100 நாள் வேலை திட்டத்தை அரசியலாக்குகின்றனர்….தமிழிசை செளந்தர ராஜன்!
Congress And DMK Are Politicizing The 100 Day Work Plan: நூறு நாள் வேலை திட்டத்தில் காங்கிரஸ் மற்றும் திமுக உள்ளிட்ட கட்சிகள் அரசியல் செய்வதாக தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தர ராஜன் தெரிவித்தார் .
தமிழக பாஜகவின் மைய குழு கூட்டம் இன்று புதன்கிழமை (டிசம்பர் 17) நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு பிறகு தமிழக பாஜகவின் மூத்த தலைவரான தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக வியூகங்களை வகுத்துள்ளோம். எதிர்க் காலத்தில் மேற்கொள்ளக் கூடிய திட்டங்கள் குறித்தும் திட்டமிட்டுள்ளோம். பேச்சாளர்கள் பயிற்சி முகாம், பொதுக் கூட்டங்கள், பிரிவு சார்ந்த மாநாடுகள் உள்ளிட்டவை தொடர்பாக மைய குழு கூட்டத்தில் ஆலோசனை மேற்கொண்டுள்ளோம். பொங்கல் பண்டிகை நாளில், பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம். தற்போது வரை பிரதமர் வருகை முடிவு செய்யப்படவில்லை.
100 நாள்கள் வேலை திட்டத்தில்…
100 நாள் வேலை திட்டத்தில் வேலை நாட்கள் 125 நாள்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் வழங்கக் கூடிய ஊதியமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே, இவ்வளவு மேம்பாடான ஒரு திட்டத்தை, அதன் பெயரை வைத்து தேசிய மற்றும் மாநில கட்சிகள் அரசியல் செய்து வருகின்றன. தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரை தவிர்த்து எத்தனை திட்டத்திற்கு மகாத்மா காந்தியின் பெயரை திமுக அரசு வைத்துள்ளது.
மேலும் படிக்க: தமிழக இளைஞர்களை தவெக தவறாக வழி நடத்துகிறது…பி.டி.செல்வகுமார் கடும் தாக்கு!




காந்தியின் கொள்கையை பிரதமர் பின்பற்றுகிறார்
இதே போல, காங்கிரஸ் ஆட்சி காலத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பெயரை தவிர்த்து எத்தனை திட்டங்களுக்கு மகாத்மா காந்தியின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. எனவே, தற்போது காந்தியின் கொள்கைகளை காங்கிரஸ் கட்சியும், திமுகவும் மறந்துள்ளது. மகாத்மா காந்தியின் கொள்கையை பிரதமர் மோடி மறந்து விட்டதாக சில தலைவர்கள் கூறி உள்ளனர். காதி விற்பனையில் உலக அளவில் மிகப்பெரிய சாதனையை இந்தியா பெற்றுள்ளது. எனவே, பிரதமர் நரேந்திர மோடி காந்திய கொள்கைகளை பின்பற்றி வருகிறார்.
மகாத்மா காந்தி கொலை குறித்து பேசுவதற்கு கண்டனம்
மகாத்மா காந்தியின் கொலைக்கும், அரசு போன்ற இயக்கங்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது என்று நீதிமன்றத்தில் தீர்ப்பாகி உள்ளது. ஆனால், மீண்டும், மீண்டும் மகாத்மா காந்தியின் கொலை குறித்து பேசுவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். மகாத்மா காந்திக்கு, பிரதமர் மோடி போல மரியாதை செலுத்தும் அளவுக்கு வேறு யாரும் கிடையாது.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில்…
அதிமுக, பாஜக கூட்டணி வலுவாக உள்ளது. இந்த கூட்டணியில் ஒவ்வொரு கட்சியாக இணையும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. தொகுதி பங்கீடு, கூட்டணி குறித்து பாஜக தலைமை தான் முடிவு செய்யும். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக அரசுக்கு எனது கண்டனத்தை பதிவு செய்கிறேன் என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: பாஜக கூட்டணிக்கு தமிழக மக்கள் முழு ஆதரவு… நயினார் நாகேந்திரன்!