திருவாரூர், நாகையில் விஜய் பரப்புரை.. தவெக தொண்டர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
TVK Vijay Campaign : தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் 2025 செப்டம்பர் 20ஆம் தேதியான நாளை திருவாரூர், நாகையில் பரப்புரை மேற்கொள்ள உள்ள நிலையில், தவெக தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. கர்ப்பிணிகள், கைக் குழந்தைகளை வைத்திருப்பவர்கள், முதியவர்கள் என யாரும் பரப்புரையில் கலந்து கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை, செப்டம்பர் 19 : தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் 2025 செப்டம்பர் 20ஆம் தேதியான நாளை நாகை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார். இதற்கான ஏற்பாடுகளும் நடந்து முடிந்துள்ளது. 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்களே உள்ளது. இதனால், அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக, அரசியல் களத்திற்கு புதிதாக வந்துள்ள தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கடந்த வாரம் முதல் தனது மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, திருச்சி, அரியலூர் மாவட்டங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். விஜய் பரப்புரையில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்து, மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்றனர்.
இருப்பினும், கடந்த திருச்சி, அரியலூர் பரப்புரையின்போது, விஜய் வாகனத்தை தொண்டர்கள் சூழ்ந்து கொண்டதால், சரியான நேரத்திற்கு பரப்புரை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், பெரம்பலூர் பரப்புரை கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. மேலும், தவெக தொண்டர்கள் பொது சொத்தை சேதப்படுத்தியதற்காகவும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், 2025 செப்டம்பர் 20ஆம் தேதியான நாளை தவெக தலைவர் விஜய் திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இதனையொட்டி, தவெக தொண்டர்களுக்கு அக்கட்சி பொதுச் செயலளார் புஸ்ஸி ஆன்ந்த் அறிவுரை வழங்கி இருக்கிறார்.
Also Read : விஜய் பக்கம் சாயும் டிடிவி தினகரன்… 2026 தேர்தலில் புதிய கூட்டணி.. அவரே சொன்ன விஷயம்!




தவெக தொண்டர்களுக்கு அறிவுரை
இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், “விஜயின் வாகனத்தை யாரும் இருசக்கர வாகங்களில் அல்லது வேறு வாகனங்களில் பின்தொடர கூடாது. மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் கட்டடங்கள், காம்பவுண்ட் சுவர்கள், மரங்கள், மின் விளக்குக் கம்பங்கள் (EB Lamp Posts), மின் கம்பங்கள் (EB Posts), மின்மாற்றிகள் (EB Transformers), வாகனங்கள் (பஸ், வேன், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள்), கொடிக் கம்பங்கள், சிலைகள் ஏதேனும் இருந்தால் அதனைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு கிரில் கம்பிகள் மற்றும் தடுப்புகள் ஆகியவற்றின் அருகில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். கண்டிப்பாக உயரமான இடங்களில் மேலே ஏறக்கூடாது.
கர்ப்பிணிப் பெண்கள், கைக்குழந்தையுடன் இருக்கும் சகோதரிகள், முதியவர்கள், உடல்நலம் குன்றியோர், பள்ளிச் சிறுவர், சிறுமியர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோர், நம் தலைவர் அவர்களின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் நேரில் வந்து கலந்துகொள்வதை தவிர்க்க வேண்டும்.
Also Read : பாஜகவோடு உறவாடுவது யார்? கொள்கை என சொல்லி கொள்ளையடிப்பவர் யார்? – விஜய் பரபரப்பு அறிக்கை..
தலைவர் அவர்களின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் போது, அப்பகுதிகளில் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கும், பொது மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும், பள்ளி மாணாக்கர்களுக்கும், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகளுக்கும் எவ்விதப் போக்குவரத்து இடையூறும் ஏற்படாத வகையில் கலந்துகொள்ள வேண்டும். தலைவர் அவர்களின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் இடங்களிலோ அல்லது அங்கே செல்வது மற்றும் திரும்பி வருவது உள்ளிட்ட வழிகளிலோ சட்டம் ஒழுங்கைப் பேணிப் பாதுகாக்க உதவும் வண்ணம் மிகவும் கண்ணியத்துடன் நடந்துகொள்ள வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.