வலுவான புயல் உருவாக வாய்ப்பு.. அடுத்த 2 மாதமும் செம மழை இருக்கு!!
Possibility for cyclone, heavy rain: தமிழகத்தில் அடுத்த வரும் 2 மாதங்களில் அதிகளவில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தனியார் வானிலையாளர் கூறியுள்ளார். அதோடு, வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்ததை விட, மழை அதிகளவில் பெய்யலாம் என்றும் அடுத்தடுத்து புயல் உருவாகவும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கோப்புப் படம்
சென்னை, அக்டோபர் 30: வங்கக்கடலில் வலுவான புயல் உருவாக வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமசந்தர் தெரிவித்துள்ளார். இந்தாண்டு வடக்கிழக்கு பருவமழையானது வழக்கத்தை விட முன்பாக தொடங்கிய நிலையில், வங்கக்கடலில் இரண்டு முறை காற்றழுத்த தாழ்வு உருவாகி அதில் ஒன்று ‘மோன்தா’ புயலாக மாறி ஆந்திரா அருகே கரையைக் கடந்தது. இந்த புயலானது, தமிழகத்தின் வட மாவட்டங்களுக்கு பரவலாக மழையை அளித்தது. இந்நிலையில், மோந்தா புயல் கரையை கடந்தததை தொடர்ந்து, தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு மழைப்பொழிவில் சற்று இடைவெளி ஏற்பட்டுள்ளது. நவம்பர் 4ம் தேதி வரை தமிழகத்தின் சில பகுதிகளில் மட்டும் அதுவும் லேசான மழையே பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Also read: கரையை கடந்த தீவிர புயல்.. தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு.. சென்னையில் எப்படி?
வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பதிவாகி வருகிறது. பொதுவாக நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் புயல் போன்ற நிகழ்வுகளால் மழைக்கான வாய்ப்பு அதிக அளவில் இருக்கும். அந்தவகையில், நடப்பாண்டில் பருவமழை தொடங்கிய நிலையில், முதலில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது. அதன்பிறகு தென்மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் பரவலாக கனமழை பெய்தது. அப்படியே அந்த மழை வடமாவட்டங்களையும் தாக்க தொடங்கியது.
தொடர்ந்து, சமீபத்தில் உருவான மோந்தா புயல் ஆந்திரா நோக்கி சென்றது. இதனால், தமிழகத்தில் எதிர்பார்த்த அளவு மழை பெய்யாமல் போனது. இந்நிலையில், வருகிற நவம்பர், டிசம்பர் மாதங்களில் வலுவான புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார். அதோடு, நவம்பர் 10ஆம் தேதியில் இருந்து மீண்டும் பருவக்காற்று திரும்பி, 15ஆம் தேதிக்கு பிறகு மழை தீவிரம் எடுக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.
குறிப்பாக, புயல் உள்ளிட்ட வானிலை நிகழ்வுகள் (தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலம்) உருவாவதற்கும், கடல் சார்ந்த அலைவுகளை ஈர்ப்பதற்கும் கடலின் வெப்பநிலை மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்றும், இது வங்கக்கடலில் தற்போது சாதகமாக உள்ளதாகவும் அவர் கூறினார். அதோடு, இந்திய பெருங்கடலில் சுமத்ரா கடற்கரை அருகே கடல் மேற்பரப்பில் வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதேநேரத்தில், சோமாலியா கடற்கரை அருகே குளிர்ச்சி நீடிப்பதால், மழைக்கான சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளது என்றார். இந்த மாற்றம் இந்திய பெருங்கடல் இருமுனை எதிர்மறை நிகழ்வு என அழைக்கப்டும். இது அடுத்துவரும் 2 வாரங்களில் மேலும் தீவிரம் அடைய வாய்ப்புள்ளது என்றார்.
Also read: டெல்லியில் சொதப்பிய செயற்கை மழை கான்செப்ட்.. தோல்விக்கு காரணம் சொன்ன ஐஐடி!
அதோடு, ஏற்கனவே இதேபோன்ற நிகழ்வு 2019-ம் ஆண்டில் நிகழ்ந்தபோது, அரபிக்கடலில் அடுத்தடுத்த வானிலை நிகழ்வுகள் உருவாகியதாகவும் அதில் ஒன்று ‘சூப்பர்’ புயலாகவும், ஒன்று அதி தீவிர புயலாகவும், ஒன்று மிக தீவிர புயலாகவும் வலுவடைந்தது. இதுதவிர மற்றவை தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலங்களாக உருவானதையும் அவர் சுட்டிக்காட்டினார். அதுபோன்ற சூழ்நிலை தற்போதும் நிகழ்வதால், இது நல்ல மழையை கொடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.