தந்தையின் உயிரை பறித்த யானை தெய்வானை.. பாகனின் மகள்கள் செய்த நெகிழ்ச்சி செயல்!!
Tiruchendur Elephant: தனது பாகனை கொன்ற வருத்தத்தில் இருந்த யானை தெய்வானை, குழந்தைபோல் கண்ணீர் விட்டு அழுதது. தொடர்ந்து, தெய்வானை சிறுது நாட்களுக்கு குற்ற உணர்ச்சியில், சாப்பிட மறுத்து வந்தது. பின்னர், நீண்ட ஓய்வுக்கு பின் யானை படிப்படியாக இயல்புக்கு திரும்பியது.

யானை தெய்வானையிடம் ஆசி பெற்ற மறைந்த பாகனின் மகள்கள்
தூத்துக்குடி, டிசம்பர் 07: முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலும் ஒன்றாகும். இந்த கோவிலில் பராமரிக்கப்பட்டு வரும் யானை தெய்வானை, கடந்த ஆண்டு நவம்பர் 18 அன்று ஏற்பட்ட துயர சம்பவத்தில் இரண்டு பேரின் உயிரிழப்புக்கு காரணமானது. இதில், யானையின் பராமரிப்பாளரான பாகன் உதயகுமாரும், அவருடன் இருந்த அவரது உறவினரும், யானையின் தாக்குதலில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த நிகழ்வு தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் நிகழந்து ஓராண்டு நிறைவடைந்த நிலையில், பாகன் உதயகுமாரின் மகள்கள் இருவரும் நேற்று திருச்செந்தூர் வந்து, யானை தெய்வானையிடம் ஆசி பெற்று சென்றனர்.
மேலும் படிக்க: கோவா இரவு விடுதி தீ விபத்து – 23 பேர் பலி.. என்ன நடந்தது?
தொட்டதால் ஆத்திரமடைந்த யானை தெய்வானை:
திருச்செந்தூர் முருகன் கோவிலில் 26 வயது மிக்க யானை தெய்வானை, கோவில் வளாகத்திலேயே வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த யானையை கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையைச் சேர்ந்த பாகன் உதயகுமார் (46) கவனித்து வந்தார். இந்நிலையில், கடந்த 2024 நவம்பர் 18ம் தேதியன்று, உதயகுமாரை காண அவரது உறவினரான ஓய்வு பெற்ற ராணுவ வீரர் சிசுபாலன் (58) என்பவர் திருச்செந்தூர் கோவிலுக்கு வருகை தந்துள்ளார். அப்போது, அவர் யானையுடன் நின்று செல்ஃபி எடுத்ததுடன், யானையை தொடவும் செய்துள்ளார். இதனால், ஆக்ரோஷமடைந்த யானை தன்னை தொடுவது பிடிக்காமல், சிசுபாலனை கால் மற்றும் தும்பிக்கையால் கடுமையாக தாக்கியுள்ளது.
பாகனை தவறுதலாக கொன்ற தெய்வானை:
இதனால் அதிர்ச்சியடைந்த பாகன் உதயகுமார், அவரை காப்பாற்ற வந்துள்ளார். ஆனால், அவர் பின் பக்கமாக இருந்ததால், அவரையும் யார் என்று பார்க்காமல் யானை தெய்வானை கடுமையாக தாக்கி மிதித்துள்ளது. பின் அவர் தனது பாகன் என்பதை உணர்ந்து அவரை எழுப்ப முயன்றுள்ளது. ஆனால், அவர் எழாததால் மீண்டும் சிசுபாலனை ஆத்திரத்தில் தாக்கியுள்ளது. இதற்கிடையே சக பாகன்கள் யானையை சாந்தப்படுத்தி கூடுதல் சங்கிலிகள் கொண்டு அதனை கட்டி போட்டனர்.
பாகனை கொன்ற வருத்தத்தில் தெய்வானை:
தொடர்ந்து, பாகனை கொன்ற வருத்தத்தில் இருந்த யானை தெய்வானை, குழந்தைபோல் கண்ணீர் விட்டு அழுதது. அதோடு, தன்னை கட்டிப்போட்ட இடத்தில் இருந்து மண்டியிட்டு உதயக்குமாரை துதிக்கையால் தூக்கியவாறு அவரை எழுப்ப முயன்றது. பலமுறை இவ்வாறாக செய்தும் பாகன் எழுந்திருக்காததால் யானை கண்ணீர் விட்டபடி சோகத்தில் மூழ்கியது. இக்காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தன. அதோடு, பாகனை கொன்ற பின் யானை தெய்வானை, தொடர்ந்து சிறுது நாட்களுக்கு குற்ற உணர்ச்சியில், சாப்பிட மறுத்து வந்தது. பின்னர், நீண்ட ஓய்வுக்கு பின் யானை படிப்படியாக இயல்புக்கு திரும்பியது.
இந்நிலையில், உதயகுமார் உயிரிழந்த தினத்தின் நட்சத்திரத்தை ஒட்டி, அவரது முதல் ஆண்டு நினைவு தினம் அண்மையில் அனுசரிக்கப்பட்டது. இதற்காக, பாகன் உதயக்குமாரின் குடும்பத்தினர் கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகிலுள்ள திருவல்லாவில் உள்ள பரசுராமர் கோவிலில் சிறப்பு ஹோம வழிபாடு நடத்தினர்.
இதையும் படிக்க : நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான கார்கள்.. 5 பேர் பலியான நிலையில், 7 பேர் படுகாயம்!
தெய்வானையிடம் ஆசி பெற்ற பாகனின் மகள்கள்:
இந்த வழிபாடு முடிந்த பின், உதயகுமாரின் மகள்களான அக்ஷரா (16) மற்றும் அகல்யா (15) ஆகியோர் திருச்செந்தூர் கோவிலுக்கு வந்தனர். அவர்கள் நேரடியாக யானை தங்கும் பகுதிக்கு சென்று, தந்தையின் மரணத்திற்குக் காரணமான அதே யானை தெய்வானைக்கு கரும்பு, செவ்வாழை, ஆப்பிள், ஏத்தன்பழம் உள்ளிட்ட பல்வேறு பழங்களை சமர்பித்து வழிபட்டனர்.
பின்னர், இருவரும் யானையின் காலடியில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றனர். தந்தையை இழந்த துயரத்துடனும், ஒருவிதமான சமரச உணர்வுடனும், யானையை வணங்கிய இந்த காட்சி அருகில் இருந்தவர்களை நெகிழ்ச்சியடைய வைத்தது.