தவெக 3-ஆம் ஆண்டு தொடக்க விழா..பனையூரில் பிரம்மாண்டமாக நடக்கிறது…விஜய் கொடியேற்றுகிறார்!
TVK 3rd Anniversary: தமிழக வெற்றிக் கழகத்தின் 3- ஆம் ஆண்டு தொடக்க விழா நாளை பனையூரில் நடைபெறுகிறது. இந்த விழாவில் கட்சியின் தலைவர் விஜய் கொடியேற்றி தொங்கி வைக்கிறார். பின்னர், தேர்தல் தொடர்பான முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.

தவெக 3-ஆம் ஆண்டு தொடக்க விழா
தமிழக வெற்றி கழகத்தின் 3- ஆம் ஆண்டு தொடக்க விழா சென்னை, பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நாளை திங்கட்கிழமை ( பிப்ரவரி 2) நடைபெற உள்ளது. இந்த விழாவையொட்டி, கட்சி அலுவலக வளாகத்தில் உள்ள கொடிக்கம்பத்தில் தவெக கொடியை கட்சியின் தலைவர் விஜய் ஏற்றி வைக்க உள்ளார். பின்னர், தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை தலைவர்களுக்கு மரியாதை செலுத்துகிறார். இதைத் தொடர்ந்து, நாட்டுப்புற கலை நிகழ்ச்சி ஆகியவற்றுடன் ஆண்டு விழா தொடங்கி நடைபெறுகிறது. இந்த விழாவில், கட்சியின் தலைவர் விஜய், பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் சிறப்புரை ஆற்றுகின்றனர். இந்த விழாவின் போது, சட்டமன்ற தேர்தல் தொடர்பான முக்கிய அறிவிப்புகளை விஜய் வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், தமிழக வெற்றி கழகத்தின் 3-ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு வழங்குமாறு பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவுறுத்தி உள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் 3 ஆண்டு பயணம்
கடந்த 2024- ஆம் ஆண்டு நடிகர் விஜய் தனது ரசிகர் மன்றத்தை தமிழக வெற்றி கழகமாக மாற்றி அறிவித்தார். இதை தொடர்ந்து, கட்சியை இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து, அதற்காக சிகப்பு, மஞ்சள் வண்ணம், இரு போர் யானைகள் உருவம், வாகை மலர் ஆகியவை பொறித்த கட்சி கொடியை விஜய் அறிமுக செய்தார். இதைத் தொடர்ந்து, தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டை விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி, வி. சாலையில் பிரம்மாண்டமாக நடத்தி முடித்திருந்தார்.
மேலும் படிக்க: திமுக கூட்டணியில் மதிமுக தொடர்வதில் சந்தேகம்?…புயலை கிளப்பிய மல்லை சத்யா!
பிரம்மாண்டமாக நடைபெற்ற 2- ஆவது மாநாடு
இதைத் தொடர்ந்து, 2- ஆவது மாநில மாநாட்டை மதுரையில் பிரம்மாண்டமாக நடத்தி இருந்தார். இந்த இரு மாநாட்டிலும் கூடியிருந்த ரசிகர்களின் கூட்டமும், அந்த மாநாடுகளில் விஜய் பேசியிருந்த விதமும் அரசியல் கட்சிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தன. தற்போது, சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் பணிகளில் தமிழக வெற்றிக் கழகம் தீவிரமாக இறங்கி செயல்பட்டு வருகிறது. இதற்காக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு, தேர்தல் பிரச்சார சட்ட பாதுகாப்பு குழு, தேர்தல் பிரசார குழு ஆகியவற்றை விஜய் அறிவித்துள்ளார்.
தேர்தல் வியூகங்களை வகுக்கும் விஜய்
அதன்படி, இன்று தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு மதுரையில் முதல் மக்கள் சந்திப்பை நடத்தியுள்ளது. மேலும், அடுத்த கட்ட அரசியல் நகர்வுகளில் தமிழக வெற்றி கழகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தேர்தல் வெற்றியை மையமாக வைத்து விஜய் பல்வேறு வியூகங்களை வகுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறாக தமிழக வெற்றி கழகத்தின் அரசியல் பயணம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மேலும் படிக்க: தவெக தலைவர் விஜய் செய்தியாளர்கள் சந்திப்பு…எப்போது தெரியுமா..அருண் ராஜ் கூறிய பதில்!