மதுரையில் திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம் – தீக்குளித்த இளைஞர் மரணம்
Devotee Protest Death: திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதியளிக்காததைக் கண்டித்து மதுரை மாநகர் அவுட்போஸ்ட் பகுதியில் உள்ள போலிஸ் பூத்திற்குள் சென்று இளைஞர் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை, டிசம்பர் 18: திருப்பரங்குன்றம் (Tiruparankundram) மலை மீது உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதியளிக்காததைக் கண்டித்து மதுரை மாநகர் அவுட்போஸ்ட் பகுதியில் உள்ள போலிஸ் பூத்திற்குள் சென்று இளைஞர் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக டிசம்பர் 18, 2025 இன்று மதியம் போலீஸ் பூத்தில் தீக்குளித்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மரணம் சோகத்தை ஏற்படுத்துயுள்ளது. இதனையடுத்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி வழங்கி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். ஆனால், இந்த உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்த நிலையில், அந்த வழக்கில் அனைத்து தரப்பினரின் வாதங்களும் முடிவடைந்து, தீர்ப்பு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : சர்ச்சைக்குரிய திருப்பரங்குன்றம் மலை…சந்தனக்கூடு விழா நடத்த அனுமதி…இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு!




இந்த நிலையில், மதுரை நரிமேடு பகுதியில் உள்ள மருதுபாண்டியர் தெருவை சேர்ந்த பூர்ணச்சந்திரன் என்பவர், இந்த விவகாரத்தால் கடும் மனவேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. மருந்து நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வந்த பூர்ணச்சந்திரன், தனது ஓய்வு நேரங்களில் சரக்கு வாகனத்தில் காய்கறி மற்றும் பழங்களை விற்பனை செய்து வந்துள்ளார். அவருக்கு மனைவி, ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தீக்குளித்த இளைஞர்
இதனையடுத்து டிசம்பர் 18, 2025 இன்று மாலை 4 மணியளவில், மதுரை மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள காவல் நிலைய சந்திப்பில், பெரியார் சிலை அருகே செயல்பாட்டில் இல்லாத போலீஸ் பூத்திற்கு சென்ற பூர்ணச்சந்திரன் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்துள்ளார். அவரின் அலறல் சத்தத்தை கேட்ட அருகிலிருந்த பொதுமக்கள் மற்றும் அப்போது அந்த வழியாக சென்ற துணை மேயர் நாகராஜன், உடனடியாக காவல் துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
ஆனால், அவர்கள் சம்பவ இடத்திற்கு வரும் முன்னரே, பூர்ணச்சந்திரன் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக, தல்லாகுளம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் ஏற்றப்படாததைக் கண்டித்து இளைஞர் உயிரிழந்த சம்பவம், முருக பக்தர்களிடையே பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க : நெல்லையில் கோயிலுக்குள் புகுந்து அட்டகாசம் செய்த கரடி.. கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை!
இந்த சம்பவம் குறித்து, தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உயர் நீதிமன்றத்தின் உத்தரவை மீறி, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி மலை மீது தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்காத திமுக அரசுக்கு எதிராக, முருக பக்தரான பூர்ணச்சந்திரன் தீக்குளித்து உயிரிழந்தது மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் தருவதாக தெரிவித்துள்ளார்.
(தற்கொலை எதற்கும் தீர்வல்ல.. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசலாம். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050)