தமிழக காவல்துறைக்கு பெருமை..3 அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பதக்கம்-21 பேருக்கு தகைசால் விருது!
Republic Day Award: குடியரசு தினத்தையொட்டி, தமிழக காவல் துறையைச் சேர்ந்த 3 போலீஸ் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பதக்கமும், தமிழக அரசு சார்பில் 21 போலீசாருக்கு தகைசால் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதுகள் நாளை குடியரசு தின விழாவில் வழங்கப்பட உள்ளன.

3 தமிழக காவல் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பதக்கம்
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினம் மற்றும் சுதந்திர தின விழாக்களின் போது, காவல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் பொது மக்களுக்கு பல்வேறு விருதுகள் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, நாளை திங்கள்கிழமை ( ஜனவரி 26) குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழகத்தை சேர்ந்த 3 காவல் துறை அதிகாரிகளுக்கு சிறப்பு மிக்க குடியரசு தலைவர் பதக்கத்தை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இதே போல, தமிழக காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்த 21 அதிகாரிகளுக்கு தகைசால் விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் எதற்கும் அஞ்சாமல் தைரியமாக தனது கடமையை செய்தது அல்லது தனது பணியில் தன்னலமற்ற ஈடுபாடு, விதிவிலக்கின்றி அர்ப்பணிப்புடன் பணிபுரிந்த காவல்துறை கண்காணிப்பாளர் குமரவேலு, துணை கமிஷனர் அன்வர் பாஷா, ஐ. ஜி. மகேஸ்வரி ஆகியோருக்கு குடியரசுத் தலைவரின் சிறப்பு மிக்க பதக்கம் வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மெச்சத்தகுந்த பணிக்கான விருது
இதே போல, தமிழக காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்த துணை காவல் கண்காணிப்பாளர் தேவராஜன், கமாண்டன்ட் மணிவர்மன், உதவி கமிஷனர் ஜான், கூடுதல் கமிஷனர் அமுல்தாஸுகி ஆகியோருக்கு மெச்சத்தக்க பணிக்கான விருது வழங்கப்பட உள்ளது. இதே போல, துணை காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன், காவல் ஆய்வாளர்கள் விஜய், கிருஷ்ணமூர்த்தி, ஜானகி, லட்சுமணன், மோகன், காளீஸ்வரி, ரங்கநாதன் ஆகியோருக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க: குடியரசு தினவிழா…காவல்துறையின் முழு கட்டுப்பாட்டில் சென்னை…7 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு!
குடியரசு தின விழாவில் விருதுகள் அளிப்பு
மேலும், காவல் ஆய்வாளர்கள் செந்தில் குமார், சந்திரா, ஆனந்தி, பாண்டி முத்துலட்சுமி மற்றும் சப் இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோருக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டு நாளை குடியரசு தின விழாவில் வழங்கப்பட உள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்த குடியரசு தலைவர் பதக்கத்தை ஜனாதிபதி திரெளபதி முர்முவிடம் போலீசார் பெற்றுக் கொள்ள உள்ளனர். தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட விருதுகள் ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் போலீசார் பெற்றுக் கொள்ள உள்ளனர்.
தமிழக காவல்துறைக்கு பெருமை
இதே போல, மற்ற துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த ஊழியர்கள், வீர தீர செயல் புரிந்த பாதுகாப்பு படையினர் உள்ளிட்டோருக்கு பல்வேறு வகையான விருதுகள் வழங்கப்பட உள்ளன. தமிழகத்தை சேர்ந்த காவல் துறை அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் பதக்கம், தகைசால் விருது மற்றும் மெச்சத்தகுந்த விருதுகள் அறிவிக்கப்பட்டது தமிழக காவல் துறையை பெருமைப்படுத்தும் வகையில் உள்ளது.
மேலும் படிக்க: தமிழகத்தில் புதிதாக 5 மாவட்டங்கள்…குடியரசு தின விழாவில் அறிவிப்பு? எவை அவை!