தூய்மை பணியாளர்களுக்கு 6 சிறப்பு திட்டங்கள்.. என்னென்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு
Chennai Conservancy Workers : தூய்மை பணியாளர்களுக்காக 6 புதிய சிறப்பு திட்டங்களை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். போராட்டம் நடத்தி வந்த தூய்மை பணியாளர்கள் 2025 ஆகஸ்ட் 13ஆம் தேதியான நேற்று இரவு கைது செய்யப்பட்ட நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சென்னை, ஆகஸ்ட் 14 : தூய்மை பணியாளர்களுக்கு 6 புதிய சிறப்பு திட்டங்களை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். இந்த சிறப்பு திட்டங்களுக்கு தமிழக அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தூய்மை பணியாளர்கள் நடத்தி வந்த நிலையில், நீதிமன்ற உத்தரவின்படி, போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக அழைத்து சென்றநிலையில், இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. 2025 ஆகஸ்ட் 14ஆம் தேதியான இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், பல்வேறு திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதில், தூய்மை பணியாளர்கள் குறித்தும் பேசப்பட்டது. இதில், தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகையில், ” தூய்மை பணியாளர்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு திட்டம் கொண்டு வரப்படும். தூய்மை பணியாளர்களுக்கு தோல் சம்பந்தப்பட்ட பிரச்னை ஏற்பட உள்ளதால், அதற்கு சிசிச்சை அளிக்க தனித்திட்டம் செயல்படுத்தப்படும். பணியின்போது மரணம் அடையும் பணியாளர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் கிடைக்கப்படும். தூய்மை பணியாளர்கள் சுய தொழில் தொடங்கும்போது, அவர்களுக்கு ரூ.3.50 லட்சம் வரை மானியமாக வழங்கப்படும்.




Also Read : 8ஆம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி.. தூய்மை பணியாளர்கள் போராட்டம் தொடரும் என திட்டவட்டம்..
தூய்மை பணியாளர்களுக்கு 6 சிறப்பு திட்டங்கள்
இதற்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நகர்ப்புறங்களில் சொந்த வீடு இல்லாத தூய்மை பணியாளர்களுக்கு ரூ.30000 புதிய குடியிருப்புகள் அமைத்து தரப்படும். கிராமப்புறங்களில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீட்டில் முன்னுரிமை அளிக்கப்படும்.
தூய்மை பணியாளர்களுக்கு ரூ.5 லட்சம் இலவச காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படும். தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளில் கட்டணமின்றி வழங்கப்படும். இத்திட்டம் முதற்கட்டமாக சென்னையில் தொடங்கப்படும் எனவும் விரைவில் மற்ற இடங்களில் விரிவுப்படுத்தப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
தூய்மை பணியாளர்கள் கைது ஏன்?
தொடர்ந்து பேசிய அவர், “அரசு தூய்மை பணியாளர்களின் நலனில் அக்கறை கொண்டுள்ளது. தூய்மை பணியாளர்கள் பணிக்கு திரும்ப வேண்டும். முதல்வருக்கு தூய்மை பணியாளர்கள் மீது தனி கரிசனம் உள்ளது. தூய்மை பணியாளர்களின் நலனை காப்பதில் அரசு உறுதியாக உள்ளது. நீதிமன்ற உத்தரவால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
Also Read : தொடர் போராட்டம்.. தூய்மை பணியாளர்கள் மீது நடவடிக்கை.. சென்னை ஐகோர்ட் உத்தரவு
பலவந்தமாக வெளியேற்ற வேண்டும் என்ற நோக்கம் அரசுக்கு இல்லை. தனியார் மயம் என்பது மற்ற மண்டலங்களில் உள்ள நடைமுறைதான். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்களுடன் 12 கட்டமாக பேச்சுவார்த்தை நடந்தது. அனைவரும் வேலை நிறுத்தத்தை கைவிட வேண்டும். அரசின் கதவுகள் பேச்சுவார்த்தைக்கு திறந்திருக்கும்” என கூறினார்.
“ உங்களுக்காக நிற்கும் எளியோரின் அரசு”
🧹 நாளும் நம் நகரங்கள் இயங்க நள்ளிரவு, புயல், மழை, வெள்ளம் என எந்நேரமும் ஓயாமல் உழைக்கும் தூய்மைப் பணியாளர்களின் மாண்பினை நமது #DravidianModel அரசு ஒருபோதும் விட்டுக்கொடுக்காது.
4 ஆண்டுகளில் அவர்களுக்காக நாம் நிறைவேற்றியுள்ள பல நலத்திட்டங்களோடு, அவர்களின் மற்ற நியாயமான… pic.twitter.com/PEpSAiqZzq
— M.K.Stalin (@mkstalin) August 14, 2025
இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், “நாளும் நம் நகரங்கள் இயங்க நள்ளிரவு, புயல், மழை, வெள்ளம் என எந்நேரமும் ஓயாமல் உழைக்கும் தூய்மைப் பணியாளர்களின் மாண்பினை நமது திராவிட மாடல் அரசு ஒருபோதும் விட்டுக்கொடுக்காது. 4 ஆண்டுகளில் அவர்களுக்காக நாம் நிறைவேற்றியுள்ள பல நலத்திட்டங்களோடு, அவர்களின் மற்ற நியாயமான கோரிக்கைகளையும் பரிசீலிப்போம். இது என்றும் உங்களுடன் உங்களுக்காக நிற்கும் எளியோரின் அரசு” என தெரிவித்தார்.