Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கரூரில் நடந்த துயரம்.. இன்று கடையடைப்பு – வணிகர் சங்கம் அறிவிப்பு..

Karur Stampede: கரூர் மாவட்டத்தில் செப்டம்பர் 27, 2025 தேதியான நேற்று நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தில் கூட்ட் நெரிசல் ஏற்பட்டு 38 பேர் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது. இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் இருக்கும் கடைகள் முழுவதுமாக அடைக்கப்படுவதாக வணிகர் சங்கம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கரூரில் நடந்த துயரம்.. இன்று கடையடைப்பு – வணிகர் சங்கம் அறிவிப்பு..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 28 Sep 2025 06:15 AM IST

கரூர், செப்டம்பர் 28, 2025: கரூர் மாவட்டத்தில் இன்று, அதாவது செப்டம்பர் 28, 2025, கடைகளும் அடைக்கப்படுவதாக வணிகர் சங்கம் அறிவித்துள்ளது. தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பிரச்சார நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் 38 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், வாரம் தோறும் சனிக்கிழமைகளில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று மக்களை சந்தித்து உரையாற்றி வருகிறார். இந்த பிரச்சாரப் பயணம் செப்டம்பர் 13, 2025 அன்று தொடங்கியது. இதுவரை அவர் திருச்சி, அரியலூர், நாகை, திருவாரூர், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.

கட்டுக்கடங்காத கூட்டம்:

நிகழ்ச்சிகள் பெரும்பாலும் குறிப்பிட்ட நேரத்துக்கும் மிகுந்த தாமதமாக தொடங்குவதால், மக்கள் பல மணி நேரங்கள் வெயிலில் உணவின்றி, தண்ணீரின்றி காத்திருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. காவல்துறை பல நிபந்தனைகள் விதித்திருந்தாலும், கூட்ட நெரிசல் காரணமாக அவை நடைமுறையில் பின்பற்றப்படவில்லை என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க: இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன் – தமிழக வெற்றிக் கழக தலைவர் இரங்கல்..

செப்டம்பர் 27 – நாமக்கல் மற்றும் கரூரில் ஏற்பட்ட அவலம்:

செப்டம்பர் 27, 2025 அன்று நாமக்கல்லில் நடைபெற்ற விஜய் பிரச்சாரம் 7 மணி நேர தாமதத்திற்கு பின் தொடங்கியது. அங்கு வெயிலால் தளர்ச்சி அடைந்த 15 பேர் மயங்கி விழுந்தனர். பின்னர் இரவு 8 மணியளவில் கரூர் சென்றடைந்த விஜய் அங்கு உரையாற்றினார்.

மேலும் படிக்க: கரூர் கூட்ட நெரிசல்.. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு..

கரூரிலும் விஜய் உரையாற்றும் போதே சிலர் மயங்கி விழுந்தனர்; அவர்களுக்கு உடனடியாக மருத்துவ உதவி வழங்கப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் நீண்ட நேரம் சிக்கித் தவித்த நிலையில், விஜய் உரை முடித்து புறப்பட்டபின் மக்கள் வெளியேற முயன்றபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 38 பேர் உயிரிழந்துள்ளனர், அதில் 8 குழந்தைகளும் அடங்குவர். இந்த துயரச்சம்பவம், நாட்டையே அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

முழு கடை அடைப்பு:

கரூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய கடைகள் அனைத்தும் இன்று ஒரு நாள் அடைக்கப்படும் என வணிகர் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, கரூர் மாவட்ட வணிகர் சங்கம் சார்பில், “உயிரிழந்த 38 பேரின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், இன்று கரூர் மாவட்டம் முழுவதும் கடைகள் ஒரு நாள் முழுவதும் அடைக்கப்படும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.