Tamil Nadu BJP : நயினார் நாகேந்திரனின் மகனுக்கு பொறுப்பு… 25 பதவிகளுக்கு புதிய நிர்வாகிகள்..
தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் மகன் நயினார் பாலாஜிக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு பிரிவுகளுக்கு 25 புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் கட்சிக்குள் பல்வேறு கருத்து வேறுபாடுகள் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ்நாடு, செப்டம்பர் 5: தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியில் மாநில தலைவரான நயினார் நாகேந்திரன் தனது மகனுக்கு புதிய பொறுப்பு ஒன்றை வழங்கியுள்ளது அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் ஒவ்வொரு தலைவர்களும் தங்களது கட்சியின் அடிமட்டம் வரை பல்வேறு வகையான மாற்றங்களை மேற்கொண்டு வருகின்றனர் அந்த வகையில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவராக கடந்த ஏப்ரல் மாதம் நயினார் நாகேந்திரன் பதவியேற்றார். இதனை தொடர்ந்து அவர் முந்தைய தலைவர் அண்ணாமலை போல் அல்லாமல் நிதானமாக தனது ஒவ்வொரு நடவடிக்கையாக மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் பாஜகவில் 25 பதவிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.
மகனுக்கு புதிய பொறுப்பு
சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவு, விருந்தோம்பல் பிரிவு, ஆன்மீக மற்றும் கோயில் மேம்பாட்டு பிரிவு, தேசிய மொழிகள் பிரிவு, அரசு தொடர்பு மற்றும் மத்தியில் நலத்திட்டங்கள் பிரிவு, விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு என மொத்தம் 25 பிரிவுகள் பிரிக்கப்பட்டது. இதில் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு பொறுப்பாளராக நயினார் நாகேந்திரனின் மகன் நயினார் பாலாஜி நியமிக்கப்பட்டு இருக்கிறார். இது கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருப்பதாக சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: திமுக கூட்டணிக்குள் சிக்கி தவிக்கிறார் திருமாவளவன்.. நயினார் நாகேந்திரன் பளீச் பதில்!
இதே போல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவுக்கு கோபிநாத், அரசு தொடர்பு மற்றும் மத்திய நலத்திட்டங்கள் பிரிவுக்கு சூரிய நாராயணன், விருந்தோம்பல் பிரிவுக்கு கந்தவேல் மற்றும் சுரேஷ், ஆன்மீக மற்றும் கோயில் மேம்பாட்டு பிரிவுக்கு ஜோதிடர் ஷெல்வி, தன்னார்வ தொண்டு நிறுவன பிரிவுக்கு அர்ஜுன மூர்த்தி மற்றும் சங்கீதா ரங்கராஜன், பிரச்சார பிரிவுக்கு பாண்டியராஜ், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவுக்கு பாஸ்கரன் மற்றும் வசந்த ராஜன், அமைப்புசாரா தொழிலாளர்கள் பிரிவுக்கு ராதாகிருஷ்ணன், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் பிரிவுக்கு மாரியப்பன், வர்த்தகர் பிரிவுக்கு சதீஷ் ராஜா, பொருளாதார பிரிவுக்கு காயத்ரி சுரேஷ், அயலக தமிழர் பிரிவுக்கு கே.எம். சுந்தரம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மகனுக்கு பாஜகவில் புதிய பொறுப்பு வழங்கப்பட்டதன் மூலம் நயினார் நாகேந்திரன் தன்னை போல் அரசியலில் மகனையும் கொண்டு வர வேண்டும் என்ற முனைப்பில் இருப்பதாக அரசியல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். அதிமுகவில் இருந்த நயினார் நாகேந்திரன் ஒரு கட்டத்தில் பாஜகவுக்கு மாறினார். அதன் பின்னர் பாஜக மாநில தலைவர் பதவி அவரை தேடி வந்தது.
அப்படியான நிலையில் தனக்கு பின்னால் மகன் அரசியலில் மிகப்பெரிய ஆளுமையாக விளங்க வேண்டும் என்பதில் நயினார் நாகேந்திரன் உறுதியாக இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது. அதற்கான ஆரம்ப கட்டமாக தான் இந்த பதவியானது வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் பயன்படுத்திய கார் எண்.. நயினார் நாகேந்திரனுக்கு ரெடியான பிரச்சார வாகனம்..
அலிஷா அப்துல்லா பதிவு
இதற்கிடையில் பாஜகவில் இருக்கும் பைக் பந்தய வீராங்கனையான அலிஷா அப்துல்லா புதிய பதவிகளுக்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளதற்கு அதிருப்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது சமூக வலைதளப்பக்கத்தில் அவர், “நான் பாஜகவில் பிரதமர் மோடி மற்றும் அண்ணாமலைக்காக மட்டுமே இணைந்தேன். மதம் இல்லை சாதி இல்லை வெறும் கடின உழைப்பு மட்டும் என்ற அவர்களின் பார்வை மிகவும் தெளிவாக உள்ளது. நான் இந்த கட்சிக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக இரவு பகலாக கடினமாக உழைத்தேன்.
I had joined @BJP4TamilNadu @BJP4India only for @PMOIndia and @annamalai_k because their vision is very clear, No religion ! No caste ! Just pure hardwork, being a renowned sports personality of India, this is very dishearting to see this I have worked 3 yrs really hard for this… pic.twitter.com/Dfb72Sn89c
— Dr. Alisha Abdullah (@alishaabdullah) September 4, 2025
ஆனால் துரதிஷ்டவசமாக கடந்த 12 ஆண்டுகளாக கட்சியில் இருக்கும் கேசவன் விநாயகம் எந்த நல்ல காரியமும் செய்யவில்லை. நான் எனது வேலையை காண்பிக்க, அவரை அணுகிய போது அவர் என்னை அவமானப்படுத்திவிட்டு சென்றுவிட்டார். இங்கு முஸ்லிம்களுக்கு இடமில்லை என்பதை நிரூபிக்கிறது. எனது அனைத்து கடின உழைப்பும் வீணாகிப் போனது வருத்தமாக உள்ளது.