Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சர்க்கரை ஆலை தொட்டியில் விழுந்து 2 தொழிலாளர்கள் பலி – சிவகங்கை அருகே சோகம்

Sugar Factory Tragedy : சிவகங்கையில் சர்க்கரை ஆலையில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த 2 தொழிலாளர்கள் எதிர்பாராத விதமாக சேமிப்பு தொட்டியில் விழுந்து உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொழிலாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் பாதுகாப்பு நடைமுறைகளை முறையாக கடைபிடிக்காததே அவர்களின் மரணத்துக்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சர்க்கரை ஆலை தொட்டியில் விழுந்து 2 தொழிலாளர்கள் பலி – சிவகங்கை அருகே சோகம்
சர்க்கரை ஆலை விபத்தில் பலியான தொழிலாளர்கள்
Karthikeyan S
Karthikeyan S | Published: 14 Jan 2026 21:08 PM IST

சிவகங்கை, ஜனவரி 14 : சிவகங்கை (Sivaganga) அருகே உள்ள படமாத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் சர்க்கரை ஆலையில் ஜனவரி 14, 2026 அன்று காலை நிகழ்ந்த  விபத்தில், சர்க்கரை ஆலை சேமிப்பு தொட்டியில் தவறி விழுந்து இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொழிலாளர்கள் பாதுகாப்பு தொடர்பான கேள்விகளை எழுப்பியுள்ளது. சிவகங்கை மாவட்டம் படமாத்தூர் பகுதியில் இயங்கும் அந்த சர்க்கரை ஆலையில் கடந்த 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் தேதி கரும்பு அரைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. கரும்பிலிருந்து சர்க்கரை தயாரிக்கும் போது கிடைக்கும் மொலாசஸ், பின்னர் மதுபான உற்பத்தி நிலையங்களுக்கு அனுப்பப்படுவதற்காக பெரிய தொட்டிகளில் சேமிக்கப்படும்.

சர்க்கரை ஆலையில் சேமிப்பு தொட்டியில் விழுந்து இருவர் பலி

இந்நிலையில், ஜனவரி 14, 2026 இன்று அந்த மொலாசஸ் சேமிப்பு தொட்டிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது பராமரிப்பு பணிகள் நடைபெற்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக இரண்டு தொழிலாளர்கள் தொட்டிக்குள் தவறி விழுந்தனர். தொட்டிக்குள் இருந்த திரவத்தின் அடர்த்தி மற்றும் ஆழம் காரணமாக இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதுதொடர்பாக காவல்துறை தவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்துக்கு வந்த அவர்கள் இருவரின் உடல்களையும் மீட்டு, உடற்கூறாய்விற்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிக்க : தமிழகத்தில் இனி மழை இருக்காது.. அதிகாலையில் பனிமூட்டம் இருக்கும் – வானிலை ரிப்போர்ட்..

உயிரிழந்தவர்கள் சிவகங்கை அருகே கரும்பாவூர் பகுதியைச் சேர்ந்த 35 வயதாகும் மோகனசுந்தரம் மற்றும் சிவகங்கை–மதுரை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் வசித்து வந்த 59 வயதாகும் பொன்னழகு  என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து திருப்பாச்சேத்தி காவல் நிலைய காவலர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆலை நிர்வாகம் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு நடைமுறைகளை முறையாக பின்பற்றப்பட்டதா?, பணியின்போது பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டதா, உரிய பயிற்சி அளிக்கப்பட்டதா உள்ளிட்ட அம்சங்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  இதனிடையே, உயிரிழந்த தொழிலாளர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள், பாதுகாப்பு ஏற்பாடுகளில் அலட்சியம் காட்டியதே இந்த உயிரிழப்புகளுக்குக் காரணம் என குற்றம்சாட்டியுள்ளனர்.

இதையும் படிக்க : சென்னை வாசிகளே…பொங்கல் விடுமுறைக்கு இங்க போங்க…செம என்ஜாய்மெண்ட்டா இருக்கும்!

சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி, இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க அரசு மற்றும் ஆலை நிர்வாகம் முன்வர வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த துயர சம்பவம், தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களின் பாதுகாப்பு நடைமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டிய அவசியத்தை மீண்டும் வலியுறுத்துகிறது.