தமிழக இளைஞர்களை தவெக தவறாக வழி நடத்துகிறது…பி.டி.செல்வகுமார் கடும் தாக்கு!
Tamil Nadu youth Are Being Misled By The Tvk: தமிழக இளைஞர்களை தமிழக வெற்றிக் கழகம் தவறாக வழி நடத்துகிறது. விஜய்யால் தனித்துவமான, திறமையான ஆட்சியை வழங்க முடியாது என்று அவரது முன்னாள் மேலாளர் பி.டி.செல்வ குமார் தெரிவித்தார்.

இளைஞர்களை தவறாக வழி நடத்தும் தவெக
இது தொடர்பாக பி. டி. செல்வகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நான் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் பி. ஆர். ஓ. வாகவும், மேலாளராகவும் 28 ஆண்டுகளாக பணிபுரிந்துள்ளேன். நான் விஜயிடமிருந்து விலகி திமுகவில் இணைந்ததில் இந்த சுயநலமும் கிடையாது. விஜய் நடித்த புலி படம் வெளியிட்டின் போது, ஏற்பட்ட சிக்கலை தொடர்ந்து, என்னை விஜய் தவிர்த்து வந்தார். அதன் பின்னர் நான் கலப்பை மக்கள் இயக்கத்தை தொடங்கி நடத்தி வருகிறேன். இதன் மூலம் 40 அரசு பள்ளிகளை தத்தெடுத்து கலையரங்கங்கள் உள்ளிட்டவற்றைக் கட்டி கொடுத்துள்ளேன். அண்மையில் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்ட என்னை விஜய் தொடர்பு கொண்டு நலம் விசாரிக்கவில்லை. அவரிடம் 28 ஆண்டுகள் பணிபுரிந்த நிலையில், என் நலன் குறித்து அவர் யோசிக்கவில்லை என்றே தெரிகிறது. இதன் காரணமாகவே நான் திமுகவில் இணைந்தேன். நான் மக்கள் பணியை செய்வதற்கு திமுகவின் துணை தேவைப்படுகிறது.
தவெகவில் உழைப்பவர்களுக்கு பதவி இல்லை
விஜய் மக்கள் இயக்கத்தில் உழைப்பவர்களுக்கு பதவி அளிப்போம் என்று கூறினார்கள். ஆனால், மார்ட்டின், ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார், செங்கோட்டையன் ஆகியோருக்கு பதவி அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் விஜய் மக்கள் இயக்கத்தில் என்ன தொண்டு செய்துள்ளனர். ரசிகர் மன்றத்தில் இருப்பவர்களுக்கு நிச்சயம் பதவி வழங்கப்படும் என்று புஸ்ஸி ஆனந்த் தெரிவித்திருந்தார். ஆனால், அவ்வாறு நடைபெறவில்லை.
மேலும் படிக்க: தீபத்தூண் மேல்முறையீட்டு வழக்கு…உத்தரவை நிறைவேற்ற தனி நீதிபதி அவசரப்படுத்தியது ஏன்…உயர்நீதிமன்றம் கேள்வி!
இளைஞர்களை தவெக தவறாக வழி நடத்துகிறது
தமிழக இளைஞர்களை தமிழக வெற்றிக் கழகம் தவறாக வழி நடத்துகிறது. தமிழக வெற்றிக் கழகம் கட்டமைப்பதற்கு நானும், எஸ்.ஏ சந்திரசேகரும் தான் பின்புலமாக இருந்தோம். புதுச்சேரியை சேர்ந்த புஸ்ஸி ஆனந்த் தமிழகத்தை சேர்ந்தவர்களை முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறார். விஜய் திறமையாளர்களை தன்னுடன் வைத்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில், வரும் தேர்தலில் தமிழக மக்கள் பாடம் புகட்டுவார்கள்.
கரூர் சம்பவ உயிரிழப்புக்கு விஜய் தான் காரணம்
கரூர் மாநாட்டுக்கு விஜய் உரிய நேரத்தில் வந்திருந்தால் அந்த உயிரிழப்பு சம்பவம் நிகழ்ந்திருக்காது. விஜய் இன்னும் அதிகளவு பக்குவப்பட வேண்டும். தமிழக வெற்றிக் கழகம் அனைவரிடமும் பணத்தை வாங்குவதால் எதிர் காலத்தில் எப்படி தூய்மையான ஆட்சியை தருவார்கள். எனவே, விஜயால் தனித்துவமான, திறமையான நிர்வாகத்தை கொடுக்க முடியாது. தூண்டுதலின் பேரில்தான், விஜய் முதல்வர் மு. க. ஸ்டாலினை கடுமையாக விமர்சித்து வருகிறார். புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் ஆகியோர் தமிழக வெற்றிக் கழகத்தில் பணம் மற்றும் பதவிக்காக மட்டுமே வந்துள்ளனர் என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: இவ்வளவு குனிந்து கும்பிடும் போடும் உங்கள் கட்சிக்கு அதிமுக என்ற பெயர் எதற்கு? – முதல்வர் ஸ்டாலின் காட்டம்..