AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பள்ளிக் கட்டண விவகாரத்தில் அதிரடி உத்தரவு: தனியார் பள்ளிகள் இதை செய்தே ஆகணும்..!

Private School Fee: தனியார் பள்ளிகள் அரசு நிர்ணயித்த கட்டண விவரங்களை விளம்பரப் பலகை மற்றும் விண்ணப்பங்களில் கட்டாயம் அச்சிட வேண்டும் என மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இரண்டரை ஆண்டுகளாகத் தகவல் தராமல் அலட்சியம் காட்டிய மாவட்ட கல்வி அதிகாரிக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டு, மனுதாரருக்கு ரூ.25,000 இழப்பீடு வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.

பள்ளிக் கட்டண விவகாரத்தில் அதிரடி உத்தரவு: தனியார் பள்ளிகள் இதை செய்தே ஆகணும்..!
மாநில தகவல் ஆணையம்Image Source: social media
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 29 May 2026 11:35 AM IST

தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளும், அரசு நிர்ணயம் செய்துள்ள கல்விக் கட்டண விவரங்களை தங்களுடைய பள்ளி விளம்பரப் பலகைகளிலும், சேர்க்கை விண்ணப்பப் படிவங்களிலும் தெளிவாகக் குறிப்பிட வேண்டும் என்று தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம் மிக முக்கியமான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. மாணவர் சேர்க்கை மற்றும் கட்டண விவரங்களில் முழுமையான வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டியது அவசியம் என்பதை வலியுறுத்தி, தனியார் பள்ளிகள் இயக்குநருக்கு இந்த அதிரடி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டப் போராட்டமும் அலட்சிய அதிகாரிகளும்

கோயம்புத்தூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் எம்.லியாகத் அலி என்பவர், கடந்த 2022-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கான அரசு அங்கீகரித்த கட்டண விவரங்களைக் கோரி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். ஆனால், இந்த மனுவை உரிய முறையில் கையாண்டு பதிலளிக்க வேண்டிய முதன்மை கல்வி அலுவலர், அதனை மாவட்ட கல்வி அலுவலருக்கு அனுப்பினார். அவரோ, பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் வகையில் அந்த விண்ணப்பத்தை மாவட்டத்திலுள்ள தனியார் பள்ளிகளின் முதல்வர்களுக்கே அனுப்பி வைத்தார்.

அதிகாரிக்கு கண்டனமும் ரூ.25,000 அபராதமும்

இரண்டரை ஆண்டுகள் கடந்தும் தனக்குரிய தகவல் கிடைக்காததால், லியாகத் அலி மாநில தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த மாநில தகவல் ஆணையர் வி.பி.ஆர்.இளம்பரிதி, தகவல்களை இணையதளத்தில் பார்த்துக்கொள்ளுமாறு அலட்சியமாகப் பதிலளித்த மாவட்ட கல்வி அதிகாரியைக் கடுமையாகக் கண்டித்தார். மேலும், உரிய காலத்தில் தகவல் தராமல் மனுதாரருக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காக, அவருக்கு ரூ.25,000 இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் என்றும் மாவட்ட கல்வி அலுவலருக்கு அதிரடியாக உத்தரவிட்டார்.

விளக்கமளிக்க நேரில் ஆஜராக உத்தரவு

தகவல் கோரிய மனுவை மாவட்ட கல்வி அதிகாரிக்கு மாற்றிய விவகாரத்தில், கோவை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் ஆகிய இருவர் மீதும் ஏன் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பது குறித்து வரும் ஜூன் 15-ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன், மனுதாரர் கேட்ட விபரங்களை இன்னும் இரண்டு வார காலத்திற்குள் அவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் திட்டவட்டமாகக் கூறியுள்ளது.

கட்டண விவரங்களை விளம்பரப்படுத்துவது கட்டாயம்

கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை மிக முக்கியம் எனக் குறிப்பிட்ட ஆணையம், தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளும் அரசு நிர்ணயித்த கட்டண விவரங்களை தங்களின் தகவல் பலகைகளில் மக்கள் பார்க்கும் வண்ணம் வைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும், மாணவர் சேர்க்கை படிவங்களிலேயே வகுப்பு வாரியான கட்டண முறையை அச்சிட வேண்டும் என்றும், இதனை நடைமுறைப்படுத்தி ஜூன் 15-ஆம் தேதிக்குள் தனியார் பள்ளிகள் இயக்குநர் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Follow Us