8ஆம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி.. தூய்மை பணியாளர்கள் போராட்டம் தொடரும் என திட்டவட்டம்..
Sanitization Workers Protest: சென்னையில் தொடர்ந்து 13 வது நாளாக தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் 8ஆம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து, போராட்டம் தொடரும் எனவும் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை என்பது தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் மட்டும் தான் நடக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

சென்னை, ஆகஸ்ட் 13, 2025: சென்னையில் இருக்கக்கூடிய தூய்மை பணியாளர்கள் தொடர்ந்து 13 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை மாநகராட்சியில் இருக்கக்கூடிய ஐந்து மற்றும் ஆறாவது மண்டலங்களில் தூய்மை பணியாளர்களை ரூபாய் 256 கோடிக்கு தனியார் நிறுவனத்திற்கு வழங்கி 2025 ஜூலை 16ஆம் தேதி மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னை மாநகராட்சியின் தூய்மை பணியாளர்கள் தனியாருக்கு விடப்பட்ட நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆகஸ்ட் 1, 2025 முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதாவது பணி நிரந்தரம் செய்ய வேண்டும் தனியார் மயமாக்கக்கூடாது என்று கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
தூய்மை பணியாளர்களுக்கு அரசியல் கட்சியினர் ஆதரவு:
தூய்மை பணியாளர்களின் இந்த போராட்டத்திற்கு பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்த வருகின்றனர் அதிமுக தமிழக வெற்றி கழகம் நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இரவு பகல் பாராமல் மழை வெயிலையும் பொருட்படுத்தாமல் 300க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் அங்கேயே டெண்டுகள் அமைத்து அங்கேயே தங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: திரையுலகில் 50 ஆண்டுகள்…. ரஜினிகாந்த்திற்கு கமல்ஹாசன் வாழ்த்து
இந்த நிலையில் இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீ வஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் அடங்கி அமரவும் விசாரணைக்கு வந்தது. அப்போது போராட்டம் காரணமாக போக்குவரத்து பாதிப்பதோடு பொதுமக்கள் நடைபாதை பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
தூய்மை பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு:
மேலும் தமிழக அரசு தரப்பில் போராட்டத்தை கைவிடும் படி கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதும் அவர்கள் தொடர்ந்து அந்த இடத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களாக கலைந்து செல்ல வலியுறுத்த வேண்டும் என மனுதாரர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதனை கேட்ட நீதிபதிகள் அனுமதியின்றி நடைபாதையை ஆக்கிரமித்து போராட்டம் நடத்த முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மேலும் சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கவும் காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் படிக்க: ஆளுநரிடம் இருந்து பட்டம் பெற மறுத்த மாணவி.. நெல்லை பல்கலைக்கழகத்தில் பரபரப்பு..
போராட்டம் தொடரும் என உறுதி:
13 வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபடும் தூய்மை பணியாளர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு பெரும் கதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று (ஆகஸ்ட் 13, 2025) அமைச்சர் சேகர்பாபு, அமைச்சர் கே.என். நேரு தலைமையில் எட்டாம் கட்ட பேச்சுவார்த்தையானது நடைபெற்றது. ஆனால் இந்த பேச்சுவார்த்தை சில நிமிடங்களை நடைபெற்ற நிலையில் இதில் தீர்வு எட்டப்படவில்லை.
எனவே இது தொடர்பாக பேசிய தூய்மை பணியாளரகள், தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் காவல்துறையின் நடவடிக்கை எடுத்தாலும் சிறையில் இருந்து போராடுவோம் எனவும் வேலைக்கு திரும்ப மாட்டோம் எனவும் தெரிவித்துள்ளனர். மேலும் இனி பேச்சு வார்த்தை என்று ஒன்று நடந்தால் அது தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் மட்டுமே நடைபெறும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.