Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

எடப்பாடி பழனிசாமி என்னை பார்க்க தயங்குவார்… முதல்வராக்கியது நாங்கள் தான் – டிடிவி தினகரன் விமர்சனம்

Dhinakaran Targets EPS: அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் டிடிவி தினகரன், தான் மற்றும் சசிகலாவின் ஆதரவால் தான் எடப்பாடி பழனிசாமி முதல்வரானார் என பேசியுள்ளார். மேலும் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி என்னை பார்க்க தயங்குவார்… முதல்வராக்கியது நாங்கள் தான் – டிடிவி தினகரன் விமர்சனம்
எடப்பாடி பழனிசாமி - டிடிவி தினகரன்
Karthikeyan S
Karthikeyan S | Published: 18 Sep 2025 21:15 PM IST

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், எடப்பாடி பழனிசாமி (Edappadi K Palaniswami) முதல்வராக அமர்ந்தது தான் மற்றும் சசிகலா எடுத்த முடிவின் விளைவுதான் எனக் கூறியுள்ளார். சென்னை திருவல்லிக்கேணியில் செப்டம்பர் 18, 2025 அன்று நிருபர்களை சந்தித்தார். அப்போது பேசிய  அவர், “பழனிசாமி இன்று காட்டிக்கொள்கிற முகம் பொய்.  கடந்த 2017 ஆம் ஆண்டு  சசிகலா சிறைக்கு சென்றபின், அவரின் அறிவுறுத்தலின் பேரில் பழனிசாமியை முதல்வராக்கியது நாங்கள் தான். அப்போது பல எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள் விலகத் தயாராக இருந்த சூழலில் அவரை காப்பாற்றியவர்களும் நாங்கள் தான்,” என்றார்.

எங்களுடைய ஆதரவால் தான் எடப்பாடி பழனிசாமி முதல்வரானார்

மேலும் அவர், “நான் பதவி விரும்பியிருந்தால், ஜெயலலிதா காலத்திலேயே பல உயர்ந்த பொறுப்புகளை பெற்றிருப்பேன். ஆனால் நான் அந்த வழியைத் தேர்ந்தெடுக்கவில்லை. பழனிசாமி இன்று முதல்வராக இருந்தது எங்களுடைய ஆதரவால் தான். இன்று எனை சந்திக்க கூட அவர் தயங்குகிறார். உண்மையில் அவரின் அரசியல் நிலையை காப்பாற்றியது நாங்கள் தான்,” என்று கூறினார். இதனையடுத்து டிடிவி தினகரனின் இந்தக் கருத்துக்கள், ஏற்கனவே அதிமுக மற்றும் அமமுக இடையேயான அரசியல் பதட்டத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன.

இதையும் படிக்க : ‘இனி முகமூடியார் பழனிசாமி என அழைக்கனும்’ டிடிவி தினகரன் விமர்சனம்!

டிடிவி தினகரன் கடும் விமர்சனம்

முன்னதாக டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி, உள்துறை அமைச்சர் அமித் ஷா சந்தித்தார். இந்த சந்திப்பு சுமார் 40 நிமிடங்கள் நடந்ததாக கூறப்படுகிறது.  பின்னர் அவர் கைகுட்டையால் தனது முகத்தை மூடியபடி காரில் சென்றதாக வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அரசியல் அரங்கில் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.  இதுகுறித்து கருத்து தெரிவித்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்,   மன்னர்கள் சாதனை செய்தால், சாதனை மன்னர் என அழைக்க வேண்டும் . அது போல அண்ணன் பழனிசாமியை முகமூடி பழனிச்சாமி என அழைக்க வேண்டும் என்று விமர்சித்திருந்தார்.

கடந்த 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் இன்னும் ஏழு மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், அதிமுக-பாஜக கூட்டணி பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.  இதற்கிடையில், அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன், கட்சியிலிருந்து விலகியவர்களை மீண்டும் ஒருங்கிணைக்க வேண்டும் எனக் கோரியிருந்தார். ஆனால், இதற்கு பத்து நாள் அவகாசம் நிர்ணயித்த எடப்பாடி பழனிசாமி, பின்னர் செங்கோட்டையனையும் அவரது ஆதரவாளர்களையும் கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கினார்.

 இதையும் படிக்க : அமித்ஷாவுடன் ஆலோசனை.. முகத்தை மூடிக்கொண்டு சென்றாரா இபிஎஸ்? – அதிமுக விளக்கம்!

இதையடுத்து, செங்கோட்டையன் டெல்லி பயணம் மேற்கொண்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார். அவர் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக தலைவர் டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரை மீண்டும் கட்சியில் சேர்க்க முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.