மதுரை எல்.ஐ.சி அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து.. பெண் மேலாளர் உடல் கருகி பரிதாப பலி!
Madurai LIC Office Fire | மதுரை ரயில் நிலையத்திற்கு அருகே உள்ள எல்.ஐ.சி அலுவலகத்தில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு பெண் ஊழியர் உடல் கருகி பலியான நிலையில், பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட ஊழியர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மதுரை, டிசம்பர் 18 : மதுரை (Madurai) ரயில் நிலையத்திற்கு எதிரே உள்ள கட்டடத்தின் இரண்டாவது தளத்தில் எல்.ஐ.சி அலுவலகம் ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த அலுவலகத்தில் 50 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் இந்த அலுவலகத்தில் நேற்று (டிசம்பர் 17, 2025) புதிய பாலிசியை அறிமுகம் செய்வதற்கான சிறப்பு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது. அப்போது நடைபெற்ற சோக சம்பவம் காரணமாக அந்த அலுவலகத்தை சேர்ந்த பெண் ஊழியர் பரிதாபமாக பலியாகியுள்ளார்.
அலுவலகத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து
அதாவது, நிகழ்ச்சி முடிந்து அனைவரும் தங்களது வீடுகளுக்கு திரும்ப தயாராகியுள்ளனர். அவ்வாறு ஊழியர்கள் பலரும் சென்றுவிட்ட நிலையில், அலுவலகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கட்டடம் முழுவதும் தீ பறவ தொடங்கிய நிலையில், அதனை கண்டு அங்கிருந்த சில ஊழியர்கள் அலறி அடித்துக்கொண்டு வெளியேற தொடங்கியுள்ளனர். பெரும்பாலான ஊழியர்கள் கட்டடத்தில் இருந்து வெளியேறிய நிலையில், சிலர் மட்டும் கட்டடத்திற்குள் சிக்கிக்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க : 2026 ராஜ்ய சபா தேர்தலும்….சட்டமன்ற தேர்தல் கூட்டணி கணக்கும்!




கடுமையாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்த தீயணைப்பு துறையினர்
எல்.ஐ.சி அலுவலகத்தில் தீ பரவிய செய்தி அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட தொடங்கியுள்ளனர். இந்த நிலையில், பல மணி நேரம் போராடி அவர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். பின்னர் கட்டடத்தில் சிக்கியிருந்த ஊழியர்களை தீயணைப்பு துறையினர் ஒருவர் பின் ஒருவராக பத்திரமாக மீட்டுள்ளனர். ஆனால், திருநெல்வேலியை சேர்ந்த 55 வயதான கல்யாணி என்ற முதுநிலை மேலாளர் இந்த விபத்தில் துரதிஷ்ட வசமாக உடல் கருகி பலியாகியுள்ளார்.
இதையும் படிங்க : 2026 ஆம் ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு – தமிழக அரசு விதித்த கட்டுப்பாடுகள் என்ன?
ஏசி மின் கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என தகவல்
மேலும், தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட அலுவலக உதவி நிர்வாக அதிகாரி ராம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஏசி மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. எனினும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.