திருப்பரங்குன்றத்தில் தீ குளித்தவரின் உயிரிழப்புக்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும்…நயினார் நாகேந்திரன்!
TN Govt Take Responsibility For Death Of The Person: திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரத்தில் தீக்குளித்து உயிரிழந்த சம்பவத்துக்கு திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தினார் .

தீருப்பரங்குன்றம் இளைஞர் தீ குளிப்பு சம்பவம்
இது தொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருப்பரங்குன்றத்தில் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை திராவிட முன்னேற்றக் கழக அரசு அவமதித்ததுடன், அந்த தீர்ப்பை நடைமுறைப்படுத்தவில்லை. இதனை ஏற்றுக் கொள்ள முடியாத முருக பக்தரான பூரண சந்திரன் தனது உயிரை மாய்த்து உள்ளார். தற்கொலைக்கு முன்பாக அவர் வெளியிட்ட ஆடியோவில் பெரியாரின் சிலைக்கு பின்னால் என் உயிரை மாய்த்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். இவரது உயிரிழப்புக்கு திராவிட முன்னேற்றக் கழக அரசு பொறுப்பேற்க வேண்டும். இந்த சம்பவத்துக்கு பிறகாவது திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும்.
அரசு வேலை- ரூ.1 கோடி வழங்க வேண்டும்
அதன் பிறகு, உயிரை மாய்த்துக் கொண்ட பூரண சந்திரனின் மனைவிக்கு அரசு வேலையும், ரூ. ஒரு கோடியும் தமிழக அரசு வழங்க வேண்டும் என்று அரசியல் பாகுபாடின்றி அனைத்து மக்கள் சார்பிலும் கேட்டுக் கொள்கிறேன். இதே போல, தமிழக பாஜக சார்பிலும், இந்து முன்னணி சார்பிலும் பூரண சந்திரன் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சத்திற்கான காசோலையை வழங்க உள்ளோம். எனவே, இனிமேலாவது தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று மீண்டும் மீண்டும் திமுக அரசை கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் படிக்க: தமிழகத்தை அச்சுறுத்தும் குழந்தை கடத்தல் சகோதரிகள்.. பெற்றோர்களே உஷார்!!
தமிழகம் முழுவது மோட்ச தீபம் ஏற்ற வேண்டும்
பூர்ண சந்திரன் சம்பவத்தை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் நாளை சனிக்கிழமை (டிசம்பர் 20) அனைத்து பகுதிகள் மற்றும் கோயில்களில் மோட்ச தீபம் ஏற்ற வேண்டும். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் கொடுத்த திமுக அரசு, பூரண சந்திரன் குடும்பத்துக்கு ரூ. ஒரு கோடி வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இளைஞர்கள் தவறான முடிவு எடுக்கக் கூடாது
தமிழகத்தில் பல்வேறு விதமான பிரச்சனைகள் வரலாம். ஆனால், இதற்காக இளைஞர்கள் தங்களது உயிரை மாய்த்துக் கொள்வதை ஏற்க முடியாது. இது தவறான முன்னுதாரணம் ஆகும். இது போன்ற செயல்களில் இளைஞர்கள் ஈடுபடக்கூடாது. பெரியார் சிலைக்கு பின்னால் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று பூரண சந்திரன் கூறியதில் பல்வேறு அர்த்தங்கள் உள்ளதை புரிந்து கொள்ள வேண்டும்.
தீபத்தூண் விவகாரம் தமிழரின் பண்பாட்டு உரிமை
திருப்பரங்குன்றம் விவகாரம் மதம் சார்ந்த பிரச்சனை கிடையாது. தமிழர்களின் பண்பாட்டு உரிமையாகும். இதனை முதல்வர் மு. க. ஸ்டாலின் புரிந்து கொள்ள வேண்டும். 2026- இல் திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற பூரண சந்திரனின் ஆசை நிறைவேறும் என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: “அதிமுகவுக்கு வாக்களித்த கைகள் வேறு யாருக்கும் வாக்களிக்காது”.. விஜய்க்கு ஜெயக்குமார் பதிலடி!