சிறுவனை ஆட்டோவில் கடத்தி பணம் பறிப்பு – சென்னையில் பரபரப்பு – வெளியான அதிர்ச்சி தகவல்

Chennai Kidnapping Case : சென்னையில் 15 வயது சிறுவனை கடத்தி பணம் மற்றும் வாட்ச் ஆகியவற்றை பறித்த சம்பவத்தில், ஆட்டோ ஓட்டுநர் உட்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

சிறுவனை ஆட்டோவில் கடத்தி பணம் பறிப்பு - சென்னையில் பரபரப்பு - வெளியான அதிர்ச்சி தகவல்

மாதிரி புகைப்படம்

Published: 

30 Jan 2026 21:03 PM

 IST

சென்னை, ஜனவரி 30 : சென்னையில் (Chennai) 15 வயது சிறுவனை கடத்தி பணம் மற்றும் வாட்ச் ஆகியவற்றை பறித்த சம்பவத்தில், ஆட்டோ ஓட்டுநர் உட்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம், திருவானைக்காவல் கிராமம், மெட்டு தெருவைச் சேர்ந்த 15 வயது சிறுவன், ஸ்ரீரங்கத்தில் உள்ள பள்ளியில் அர்ச்சகர் பயிற்சி முடித்து, தற்போது சென்னையின் தாம்பரம் பகுதியில் அர்ச்சகர் பணிகளுக்கு உதவியாக இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஜனவரி 28, 2026 அன்று இரவு, வீட்டிற்குச் செல்ல தாம்பரம் பேருந்து நிலையத்தில் சிறிய பையுடன் காத்திருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு ஆட்டோவில் ஏறியுள்ளார். அந்த ஆட்டோவில் ஓட்டுநருடன் அவரது நண்பரும் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சிறுவன் ஆட்டோவில் ஏறியதும், ஓட்டுநர் வேகமாக வண்டியை ஓட்டிச் சென்று, பெருங்களத்தூர் அருகே உள்ள நெடுங்குன்றம் என்ற ஆள்நடமாட்டம் குறைவான பகுதியில் நிறுத்தியுள்ளார். அங்கு ஆட்டோ ஓட்டுநரும் அவரது நண்பரும், சிறுவனிடம் கஞ்சா வழக்கில் போலீசில் ஒப்படைப்பேன் என மிரட்டி, சிறுவனிடமிருந்த ரூ.12,500 பணமும், ரூ.3,000 மதிப்புள்ள வாட்ச்சையும் பறித்துள்ளனர். பின்னர், பறித்த பணத்தில் இருந்து ரூ.250 மட்டும் கொடுத்து பாதுகாப்பாக செல்லுமாறு கூறிவிட்டு இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இதையும் படிக்க : பிப்.5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்…இடைக்கால பட்ஜெட் குறித்து ஆலோசனை?

இதனையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுவன் தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், போலீசார் தாம்பரம் பேருந்து நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, குற்றவாளிகள் பயன்படுத்திய ஆட்டோவின் பதிவு எண்ணை கண்டறிந்தனர். விசாரணையில், அந்த ஆட்டோ கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த 22 வயதாகும் சூர்யா என்பவருடையது என்பது தெரியவந்தது.

தொடர்ந்து, தாம்பரம் போலீசார் சூர்யாவின் வீட்டிற்குச் சென்று விசாரணை நடத்தியபோது, அவர் சித்லபாக்கம் பகுதியில் இருப்பது தெரிய வந்தது. உடனடியாக அங்கு சென்ற போலீசார், சூர்யாவையும், அவருடன் இருந்த அவரது நண்பர் ஸ்ரீராம் நகர் பகுதியைச் சேர்ந்த சேது என்பவரையும் கைது செய்தனர். தாம்பரம் காவல் நிலையத்தில் நடைபெற்ற விசாரணையில், சூர்யாவுக்கு ஏற்கனவே போக்சோ வழக்கு மற்றும் திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும், சேதுவுக்கு திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. பணத் தேவை ஏற்பட்ட போதெல்லாம் இருவரும் சிறு திருட்டுகளில் ஈடுபட்டு வந்ததாகவும் அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

இதையும் படிக்க : சென்னையில் அதிகாலையில் பயங்கரம்…தொழிலதிபர் வீட்டில் 4 பேரை கட்டிப்போட்டு நகை-பணம் கொள்ளை!

மேலும், சம்பவம் நடந்த அன்று இருவரும் கஞ்சா போதையில் இருந்ததாகவும், போதை காரணமாக தவறு செய்துவிட்டதாகவும், இனிமேல் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபட மாட்டோம் எனவும் போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, போலீசார் அவர்களிடமிருந்து சிறுவனின் வாட்ச், ரூ.10,000 பணம் மற்றும் குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், அவர்களை சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம், சென்னையில் பொதுமக்கள் பாதுகாப்பு குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது.

14 நாட்களிலேயே ஓடிடியில் வெளியான கார்த்தியின் வா வாத்தியார் திரைப்படம்
எங்கள் எதிர்வினை வருத்தத்துகுரியதாக இருக்கும்.... ஈரான் அரசு எச்சரிக்கை
மோகன்லாலின் எல்367 படத்துக்கும் துரந்தர் படத்துக்கும் உள்ள தொடர்பு?
குட்டி யானையின் பிறந்த நாளை கேக் வெட்டிக்கொண்டாடிய நபர் - வைரலாகும் வீடியோ