்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்து, திமுகவின் நிலைப்பாட்டை விளக்கியுள்ளார். இந்த சர்ச்சை தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமலாக்க இயக்குநரகத்தின் (Enforcement Directorate) விசாரணைகளில் இருந்து தனது குடும்பத்தை பாதுகாக்க பிரதமர் நரேந்திர மோடியை (PM Narendra Modi) சந்திக்கவே, புதுடெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூடத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (Tamil Nadu CM MK Stalin) கலந்து கொண்டதாக தமிழ்நாடு வெற்றிக் கழக தலைவர் விஜய் கடுமையாக குற்றம் சாட்டினார். மேலும், அதிமுக மற்றும் பாஜக இடையேயான கூட்டணி மீண்டும் இணைந்தபோது, திமுக மற்றும் பாஜக இடையேயான மறைமுக கூட்டணி தற்போது வெளிப்பட்டது என்று தெரிவித்தார். தவெக தலைவர் விஜயின் கருத்திற்கு அமைச்சர் சேகர் பாபு பதிலடி கொடுத்துள்ளார்.
அமைச்சர் சேகர்பாபு:
டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றதை விமர்சனம் செய்த தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் கருத்திற்கு அமைச்சர் சேகர் பாபு பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சேகர்பாபு, “டெல்லியில் நடைபெற்று நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த ஆண்டு கலந்துகொண்ட பிறகு அளித்த விளக்கத்தில், தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய வரியை மறுக்கப்பட்டது தொடர்பாகவும், அதை வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தேன் என்று தெரிவித்தார். அதன்படி, எங்களுக்கு மடியில் கணம் இல்லை, வழியிலேயே பயம் இல்லை. மற்ற இயக்கத்தை போல் சுற்றி வந்து பின்புற வாசல் வழியாக பாஜகவுடன் கள்ள உறவு வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் திராவிட முன்னேற்ற கழகத்திற்கு இல்லை. அதேபோல், நேற்று முளைத்த காளான்களுக்கு எல்லாம் பதில் சொல்லவேண்டிய அவசியம் எங்களுக்கு கிடையாது.
முதலில் களத்திற்கு வரட்டும், அவர்கள் எந்த வகையில் அடிக்கிறார்களோ, அதைவிட 100 மடங்கு வேகமாக ஒரே அடியில் பிடரியை சிலிர்க்கும் வகையில் அடிப்பதற்கு திமுக தயாராக இருக்கிறது. ஏதோ ஒரு நாள் அறிக்கையில், ஏதோ ஒருநாள் ரோடு ஷோ செய்பவர் அல்ல எங்களது முதல்வர், அனுதினமும் மக்களை பற்றி மக்களுடன் பயணிக்கிறார். 2026ம் ஆண்டு மீண்டும் மக்கள் மகுடம் சூட்ட தயாராக இருக்கிறார்கள். இதுபோன்ற அறிக்கைகள் கற்பனை மணற்கோட்டையில் கரைந்துவிடும். இவை தகர்க்கப்படும், தகர்த்து எறியப்படும்.” என்று தெரிவித்தார்.
விஜய் குறிப்பிட்டது என்ன..?
விஜய் வெளியிட்ட அறிக்கையில், “ டாஸ்மாக்கில் அமலாக்கத் துறையால் தொடங்கப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புது டெல்லிக்கு பயணம் செய்தார். கடந்த 2024ம் ஆண்டு நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்றபோது, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதை தவிர்த்துவிட்டு, கலந்து கொள்ளாததற்கான காரணங்களை குறிப்பிட்டார். அதே காரணங்கள் இன்றுவரை உள்ளன. அப்படியானால் இந்த முறை அவர் ஏன் கலந்து கொண்டார்..? அமலாக்கத் துறையின் அழுத்தம்தான் காரணம்” என குறிப்பிட்டிருந்தார்.