சர்வே கல் மீது தீபம்? மதக் கலவரத்தை உருவாக்குவதே பாஜகவின் நோக்கம்… கனிமொழில் பேச்சு
Kanimozhi clarifies Deepam stone: திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான சர்ச்சை குறித்து பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, அது தீபத்தூண் இல்லை எனவும், ஆங்கிலேயர்கள் காலத்தில் நிலத்தை அளப்பதற்காக வைக்கப்பட்ட ஒரு சர்வே கல் என்றும் தெரிவித்தார்.
மதுரை, டிசம்பர் 5 : திருப்பரங்குன்றம் (Thiruparankundram) மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் (Karthigai Deepam) ஏற்றப்படாதது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு டிசம்பர் 5, 2025 அன்று மீண்டும் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்ததாது குறித்தும், சிஐஎஸ்எஃப் வீரர்களை அனுமதிக்காதது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கின் மீதான விசாரணையை டிசம்பர் 9, 2025 அன்று ஒத்திவைத்தார். இதனையடுத்து திருப்பரங்குன்றம் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சர்வே கல் என பேசிய கனிமொழி
இந்த நிலையில் இது தொடர்பாக பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, அது தீபத்தூண் இல்லை எனவும், ஆங்கிலேயர்கள் காலத்தில் நிலத்தை அளப்பதற்காக வைக்கப்பட்ட ஒரு சர்வே கல் என்றும் தெரிவித்தார். செய்தியாளர்களை சந்தித்த திமுக எம்பி கனிமொழி, திருப்பரங்குன்றம் மலை மீது இருப்பது ஆங்கிலேயர் நிலத்தை அளப்பதற்காக வைக்கப்பட்ட ஒரு சர்வே கல் என்று தெரிவித்தார். கார்த்திகை தீபத்தை ஏற்ற வேண்டும் என கேட்பதுதான் இந்துக்கள் மனதை புண்படுத்தக் கூடியது.
இதையும் படிக்க : பிரிவினைவாத எண்ணத்துடன் செயல்படும் திமுக அரசு.. திருப்பரங்குன்ற விவகாரம் குறித்து அண்ணாமலை சாடல்..
அந்த கல்லிற்கும் கோயிலுக்கும் சம்பந்தமே கிடையாது. அது நாம் வழிவழியாக வழிபடும் தீபக் கல் இல்லை.தீபத்திருநாளுக்கு அடுத்த நாள், ஆகம விதிகளுக்கு புறம்பாக தீபம் ஏற்றுவது தான் இந்துக்களின் மனங்களை புன்படுத்தக் கூடியது. யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு அரசு நடந்துகொள்ளாது. தமிழ்நாட்டில் மதக்கலவரத்தை உருவாக்குவதே பாஜகவின் நோக்கம் என்று பேசினார்.
மேலும் பேசிய அவர், திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் தொடர்ந்து ஏற்றப்படுகிறது. கோயில் நிர்வாகமும் அறநிலையத் துறையும் சேர்ந்து கார்த்திகை தீபத்தை மலைமீது இருக்கும் பிள்ளையார் கோயிலில் ஏற்றிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு முன் வழக்கமாக மலை அடிவாரத்தில் இருக்கும் கோயிலில் ஏற்றினார்கள். மலைமீது கோவில் கட்டப்பட்ட பிறகு அங்கு அந்த தீபம் ஏற்றப்படுவது வழக்கமானது என்றார்.
இதையும் படிக்க : 2வது முறையும் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுப்பு.. திருப்பரங்குன்றத்தில் நீடிக்கும் பதற்றம்!
‘சமூக வலைதளங்களில் தேவையற்ற கருத்துக்களை பகிர வேண்டாம்’
திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு டிசம்பர் 5, 2025 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய ஜி.ஆர்.சுவாமிநாதன், திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றுவது தொடர்பாக சமூக வலைதளங்களில் தேவையற்ற கருத்துகளைப் பகிர வேண்டாம். அதை நீதிமன்றம் அனுமதிக்காது என்று பேசினார். மேலும் இந்த வழக்கு மீதான விசாரணை வருகிற டிசம்பர் 9, 2025 முதல் விசாரணைக்கு வரவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.



