Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நெல்லையில் கோயிலுக்குள் புகுந்து அட்டகாசம் செய்த கரடி.. கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை!

Kalakkad Bear Temple Intrusion | திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே வன பகுதியில் இருந்து வெளியேறிய கரடி ஒன்று அங்கிருந்த கோயிலுக்குள் புகுந்து அட்டகாசம் செய்துள்ளது. இந்த நிலையில், கரடியை கூண்டு வைத்து பிடிக்க அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

நெல்லையில் கோயிலுக்குள் புகுந்து அட்டகாசம் செய்த கரடி.. கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை!
அட்டகாசம் செய்த கரடி
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 18 Dec 2025 10:22 AM IST

களக்காடு, டிசம்பர் 18 : திருநெல்வேலி (Tirunelveli) மாவட்டம் களக்காடு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளதன் காரணமாக அங்கிருந்து யானை, சிறுத்தை, கரடி, மான், காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட உயிரினங்கள் அவ்வப்போது அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசங்களில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டுள்ளன. வயல்வெளிகளை நாசம் செய்வது, வீடுகளுக்குள் புகுந்து உணவு பொருட்களை சாப்பிடுவது உள்ளிட்ட செயல்களை வன பகுதியில் இருந்து வெளியேறும் விலங்குகள் செய்து வருகின்றன. அந்த வகையில், கரடி ஒன்று கோயிலுக்குள் புகுந்து உலா வந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறியுள்ளது.

கோயிலுக்குள் புகுந்து உலா வந்த கரடி – பொதுமக்கள் அதிர்ச்சி

களக்காடு அருகே உள்ள பெருமாள் குளம் – கல்லடி சிதம்பரம் செல்லும் சாலையில் இசக்கி அம்மன் கோயில் ஒன்று உள்ளது. மலையடிவார பகுதியில் இருந்து இந்த கோயிலுக்கு வந்த கரடி ஒன்று, கோயில் சுற்றுசுவரை தாண்டி கோயிலுக்குள் சென்றுள்ளது. உள்ளே சென்ற அந்த கரடி உணவு பொருட்கள் ஏதேனும் உள்ளதா என தேட தொடங்கியுள்ளது. அப்போது அங்கிருந்த ஒரு துணி மூட்டையில் உணவு இருக்கும் என நினைத்து அந்த கரடி அதனை கடித்து குதறியுள்ளது. ஆனால், அதிலும் எந்த உணவு பொருளும் இல்லாததால் கரடி ஏமாற்றமடைந்து திரும்பிச் சென்றுள்ளது.

இதையும் படிங்க : ரயில் டிக்கெட் முன்பதிவில் மிகப்பெரிய மாற்றம் – பயணிகளுக்கு நிம்மதியை ஏற்படுத்திய அறிவிப்பு

வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ள பொதுமக்கள்

கரடி கோயிலுக்குள் சுற்றித் திரிந்தது கோயிலில் உள்ள சிசிடிவியில் பதிவாகியிருந்ததை கண்டு அந்த பகுதி மக்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். ஊருக்குள் கரடி புகுந்துள்ளதால் வெளியே நடமாட முடியாமல் பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு உள்ளேயே முடங்கியுள்ளனர். இதன் காரணமாக ஊருக்குள் சுற்றித் திரியும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் வனத்துறையிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க : 2026 ஆம் ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு – தமிழக அரசு விதித்த கட்டுப்பாடுகள் என்ன?

ஏற்கனவே இந்த பகுதியில் உள்ள பெருமாள் குளத்தில் நடமாடிய கரடி ஒன்றை கூண்டு வைத்து பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.