திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம்… நாளை கொடியேற்றத்துடன் துவக்கம் – 10 நாட்கள் நடைபெறும் நிகழ்வு
Karthigai Deepam : திருவண்ணாமலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற அருணாசலேஸ்வரர் கோயிலில் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா நவம்பர் 24, 2025 அன்று திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அடுத்த 10 நாட்களுக்கான நிகழ்ச்சிகள் குறித்த விவரங்கள் தற்போது கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
திருவண்ணாமலை, நவம்பர் 23 : திருவண்ணாமலையில் (Thiruvannamalai) அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற அருணாசலேஸ்வரர் கோயிலில் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா நவம்பர் 24, 2025 அன்று திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக போற்றப்படும் இந்த திருத்தலத்திற்கு, ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் கார்த்திகைத் தீபத் திருவிழாவுக்கு உலகம் முழுவதிலும் இருந்து எண்ணற்ற பக்தர்கள் வருகதை தந்து சிவனை வழிபடுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபம் வருகிற டிசம்பர் 3, 2025 அன்று வெகு சிறப்பாக கொண்டாடப்படவிருக்கிறது. இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
கொடியேற்றத்துடன் துவங்கும் கார்த்திகை தீபத் திருவிழா
உலகெங்கிலும் உள்ள இந்துக்கள் வருகை தரும் கார்த்திகை தீபத் திருவிழா இந்த ஆண்டு டிசம்பர் 3, 2025 அன்று வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், இதற்காக நவம்பர் 24, 2025 நாளை கார்த்திகை தீபத்தை முன்னிட்டு கொடியேற்ற விழா நடைபெறவிருக்கிறது. இந்த விழா திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் சாமி சன்னதியில் உள்ள பொற்கொடி மரத்தில் காலை சரியாக 6 மணியில் இருந்து, 7.15 மணி வரை வெகு சிறப்பாக நடைபெறும். இதன் மூலம் 10 நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா அதிகாரப்பூர்வமாக நவம்பர் 24, 2025 முதல் துவங்குகிறது.
இதையும் படிக்க : மதுரையில் உலகத் தரத்திலான சர்வதேச ஹாக்கி மைதானம் – திறந்து வைத்த உதயநிதி ஸ்டாலின்




ஒவ்வொரு ஆண்டும், இந்த திருவிழாவைக் காண தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்து, அருகில் உள்ள மாநிலங்களில் இருந்தும் வெகு திறளாக கலந்துகொள்வது வழக்கம். திருவண்ணாமலை நகர் முழுவதும் பாதையாத்திரை செல்லும் பக்தர்கள், கடைகள் என கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கப்படுகிறது.
7வது நாள் பஞ்ச மூர்த்திகளின் ரத யாத்திரை
இதனையடுத்து, நவம்பர் 27, 2025 அன்று வெள்ளி கற்பக விருட்சம் மற்றும் வெள்ளி காமதேனு வாகன வழிபாடு நடைபெறும். மேலும் நவம்பர் 28, 2025 அன்று வெள்ளி ரிஷப வாகனம், நவம்பர் 29, 2025 அன்று வெள்ளி ரதம் வழிபாடு நடைபெறும். திருவிழாவின் 7வது நாளான நவம்பர் 30, 2025 அன்று பஞ்ச மூர்த்திகளின் மகா ரத யாத்திரை நடைபெறும்.
இதையும் படிக்க : சேலம் – ஈரோடு புதிய பயணிகள் ரயில் சேவை – தெற்கு ரயில்வே அறிவிப்பு – எப்போது தெரியுமா?
இந்த ரதம் திருவண்ணாமலை நகரின் முக்கிய வீதிகளில் செல்லும் என்பதால் ஏராளமான பக்தர்கள் ஆங்காங்கே நின்று வழிபடுவது வழக்கம். இதனையடுத்து டிசம்பர் 3, 2025 அன்று அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டு, மாலை 6 மணிக்கு மகாதீபம் திருவிழா நடைபெறும். இதனையடுத்து பக்தர்களின் வருகையை கட்டுப்படுத்த திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.