தமிழக ஆளுநர் அர்லேகரை நேரில் சந்திக்கும் முதல்வர் விஜய்.. என்ன காரணம்?
தமிழகம் உள்ளிட்ட ஆறு மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டார். இதன்படி, தமிழகத்தின் முழுநேர ஆளுநராக ஆர்.வி. அர்லேகர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்தைத் தொடர்ந்து, சமூக வலைதளம் வாயிலாக ஆளுநருக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்திருந்தார். தற்போது நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க உள்ளார்.
அக்டோபர் 15, 2026: தமிழகத்தின் முழுநேர ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.வி. அர்லேகரை, முதலமைச்சர் விஜய் இன்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க உள்ளார். சென்னை கிண்டியில் உள்ள லோக் பவனில் இந்தச் சந்திப்பு நடைபெற உள்ளது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், முதலமைச்சர் மற்றும் ஆளுநர் இடையிலான இந்தச் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
பொறுப்பு ஆளுநராக இருந்த அர்லேகர்
தமிழக ஆளுநராக இருந்த ஆர்.என். ரவி, கடந்த மார்ச் 5ஆம் தேதி மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, கேரள மாநில ஆளுநராக இருந்த ஆர்.வி.ஆர். அர்லேகர், தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் ஆதரவு கிடைத்த நிலையில், ஆட்சியமைக்க உரிமை கோரி விஜய் ஆளுநரிடம் கடிதம் வழங்கினார்.
முதல்வர் விஜய்க்கு பதவிபிரமாணம் செய்த பொறுப்பு ஆளுநர் :
சட்டப்பேரவையில் பெரும்பான்மைக்கு 118 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்பட்ட நிலையில், அந்த எண்ணிக்கையை நிரூபித்த பிறகே பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும் என ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, பெரும்பான்மை ஆதரவை உறுதி செய்த விஜய், மே 10ஆம் தேதி தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றார். அவருக்குப் பொறுப்பு ஆளுநராக இருந்த அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
மேலும் படிக்க: “நான் பேசுவது போர் அடிக்கிறதா?”.. மேடையிலேயே மோதிக்கொண்ட சேகர் பாபு – தவெக எம்எல்ஏ விஜயதாமு.. ஆய்வுக்கூட்டத்தில் பரபரப்பு!!
முழுநேர ஆளுநராக நியமனம்
இதற்கிடையே, தமிழகத்திற்கு புதிய ஆளுநர் நியமிக்கப்பட உள்ளதாகப் பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில், தமிழகம் உள்ளிட்ட ஆறு மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டார். இதன்படி, தமிழகத்தின் முழுநேர ஆளுநராக ஆர்.வி. அர்லேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் படிக்க: சென்னையில் 1,000 ஏசி மின்சாரப் பேருந்துகளுக்கான டெண்டர் ரத்து! என்ன காரணம்?
இந்த நியமனத்தைத் தொடர்ந்து, சமூக வலைதளம் வாயிலாக ஆளுநருக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்திருந்தார். தற்போது நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க உள்ளார்.
முந்தைய திமுக ஆட்சியில் ஆளுநருக்கும் மாநில அரசுக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தன. இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையிலான அணுகுமுறை எவ்வாறு அமையும் என்பது அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.