SIR-ஐ பார்த்து திமுக பயப்படுவது ஏன்? டிடிவி தினகரன் சரமாரி கேள்வி!
TTV dhinakaran praises SIR: தலைமைத் தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் SIR (Special Intensive Revision) செயல்பாட்டில் என்ன தவறு நடந்துவிடும் என டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். அதேசமயம் அனைத்துக் கட்சி கூட்டத்தில் SIR நிறுத்தப்படாவிட்டால், உச்சநீதிமன்றத்தில் முறையிடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி, நவம்பர் 02: தமிழ்நாட்டில் திமுக ஆளுங்கட்சியாக உள்ள நிலையில், எதற்காக SIR (Special Intensive Revision) திட்டத்தை பார்த்து பயப்படுகிறது? என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், நீக்குவது தொடர்பான அறிவிப்பு வரவேற்கத்தக்கது என்றும் அவர் தெரிவித்துள்ளார். பாஜக கூட்டணியில் இருந்து விலகியபோதும், அவர் SIRக்கு ஆதரவாக கருத்து கூறியுள்ளது, மீண்டும் அவர் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் இணைவார் என்பதை காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். முன்னதாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் SIRக்கு எதிராக இன்று நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு டிடிவி தினகனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும், அவர் அந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்ககது.
மேலும் படிக்க: வாக்காளர் சிறப்பு திருத்தம்.. தீர்மானம் நிறைவேற்றாதது ஏன்? – தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கண்டனம்..
தமிழகத்தில் எதிர்வரும் 2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பது தொடர்பாக நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றன. அந்தவகையில், இந்த தேர்தலை அதிமுக மற்றும் பாஜக இணைந்து எதிர்கொள்ளும் என முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் கடந்த மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைத்திருந்த அமமுக, அந்த கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தது. தங்களுக்கு கூட்டணியில் உரிய மரியாதை கிடைக்கவில்லை என்றும் இதற்கு காரணமாக கூறியிருந்தார்.
திமுக எதற்காக அஞ்சுகிறது?
இந்நிலையில், இன்று திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், SIRக்கு (Special Intensive Revision) ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் SIR நடவடிக்கையில் திமுக எதற்காக அஞ்சுகிறது? என்ன தவறு நடக்கப்போகிறது என்று பயப்படுகிறார்கள்? என்று கேள்வி எழுப்பிய அவர், தமிழகத்தில் தற்போது திமுக ஆட்சி தான் நடப்பதாகவும் அப்படியிருக்க, தில்லுமுல்லு செய்ய யாரால் முடியும்? என்றும் வினவினார்.
இந்த சிறப்பு வாக்காளர் திருத்த நடவடிக்கையில் பணிபுரிவது தமிழக அரசின் அதிகாரிகள் தான். அவர்கள் திமுக ஆட்சிக்குட்பட்ட அதிகாரிகள். எனவே, ஏதாவது தவறு நடந்துவிடும் என்று திமுக அஞ்சுவது நியாயமல்ல என்றும் விளக்கமளித்தார். இதனால் தான், தான் அந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்றும், திமுக அரசு தங்கள் மீது நம்பிக்கை இல்லாதது போல நடப்பதாகவும் சாடினார்.
மேலும் படிக்க: கரையானை போல் இபிஎஸ் அதிமுகவை அரித்துக்கொண்டிருக்கிறார்: சேகர் பாபு விளாசல்!
குழப்பம் ஏற்படுத்தும் திமுக:
மேலும், திமுக அரசு தங்களது குறைகளை மறைக்க SIR நடவடிக்கையை அரசியல் கருவியாக பயன்படுத்தி வருகிறது. இதனால் தமிழக மக்கள் குழப்பமடைவதாகவும் அவர் விமர்சித்துள்ளார். முன்னதாக, இன்று காலை நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் அழைப்பு விடுக்கப்பட்டும், தவெக, நாம் தமிழர், தமிழ் மாநில காங்கிரஸ், அமமுக, இந்திய ஜனநாயக கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்தன.



