அதிமுக – பாஜக கூட்டணியில் இணைகிறதா அமமுக? டிடிவி தினகரன் பரபரப்பு விளக்கம்!
TTV Dhinakaran Explains AIADMK BJP Alliance : அதிமுக - பாஜக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இணைவது குறித்தும் தொகுதி பங்கீடு குறித்து அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் விளக்கம் அளித்துள்ளார்.

தேஜ கூட்டணி குறித்து டிடிவி விளக்கம்
இது தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 2026 சட்டமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தவிர்த்து விட்டு எந்த கட்சியாலும் வெற்றி பெற முடியாது. தேசிய ஜனநாயக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இணைந்து விட்டதாகவும், அமமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கி விட்டதாகவும் தவறான தகவல் பரப்பப்படுகிறது. அந்த தகவலை யார் பரப்புகிறார்கள் என்று எனக்கு தெரியும். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்று நினைத்தோமோ, அவர்கள் ஆட்சிக்கு வரவில்லை. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் கிட்டத்தட்ட 200 தொகுதிகளில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்டமைப்புடன் உள்ளது.
அமமுகவுக்கு வாக்கு வங்கி அதிகரிப்பு
இதில், பல மாவட்டங்களில் வாக்கு வங்கி அதிகரித்துள்ளது. அதேபோல இந்த கட்சியை தவிர்த்து விட்டு வேறு எந்த கட்சியின் ஆட்சி அமைக்க முடியாது என்ற நிலையும் உருவாகி உள்ளது. அந்த வகையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு எது நல்லதோ, அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பேன். சில கட்சிகள் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை தங்கள் கூட்டணியில் இணைக்க வலியுறுத்தி பேச்சு வார்த்தை நடத்தி வருவது உண்மையா ஆகும்.
மேலும் படிக்க: தென்காசி-தூத்துக்குடியைச் சேர்ந்தவர்களை கடத்தி சென்ற தீவிரவாதிகள்…பரபரப்பு பின்னணி!
அமமுக கூட்டணி குறித்த நிலைப்பாடு
தேர்தலுக்காக மட்டுமின்றி அதன் பின்னரும் அம்மா முன்னேற்ற கழகம் இருக்க வேண்டும். வெற்றி, தோல்விகளை தாண்டி கொள்கை மற்றும் லட்சியங்களுக்காக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் நீடித்து இருக்க வேண்டும். தமிழ்நாட்டின் நலன் கருதியும், கட்சியின் நலன் கருதியும் எந்த கூட்டணியில் இணையப் போகிறோம் என்பதை தை மாதம் ஜெயலலிதா பிறந்தநாளுக்கு முடிவு செய்வோம்.
எடப்பாடியுடன், பியூஸ் கோயல் சந்திப்பு
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் எந்த கூட்டணியில் இடம் பெற்றாலும் ஆண்டிப்பட்டி தொகுதியில் நிச்சயம் போட்டுயிடுவோம் என்று தெரிவித்தார். இதனிடையே, சென்னையில் நேற்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியை பாஜக தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஸ் கோயல் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார். இந்த பேச்சு வார்த்தையின் போது, அதிமுக கூட்டணியில் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனை இணைக்க வேண்டும் என்று பழனிசாமியிடம், பியூஸ் கோயல் வலியுறுத்தியதாகவும், இதற்கு எடப்பாடி பழனிசாமி சம்மதம் தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகி இருந்தது.
அமமுக தொகுதி பங்கீடு-கூட்டணி நிலைப்பாடு
மேலும், பாஜகவுக்கு அளிக்கப்பட்ட 23 தொகுதிகளில் இருந்து ஓபிஎஸ் மற்றும் டி டி வி தினகரனுக்கு தலா 6 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்றும் தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில், அப்படி தொகுதி பங்கீடு செய்யவில்லை என்றும், கூட்டணி குறித்த முடிவு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் இருந்து தான் தெரிவிக்கப்படும் என்று டிடிவி தினகரன் விளக்கமளித்துள்ளார்.
மேலும் படிக்க: அதிமுக-பாஜக கூட்டணியை மக்கள் தான் ஏற்க வேண்டும்…சசிகலா!