குரூப் 2 தேர்வுக்கு கட்டுப்பாடு.. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Tnpsc Group 2 Exam : டிஎன்பிஎஸ்சி குரூப் 2,2ஏ தேர்வு 2025 செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி, தேர்வர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. மேலும், சில கட்டுப்பாடுகளையும் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது. அது என்னென்ன என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.

குரூப் 2 தேர்வு
சென்னை, செப்டம்பர் 26 : குரூப் 2, 2ஏ தேர்வு 2025 செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெற உள்ள, தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பெரும்பாலான பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி எனும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நிரப்பி வருகிறது. இதற்கான குரூப் வாரியாக ஆண்டுதோறும் தேர்வுகள் நடத்தப்பட்டு நிரப்பப்பட்டு வருகிறது. இதில் இருக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் பணிகள் ஆட்கள் அமர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2025ஆம் ஆண்டுக்கான குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு 2025 செப்டம்பர் 28ஆம் தேதி (ஞாயிற்று கிழமை) நடைபெற உள்ளது. சார் பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், வனவர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு 645 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
குரூப் 2 பணியிடங்களுக்கு 50 மற்றும் குரூப் 2 ஏ பணியிடங்களுக்கு 595 இடங்கள் நிரப்பப்பட உள்ளது. குரூப் 2,2ஏ தேர்வுகளுக்கு 2025 ஜூலை 15ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இந்த நிலையில், 2025 செப்டம்பர் 28ஆம் தேதி குரூப் 2,2ஏ தேர்வு நடைபெற உள்ளது. காலை 9 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெறுகிறது. இந்த தேர்வை 5.53 லட்சம் தேர்வர்கள் எழுதுகின்றனர். இதற்காக தமிழகம் முழுவதும் 1,095 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குரூப் 2, 2ஏ தேர்வுக்கு அனைத்து தேர்வர்களும் தயாராக உள்ளனர். இந்த நிலையில், தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குறிப்பாக, தேர்வு எப்போது நடைபெறும், அதற்கான சில கட்டுப்பாடுகளையும் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
Also Read : ’ஆசிரியர்கள் பயப்பட வேண்டாம்’ டெட் தேர்வு குறித்து அன்பில் மகேஷ் சொன்ன விஷயம்
டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு
— TNPSC (@TNPSC_Office) September 26, 2025
அதன்படி, “விண்ணப்பதாரர்கள் தேர்வு நடைபெறும் நாளன்று அதாவது 28.09.2025 முற்பகல் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட தேர்வுக் கூடத்திற்கு தேர்வர்களுக்கான நுழைவுச்சீட்டில் குறிப்பிட்டுள்ளவாறு 09.00 மணிக்கு முன்னரே செல்ல அறிவுறுத்தப்பட்டிருக்கின்றனர். 09.00 மணிக்கு மேல் வரும் தேர்வர்கள் தேர்வுக் கூடத்தில் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள். மேலும் இந்த தேர்விற்குரிய தேர்வுக்கூட அனுமதி சீட்டினை கட்டாயம் தேர்வுக்கூடத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
மேலும், தேர்வர்கள் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டில் உள்ள முக்கிய அறிவுரைகள் மற்றும் தேர்வாணைய இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகள், வினாத்தாள் மற்றும் விடைத்தாளில் குறிப்பிட்டுள்ள அனைத்து அறிவுரைகளையும் முறையாக பின்பற்றுமாறும், அதில் குறிப்பிட்டுள்ள தடை செய்யப்பட்ட மின்னணுச் சாதனங்கள் மற்றும் வேறு வகையான எந்த ஒரு சாதனத்தையும் எடுத்துச் செல்லக் கூடாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: ஆசிரியர்களே கவனிங்க.. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு.. இனி வேலைக்கு சிக்கல்!
மேலும், “தேர்வர்கள் தேர்வுக் கூடத்தினை எளிதில் அடைவதற்கு ஏதுவாக போக்குவரத்து துறையின் மூலம் சிறப்பு பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வர்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கு அனைத்து தேர்வுக் கூடத்திற்கும் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்” என தெரிவித்துள்ளது.