காலாண்டு, ஆயுத பூஜை விடுமுறை.. 3,265 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. எங்கெங்கு? முழு விவரம்

TNSTC Special Buses : காலாண்டு விடுமுறை, ஆயுத பூஜை, விஜய தசமி என தொடர் விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. கிளாம்பாக்கம், கோயம்பேடு பேருந்து நிலையங்களில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு 3,265 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது என தமிழக போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

காலாண்டு, ஆயுத பூஜை விடுமுறை.. 3,265 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. எங்கெங்கு? முழு விவரம்

சிறப்பு பேருந்துகள்

Published: 

26 Sep 2025 14:52 PM

 IST

சென்னை, செப்டம்பர் 26 :  காலாண்டு விடுமுறை, ஆயுத பூஜை என தொடர் விடுமுறையையொட்டி, சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழக போக்குவரத்து கழகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 2025 செப்டம்பர் 26ஆம் தேதியான இன்று முதல் 30ஆம் தேதி வரை சென்னையில் இருந்தும் பிற இடங்களில் இருந்தும் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளை விட 3,265 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழக போக்குவரத்து கழகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் பிரதான போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது பேருந்து சேவை.  வெளிமாவட்டங்கள் மற்றும்  அண்டை மாநிலங்களுக்கு செல்வதற்கு பெரும்பாலான  மக்கள் போக்குவரத்து சேவையை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, பண்டிகை நாட்கள், தொடர் விடுமுறை நாட்களில்  பேருந்து நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

இதனால், இதுபோன்ற நாட்களில் தமிழக போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்குவது வழக்கம். அந்த வகையில்,  2025 செப்டம்பர் 27ஆம் தேதியான நாளை முதல் காலாண்டு விடுமுறை தொடங்குகிறது. தொடர்ந்து, 2025 அக்டோபர் 1ஆம் தேதி ஆயுத பூஜை, அக்டோபர் 2ஆம் தேதி விஜய தசமி கொண்டாடப்படுகிறது. இதனால், மக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர். இதனை கருத்தில் கொண்டு, தமிழக போக்குவரத்து கழகம் 3,265 சிறப்பு பேருந்துகளை இயக்கப்படுவதாக அறிவித்துள்ளது.

Also Read : விடுமுறை நாட்களில் வகுப்புகள் எடுக்கக்கூடாது.. மீறினால் கடும் நடவடிக்கை – பள்ளிக்கல்வித் துறை..

3,265 சிறப்பு பேருந்துகள் இயக்கம்


அதன்படி, 2025 செப்டம்பர் 26ஆம் தேதியான இன்று சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருச்சி, திருவண்ணாமலை, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம் மற்றும் ஈரோடு ஆகிய இடங்களுக்கு 675 சிறப்பு சேவைகள் இயக்கப்படுகிறது. மேலும், 2025 செப்டம்பர் 27ஆம் தேதி மேற்கண்ட இடங்களுக்கு 565 பேருந்துகளும், 2025 செப்டம்பர் 29ஆம் தேதி 190 பேருந்துகளும், செப்டம்பர் 30ஆம் தேதி 885 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது.

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து 2025 செப்டம்பர் 26,27ஆம் தேதிகளில் வேளாங்கண்ணி, திருவண்ணாமலை, ஓசூர், நாகப்பட்டினம் மற்றும் பிற இடங்களுக்கு 215 சிறப்பு பேருந்துகளும், 2025 செப்டம்பர் 29,30ஆம் தேதிகளில் 185 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. கூடுதலாக, பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூரில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

Also Read : இறந்த 45 தெருநாய்களில் 25 நாய்களுக்கு ரேபிஸ் தொற்று உறுதி.. கோயம்புத்தூரில் அதிர்ச்சி!

சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப 2025 அக்டோபர் 4,5ஆம் தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் TNSTC செயலி அல்லது இணையதளம் வாயிலாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.