Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

2026 ராஜ்ய சபா தேர்தலும்….சட்டமன்ற தேர்தல் கூட்டணி கணக்கும்!

Pmk And Dmdk Alliance Decision: 2026 சட்டமன்ற தேர்தல் கூட்டணியை அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ராஜ்ய சபா தேர்தல் தான் முடிவு செய்யும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதன்படி, திமுக, அதிமுகவிடம் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

2026 ராஜ்ய சபா தேர்தலும்….சட்டமன்ற தேர்தல் கூட்டணி கணக்கும்!
கூட்டணிக்கு அடித்தளமாகும் ராஜ்யசபா தேர்தல்
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 17 Dec 2025 17:25 PM IST

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ளன. இந்த தேர்தலில் எந்த கட்சிகள் எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதன்படி, வரும் சட்டமன்ற தேர்தலில் தங்களது கூட்டணியை உறுதி செய்வதற்கு சில கட்சிகள் 2026 ராஜ்ய சபா தேர்தலை கையில் எடுத்துள்ளது. ஏனென்றால், தமிழகத்தில் திமுகவைச் சேர்ந்த திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என் ஆர் இளங்கோ, கனிமொழி சோமு மற்றும் அதிமுகவைச் சேர்ந்த தம்பிதுரை, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி. கே. வாசன் ஆகிய 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் 2026 ஏப்ரல் மாதத்துடன் நிறைவடைய உள்ளது. இந்த பதவிகளுக்கான தேர்தல் மார்ச் மாதத்தில் நடைபெற வாய்ப்புள்ளது. பிப்ரவரி மாதத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் சூழ்நிலை உள்ளது.

அதிமுக – தேமுதிக இடையே கருத்து மோதல்

அதன்படி, இந்த தேர்தலை மையமாக வைத்து திமுக மற்றும் அதிமுகவிடம் அதன் கூட்டணி கட்சிகள், கூட்டணியை உறுதி செய்வதற்காக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற ராஜ்ய சபா தேர்தலில் தங்களுக்கு அதிமுக ராஜ்ய சபா சீட் தருவதாக விட்டு தற்போது தரவில்லை என்று தேமுதிக குற்றசாட்டியிருந்தது. இதனால், அதிமுக மற்றும் தேமுதிமுக இடையே கருத்து மோதல் நிலவி வந்தது.

மேலும் படிக்க: 2026 ஆம் ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு – தமிழக அரசு விதித்த கட்டுப்பாடுகள் என்ன?

அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை

2026 ராஜ்யசபா தேர்தலில் தேமுதிகவுக்கு ஒரு சீட் வழங்கப்படும் என்று அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இதனால், வரும் ராஜ்யசபா தேர்தலில் தேமுதிகவுக்கு, அதிமுக ஒரு சீட் வழங்க உள்ளது. ஆனால், இந்த சீட்டை பெற்றுக் கொள்வதாக தேமுதிக தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இதே போல, பாமகவும் ராஜ்ய சபா சீட் கேட்டு அதிமுகவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

ராமதாஸ் தரப்பிடம் நெருக்கம் காட்டும் திமுக

இதில், பாமகவில், ராமதாஸ் மற்றும் அன்புமணி இரு தரப்பாக இருக்கும் நிலையில், இந்த கட்சியின் நகர்வுகள் எப்படி இருக்கும் என்று எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இதனிடையே, ராமதாஸ் தரப்பிடம் திமுக நெருக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது. எஸ். ஐ. ஆர். பணிகள் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்திற்கு ராமதாஸுக்கு மட்டும் திமுக அழைப்பு விடுத்திருந்தது. அன்புமணிக்கு அழைப்பு விடுக்கவில்லை.

சீட்டு ஒதுக்கினால் தான் கூட்டணி

இதனால், திமுக, அதிமுகவிடம் ராஜ்யசபா சீட்டை முன்கூட்டியே ஒதுக்கீடு செய்ய வேண்டும். அப்படி செய்தால் தான் கூட்டணியை உறுதி செய்வோம் என்று பாமக மற்றும் தேமுதிக வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது. இதேபோல, திமுகவிடம் உள்ள 4 ராஜ்யசபா சீட்டுகளில் ஒன்றை கூட்டணி கட்சிக்கு விட்டுக் கொடுக்கும். அதன்படி, அந்த சீட்டை காங்கிரஸ் கட்சிக்கு கொடுக்குமா அல்லது விடுதலை சிறுத்தை கட்சிக்கு கொடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கூட்டணியை முடிவு செய்யும் ராஜ்ய சபா தேர்தல்

அதிமுகவிடம் உள்ள 2 சீட்டுகளில் ஒன்று தேமுதிகவுக்கு என்று அறிவிக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள ஒரு சீட்டை மீண்டும் தம்பி துரைக்கு கொடுக்குமா அல்லது பாமகவுக்கு கொடுக்குமா என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. அதன்படியே, 2026 சட்டமன்ற தேர்தல் கூட்டணியை 2026 ராஜ்ய சபா தேர்தல் முடிவு செய்யும் என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க: 100 நாள் வேலை திட்டத்தை அரசியலாக்குகின்றனர்….தமிழிசை செளந்தர ராஜன்!