2026 சட்டமன்ற தேர்தலுக்கு பொது சின்னம் கோரி தவெக மனு.. உடனடியாக சின்னம் ஒதுக்க கோரிக்கை!
TVK Seeks Election Symbol for 2026 Election | சரியாக இன்னும் 6 மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மொத்தமுள்ள 234 தொகுதிகளிலும் போட்டியிட தவெக திட்டமிட்டுள்ள நிலையில், பொது சின்னம் கோரி இந்திய தேர்தல் ஆணையத்திடம் மனு வழங்கியுள்ளது.

தவெக தலைவர் விஜய்
சென்னை, நவம்பர் 11 : தமிழகத்தில் (Tamil Nadu) இன்னும் ஒருசில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் (Assembly Election) நடைபெற உள்ளது. இதற்காக கட்சிகள் தீவிர பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK – Tamilaga Vetri Kazhagam) தனது முதல் தேர்தலை சந்திக்க உள்ளது. இந்த நிலையில், முதல் தேர்தலை சந்திக்க தவெக தீவிரமாக தயாராகி வருகிறது. அந்த வகையில், 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான சின்னம் பெறும் நடவடிக்கையில் அந்த கட்சி தலைவர் விஜய் ஈடுபட்டுள்ளார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சட்டமன்ற தேர்தலில் போட்டியிட சின்னம் கோரும் தவெக
சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் பதிவு செய்யப்பட்ட கட்சிகள் தேர்தலுக்கு 6 மாதங்களுக்கு முன்னதாக சின்னம் பெறுவதற்கு தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பிக்கலாம். இந்த நிலையில், தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் அந்த நடவடிக்கையில் தற்போது இறங்கியுள்ளார். அதாவது, தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் பொது சின்னம் அளிக்க கோரி இந்திய தேர்தல் ஆணையத்திடம் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : கன்னியாகுமரியில் சுற்றித் திரிந்த 2 சிறுமிகள்.. பத்திரமாக மீட்ட போலீசார்!
குழுவாக சென்று மனு வழங்கிய தவெகவினர்
தவெகவுக்கு பொது சின்னம் கோரி அந்த கட்சியின் இணை பொதுச்செயலாளர் சி.டி.நிர்மல் குமார், மாநில நிர்வாகி புஷ்பவனம் குப்புசாமி, அர்ஜுனமூர்த்தி, விஜயபிரபாகரன் ஆகியோர் டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையர் அலுவலகத்திற்கு நேரில் சென்று இந்த மனுவை வழங்கியுள்ளனர். அந்த மனுவில் மொத்தம் 10 விருப்ப சின்னங்களை தவெக பட்டியலிட்டு சமர்ப்பித்துள்ளது.
இதையும் படிங்க : டெல்லி குண்டுவெடிப்பு எதிரொலி.. சென்னையில் பலத்த பாதுகாப்பு!
உடனடியாக சின்னம் ஒதுக்க கோரிக்கை
2026 தமிநாடு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் மொத்தமுள்ள 234 தொகுதிகளிலும் போட்டியிட உள்ள நிலையில், உடனடியாக பொது சின்னம் ஒதுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கட்சிகளுக்கான சின்னம் ஒதுக்கீடு செய்வது குறித்து 2025, டிசம்பர் இறுதிக்குள் முடிவு எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தவெகவுக்கு வரும் தேர்தலை எதிர்க்கொள்ள கடும் சவாலாக அமைந்துள்ளது. கரூர் சம்பத்தால் தவெக சற்று ஸ்தம்பித்த நிலையில், சட்டமன்ற தேர்தலை சந்திக்க கட்சியை அதன் தலைவர் விஜய் முழு வீச்சில் தயார் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.