Sea Level: உயரப்போகும் கடல் மட்டம்.. சென்னை, நாகைக்கு காத்திருக்கும் ஆபத்து!
புதிய ஆய்வின்படி, 2100 ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் கடல் மட்டம் 78.15 செ.மீ வரை உயரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை மையத்தின் இந்த ஆய்வில், NOAA மற்றும் PSMSL தரவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதில் நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர் மாவட்டங்கள் அதிக ஆபத்தில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

சென்னை, செப்டம்பர் 5: 2100 ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாடு கடல் மட்டம் 78.15 செ.மீ வரை உயரக்கூடும் என்று ஒரு புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோட்பாடு மற்றும் பயன்பாட்டு காலநிலையியல் என்ற இதழில் இந்த ஆராய்ச்சி முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவின் கடற்கரையோரத்தில் உள்ள அபாயங்களை வரலாற்று தரவுகள் மற்றும் எதிர்கால காலநிலை மாதிரிகளைப் பயன்படுத்தி மதிப்பிடப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை மையத்தின் ஓய்வு பெற்ற பேராசிரியரான ஏ. ராமச்சந்திரன் இந்த ஆய்வுக்கு தலைமை தாங்கினார். 1992 ஆம் ஆண்டு மற்றும் 2023 க்கு இடைப்பட்ட காலகத்தில் NOAA எனப்படும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட தேசிய பெருங்கடல் மற்றும் PSMSL என அழைக்கப்படும் வளிமண்டல நிர்வாகத்தின் செயற்கைக்கோள் உயர அளவீட்டுத் தரவையும், சராசரி கடல் மட்டத்திற்கான நிரந்தர சேவையின் அலை அளவீட்டு பதிவுகளையும் இந்த குழு பகுப்பாய்வு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
IPCC என்னும் காலநிலை மாற்றம் குறித்த அரசுகளுக்கிடையேயான குழுவின் ஆறாவது மதிப்பீட்டு அறிக்கைக்கு ஏற்ப சிம்கிளிம் என்ற மென்பொருளைப் பயன்படுத்தி எதிர்கால கணிப்புகள் உருவாக்கப்பட்டது. மேலும் வெவ்வேறு பகிரப்பட்ட சமூக பொருளாதார அறிக்கைகளின் கீழ் கடல் மட்ட உயர்வை உருவகப்படுத்த 39 உலகளாவிய காலநிலை மாதிரிகளின் தரவுகள் பயன்படுத்தப்பட்டது.
இதையும் படிங்க: 5 ஆண்டுகளில் ஏஐ பல வேலைகளை மாற்றி அமைக்கும் – கூகுள் டீப் மைண்ட் சிஇஓ எச்சரிக்கை
247 கடலோரப் புள்ளிகளுக்கான கணிப்புகள் ஒவ்வொரு 4 கி.மீ இடைவெளியில்கணக்கிடப்பட்டு, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் மாவட்ட அளவில் ஒருங்கிணைக்கப்பட்டன. இதில் தமிழ்நாட்டில் உள்ள அலை அளவீட்டு நிலையங்கள் சீரற்ற போக்குகளைக் காட்டுவது தெரிய வந்துள்ளது. அதன்படி தூத்துக்குடியில் ஆண்டுக்கு மைனஸ் 0.17 மிமீ, நாகப்பட்டினத்தில் ஆண்டுக்கு மைனஸ் 0.18 மிமீ, சென்னையில் ஆண்டுக்கு மைனஸ் 0.55 மிமீ பதிவாகியுள்ளன. இவை குறுகிய கால மாறுபாடுகளாக இருந்தாலும், நீண்ட கால போக்குடன் கூடிய உலகளாவிய மற்றும் வங்காள விரிகுடா வடிவங்களுடன் ஒத்துப்போகும் வகையில் ஒட்டுமொத்த அதிகரிப்பைக் காட்டுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இதில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நாகப்பட்டினம் மாவட்டம் அதன் தாழ்வான நிலப்பரப்பு காரணமாகவும், வெள்ளம் மற்றும் அரிப்பை அதிகரிக்கும் பல நதி சங்கமங்கள் காரணமாகவும் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மாவட்டமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும் திருவாரூர், கடலூர் மற்றும் சென்னையின் சில பகுதிகளின் கடலோரப் பகுதிகளும் ஆபத்தில் உள்ளன என்று ஓய்வு பெற்ற பேராசிரியரான ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: காத்திருக்கும் பேரழிவு.. 5 ஆண்டுகளில் உச்சமடையும் வெப்பநிலை.. வறட்சி, அதிக மழை பொழிவு ஏற்படும் அபாயம்!
கடல் மட்டம் உயர முக்கிய காரணிகளில் ஒன்றாக வெப்பமயமாதல் இருப்பதாகவும், வெப்பமான மேற்பரப்பு நீர் மற்றும் அதிக நன்னீர் வரத்து காரணமாக தமிழ்நாடு இந்த மாற்றத்திற்கு தயாராவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1991 மற்றும் 2023 க்கு இடைப்பட்ட காலத்தில் வங்காள விரிகுடா கடற்கரையில் 62 புயல்கள் பதிவாகியுள்ளது. ஆனால் அரபிக் கடலில் வெறும் 9 புயல்கள் மட்டுமே பதிவாகியுள்ளன. இதில் 67% கடுமையான புயல்கள் பருவமழைக்குப் பிந்தைய காலத்தில் ஏற்பட்டுள்ளது. மேலும் புயலால் கடல் மட்டம் உயர்ந்து கடலோர மாவட்டங்களில் வெள்ளமானது மேலும் அதிகரிக்கும்.
இதற்கு கடல் சுவர்கள் மற்றும் கடல் நீர்மட்டம் உயர்வதற்கான தடைகள்,சதுப்புநில காடுகளை மீட்டெடுப்பது மற்றும் கடற்கரையோரங்களில் வாழும் வாழ்க்கை முறை போன்ற இயற்கை சார்ந்த விஷயங்கள் தீர்வுகளாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.