விஜய் பரப்புரையில் விதிமீறல்.. தவெக நிர்வாகிகள் மீது திருச்சி காவல்துறை வழக்குப்பதிவு!
TVK Vijay Campaign : திருச்சியில் நடந்த தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரச்சாரத்தில் விதிமீறல்கள் நடந்ததாக கூறி, தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பொது சொத்து மற்றும் தனியார் சொத்துகளை சேதப்படுத்தியதற்காக அவர் மீது திருச்சி போலீசார், ஸ்ரீரங்கம் போலீசார், காந்தி மார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தவெக தலைவர் விஜய் பரப்புரை
திருச்சி, செப்டம்பர் 15 : திருச்சி மாவட்டத்தில் நடந்த தமிழக வெற்றிக் கழக பரப்புரையின்போது (TVK Vijay Camapaign) விதிமீறில் தொடர்பாக தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பொது சொத்தை சேதப்படுத்தியதாக, தவெக நிர்வாகிகள் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை தொடங்கியுள்ளார். சட்டப்பேரவை தேர்தலையொட்டி, தமிழகம் முழுவதும் தனது சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார். முதற்கட்டமாக 2025 செப்டம்பர் 13ஆம் தேதி திருச்சி மாவட்டத்தில் இருந்து தனது சுற்றுப் பயணத்தை தொடங்கினார். திருச்சியில் இருந்து தொடங்கிய விஜய், தொடர்ந்து டிசம்பர் மாதம் வரை சனி, ஞாயிறு கிழமைகளில் மட்டும் மக்கள் சந்திப்பை நடத்துகிறார்.
திருச்சியில் நடந்த பரப்புரையின்போது திருச்சி நகரம் முழுவதும் தவெக தொண்டர்களாக சூழ்ந்திருந்தனர். விமான நிலையத்தில் இருந்து மரக்கடை செல்வதற்கு கிட்டதட்ட 5 மணி நேரத்திற்கு மேல் ஆனது. காலை 11 மணியளவில் திருச்சி சென்ற விஜய், மதியம் 2 மணிக்கு மரக்கடை சென்றார். அப்போது, சாலை முழுவதும் தொண்டர்கள் , பொதுமக்களும் திரண்டனர். மேலும், சாலைகளில் இருந்து தடுப்புகள் போன்றவற்றையும் அவர்கள் சேதப்படுத்தினர். மேலும், விஜய்யை காண்பதற்கான சுவர்கள், மரங்கள் போன்றவற்றில் ஏறியுள்ளனர்.
Also Read : விஜயின் பெரம்பலூர் பரப்புரை ரத்து.. அப்செட்டில் தொண்டர்கள்… காரணம் என்ன?
தவெக நிர்வாகிகள் மீது திருச்சி காவல்துறை வழக்குப்பதிவு
தொண்டர்களின் கூட்டம் அதிகமாக இருந்ததால், விஜயால் திட்டமிட்ட நேரத்தில் பரப்புரை மேற்கொள்ள முடியவில்லை. திருச்சியை தொடர்ந்து, அரியலூர் நோக்கி புறப்பட்டார். அங்கும் விஜயை காண லட்சக்கணக்கான தொண்டர்கள் கூடி இருந்தனர். அரியலூர் செல்ல விஜய்க்கு 8 மணி ஆனது. பின்னர், அங்கிருந்து பெரம்பலூர் செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், ஆனால், 12 மணி ஆனதால் தனது பெரம்பலூர் பயணத்தை ரத்து செய்துவிட்டு சென்னை புறப்பட்டார்.
இந்த நிலையில் தான், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சி பரப்புரையின்போது பொது சொத்தை சேதப்படுத்தியதற்காக தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சி தவெக தெற்கு மாவட்ட தலைவர் கரிகாலன், மாநில வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி ஆதித்ய சோழன், தெற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி இமய தமிழன், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் விக்னேஷ் குமார், மகளிர் அணி மாவட்ட தலைவர் துளசிமணி மற்றும் சில மீது பொது மற்றும் தனியார் சொத்துகளை சேதப்படுத்தியதற்காக திருச்சி கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Also Read : பெண்கள் பாதுகாப்பில் நோ காம்பிரமைஸ் – அரியலூரில் த.வெ.க தலைவர் விஜய் பரப்புரை..
மேலும், காந்தி மார்க்கெட் போலீசார் பாரதிய நியாய சன்ஹிதாவின் 324 (5) (சொத்து சேதம் மற்றும் 296 (b) (துஷ்பிரயோகம்) பிரிவுகளின் கீழ்
ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கத்தில் ஆறு இடங்களில் சட்டவிரோதமாக பேனர் அமைத்தற்காக, ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். திருச்சி டிவிகே பிரிவைச் சேர்ந்த விஜய் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நகர காவல்துறை விதித்த 23 நிபந்தனைகளையும் மீறியதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதனை அடுத்து, வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக கூறினர்.