தென்காசியில் அதிர்ச்சி.. கரடி தாக்கி 3 பேர் பெண்கள் படுகாயம்!
Tenkasi Bear Attack : தென்காசி மாவட்டம் புளியங்குடியில் கரடித் தாக்கி மூன்று பெண்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் ஒருவர் ஆபத்தான நிலையில், நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தை கண்டித்து அப்பகுதி மக்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

கரடி தாக்கிய 3 பேர் காயம்
தென்காசி, ஆகஸ்ட் 07 : தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியில் கரடி தாக்கி மூன்று பெண்கள் படுகாயம் (Tenkasi Bear Attack) அடைந்துள்ளனர். விவசாய நிலத்திற்குச் சென்ற மூன்று பெண்களை காட்டுப்பகுதியில் இருந்த கரடி வந்து அவர்களை தாக்கி தாக்கியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்த மூன்று பெண்களுக்கும் புளியங்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தென்காசி மாவட்டம் புளியங்குடி மேற்கு தொடர்ச்சி மலையின் வனப்பகுதிக்கு அருகில் அமைந்துள்ளது. இதனால், அவ்வப்போது மலைப்பகுதியில் இருக்கும் விலங்குகள் மக்கள் குடியிருக்கும் இடத்திற்கு வந்து அவர்களை அச்சுறுத்தி செல்கிறது. இதனால் மக்கள் பகல் மற்றும் இரவு நேரங்களில் அச்சத்துடன் இருக்கின்றனர். எனவே வனவிலங்குகள் பொதுமக்கள் வசிக்கும் இடங்களுக்கு வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலமுறை புளியங்குடி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இருப்பினும் வனவிலங்குகள் பொதுமக்கள் வசிக்கும் இடங்களுக்கும் விவசாய நிலங்களுக்கும் வருவதை வாடிக்கையாக உள்ளது. சில நேரங்களில் இதனால் மக்கள் காயமடைந்தும் வருகின்றனர். உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. இந்த நிலையில் தான், 2025 ஆகஸ்ட் 7ஆம் தேதி ஆன இன்று கரடித் தாக்கி மூன்று பெண்கள் காயமடைந்தனர். அதாவது, புளியங்குடியைச் சேர்ந்த இசக்கி ராஜ் பண்ணையில் காலை 9 மணி அளவில் பெண்கள் சிலர் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த கரடி ஒன்று அங்கிருக்கும் மூன்று பெண்களை பயங்கரமாக தாக்கியிருக்கிறது. ராஜலட்சுமி (43), அம்பிகா (44) , சேஷு அம்மாள் (52) ஆகியோரை கரடி தாக்கியதில் அவர்கள் படுகாயம் அடைந்தனர்.
Also Read : வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.. எப்போது தெரியுமா? முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
கரடி தாக்கி 3 பேர் பெண்கள் படுகாயம்
இதில் மூன்று பெண்களின் தலை கை கால்கள் முகத்தில் காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மூன்று பேரையும் புளியங்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் அதிகமாக காயம் அடைந்த சேஷு அம்மாள் நெல்லை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Also Read : சிவகங்கையில் வினோதம்.. ஒருவர் மட்டுமே வாழும் நாட்டாகுடி கிராமம்.. என்ன பிரச்னை?
இந்த சம்பவத்தை கண்டித்து புலங்குடி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காட்டு விலங்குகள் பொதுமக்கள் வசிக்கும் இடங்களுக்கு வருவதையும் விவசாயிகள் குடியிருப்பாளர்கள் மீது தாக்குதலையும் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து அப்பகுதி மக்கள் நேரமாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தென்காசி மதுரை நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. காவல்துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் போராட்டக்காரர்களை சமாதானப்படுத்திய பின்னர், அவர்கள் கலைந்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.