விஜய் பரப்புரையில் நடந்தது என்ன? கூட்ட நெரிசலுக்கு காரணம் இதுவா.. டிஜிபி விளக்கம்!
TVK Vijay Rally Stampede : தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பரப்புரையின்போது, ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தனர். இந்த மேலும் பலர் மருத்துவமனைகளில் ஆபத்தான நிலையில் உள்ளனர். கூட்ட நெரிசல் எப்படி ஏற்பட்டது என்பது குறித்து பொறுப்பு டிஜிபி வெங்கடன்ராமன் விளக்கம் அளித்துள்ளார்.

தவெக பரப்புரையில் கூட்ட நெரிசல்
கரூர், செப்டம்பர் 28 : கரூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழக பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தது ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கியுள்ளது. மேலும், கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயம் அடைந்த 50க்கும் மேற்பட்டோர் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டு இருக்கிறது. இதற்கிடையில், முதல்வர் ஸ்டாலின் கரூர் சென்று பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்தார். அதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சமும் நிவாரணமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணமும் அறிவித்திருக்கிறார். இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழக பரப்புரையில் என்ன நடந்தது? கூட்ட நெரிசலுக்கு காரணம் என்ன என்பது குறித்து பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அவர் பேசுகையில், “தவெகவினர் முதலில் கரூர் லைட்ஹவுஸ் ரவுண்டானா, உழவர் சந்தை ஆகிய இடங்களில் பரப்புரைக்கு அனுமதி கேட்டனர். இந்த இடங்களில் 10,000 பேருக்கு அனுமதி கேட்டனர். இந்த இரண்டு இடம் குறுகிய இடம். ஏற்கனவே, தவெக சார்பில் நடந்த பரப்புரையில் கூடிய கூட்டத்தை கருத்தில் கொண்டு, அந்த இடம் போதாது என்று கூறினோம். அதற்கு ஏற்ப, தற்போதைய இடமான வேலுச்சாமிபுரம் கொடுக்கப்பட்டது. இந்த இடத்தில் தான் இரண்டு நாட்களுக்கு முன்பு பெரிய கட்சி பரப்புரை செய்தது. பரப்புரைக்கு 10 ஆயிரம் பேர் வருவார்கள் என தவெகவினர் அனுமதி கடிதத்தில் குறிப்பிட்டனர். ஆனால், கரூரில் நடந்த பரப்புரையில் 27,000 பேர் வந்தார்கள்.
Also Read : கரூர் துயரம்.. த.வெ.க மாவட்ட செயலாளர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..
பொறுப்பு டிஜிபி விளக்கம்
கரூர் பரப்புரையின்போது 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அந்த இடம் குறுகலான இடம் என்பதால், போலீசாரை அதிக அளவில் கூட்டவில்லை. 500 பேரை போதுமானதாக இருந்தது. இந்த கட்டத்தில் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை. தவெக விஜய் கரூர் பரப்புரைக்கு பிற்பகல் 3 மணி முதல் 5 மணி வரை வருவதாக சொல்லப்பட்டு இருந்தது. அதற்கு தான் அனுமதியும் வழங்கப்பட்டு இருந்தது.
ஆனால், அவர் இரவு 7 மணிக்கு தான் கரூர் வந்தடைந்தார். தவெக தரப்பில் விஜய் நண்பகலில் வருவார் என கூறப்பட்டதால் காலை 11 மணி முதலே அங்கு கூட்டம் கூடியது. மக்கள் போதுமான தண்ணீர் அல்லது சிற்றுண்டி இல்லாமல் கடுமையான வெப்பத்தில் மணிக்கணக்கில் காத்திருந்தனர். விஜய் வருவதற்கு முன்பே பலரும் சோர்வடைந்தனர். கூட்ட நெரிசலுக்கான காரணத்தை ஆணையம் விசாரிக்கும். அது தொடர்பாக கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாது” என்று கூறினார்.
Also Read : விஜய் கைது செய்யப்படுவாரா? முதல்வர் ஸ்டாலின் சொன்ன பதில்!
கூட்ட நெரிசல் ஏற்பட்டது எப்படி?
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் 2025 செப்டம்பர் 27ஆம் தேதி கரூர், நாமக்கல் பரப்புரை மேற்கொண்டார். இதற்காக காலை 8:45 மணிக்கு நாமக்கல்லில் பேச அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் சென்னையில் இருந்து கிளம்பியதே, காலை 8.30 மணிக்கு தான். பின்னர், சென்னையில் இருந்து திருச்சிக்கு 9.30 மணிக்கு நாமக்கல் புறப்பட்டார். அதன்பிறகு, அவர் 2.45 மணி நாமக்கல்லில் பரப்புரை மேற்கொண்டார். திட்டமிட்ட நேரத்தை விட ஆறு மணி நேரம் தாமதமாக பரப்புரை செய்தார். இதனால், அதிகாலையில் இருந்தே ரசிகர்கள் தண்ணீர், இருப்பிடம் இல்லாமல் வெயிலில் காத்திருந்தனர்.
விஜய் பிற்பகல் 3:45 மணியளவில் கரூர் நோக்கிப் புறப்பட்டதாகக் கூறப்படுகிறது. வழிநெடுக்கிலும் தொண்டர்கள் இருந்ததால், மாலை 6.30 மணிக்கு தான் கரூருக்கு சென்றடைந்தார். மாலை 3 முதல் மாலை 5 மணிக்கு விஜய் வருவதாக இருந்த நிலையில், கரூரிலும் தாமதமானது. இதனால், பல மணி நேரம் காத்திருந்த மக்கள் சோர்வடைந்தனர்.
கூட்ட நெரிசலுக்கு நேரடியாக வழிவகுத்த முக்கியமான தவறு, விஜயின் 60 அடி பரப்புரை பேருந்தை 100 அடி அகலமுள்ள சாலையில் நுழைய அனுமதித்தது. 100 அடி சாலையில் விஜய்யின் வாகனம் நுழைந்தது கூட்ட நெரிசலுக்கு வழிவகுத்ததாக தெரிகிறது. இதனால், விஜய் பேசிக் கொண்டிருக்கும்போதே மயக்க மடைந்து, ஒருவர் மீது ஒருவர் விழுத் தொடங்கினர். இதுவே பலி எண்ணிக்கை உயர்ந்ததற்கு காரணமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.