தமிழகத்தில் புதிதாக 5 மாவட்டங்கள்…குடியரசு தின விழாவில் அறிவிப்பு? எவை அவை!
5 New Districts In Tamil Nadu: தமிழகத்தில் மேலும் 5 புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு நாளை நடைபெறும் குடியரசு தின விழாவில் அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அது என்னென்ன மாவட்டங்கள் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம் .
நாடு முழுவதும் நாளை திங்கட்கிழமை ( ஜனவரி 26) 77- ஆவது குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதற்காக மத்திய, மாநில அரசுகள் தயாராகி வருகின்றன. இந்த குடியரசு தின விழாவின் போது, மத்திய மற்றும் மாநில அரசுகள் சார்பில் ஏதாவது முக்கிய அறிவிப்பு வெளியிடப்படுவது வழக்கமாகும். அதன்படி, தமிழகத்தில் குடியரசு தின விழாவுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னையில் நாளை காலை காமராஜர் சாலையில் உள்ள பகுதியில் தேசிய கொடியை தமிழக ஆளுநர் ஆர். என். ரவி ஏற்றி வைக்க உள்ளார். இதற்காக பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிகழ்வின் போது, தமிழகத்துக்கு மிக முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில், தமிழகத்தில் மேலும் 5 புதிய மாவட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
5 புதிய மாவட்டங்கள் எவை
இதில், திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு, சேலம் மாவட்டத்தில் ஆத்தூர், கோயம்புத்தூர் மாவட்டத்தில் பொள்ளாச்சி, கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம், தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் ஆகிய பகுதிகள் 5 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை, நாமக்கல், காரைக்குடி, திருவண்ணாமலை, கோவில்பட்டி, பொள்ளாச்சி ஆகிய நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படுவதாகவும், கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில், விழுப்புரம் செஞ்சி உள்பட 19 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க: திமுகவிடம் மக்கள் நீதி மய்யம் குறி வைக்கும் 15 தொகுதிகள்..லிஸ்ட் தயார் செய்த கமலஹாசன்..!




குடியரசு தின-சுதந்திர தின முக்கிய அறிவிப்பு
ஆண்டுதோறும் குடியரசு தின விழா மற்றும் சுதந்திர தின விழாக்களின் போது, மத்திய மற்றும் மாநில அரசுகள் சார்பில் பொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிடப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. இதில், முதியோர்கள், விடுதலை போராட்ட தியாகிகள் உள்ளிட்டோருக்கு அறிவிப்புகள் வெளியிடப்படும். தற்போது, சட்டமன்றத் தேர்தல் வர இருப்பதால் வாக்காளர்களை கவரும் வகையில் இந்த திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்
மேலும், கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரின் போது வாக்காளர்களை கவரும் வகையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கூட்டத் தொடரின் போது, பெரிதளவில் அறிவிப்புகள் ஏதும் வெளியிடப்படவில்லை. இதனால் குடியரசு தின விழாவின் போது தமிழகத்தில் 5 புதிய மாவட்டங்கள் மற்றும் மாநகராட்சிகள், நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும் என்ற முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இது தொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகவும் பரப்பப்பட்டு வருகின்றன. மேற்கண்ட 5 பகுதிகளை மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: புதிய கட்சி தொடங்கிய பண்ருட்டி ராமச்சந்திரன்? தேர்தல் ஆணையத்திலும் பதிவு…கட்சியின் பெயர் என்ன தெரியுமா!