Diwali 2025: தீபாவளிக்கு ஈஸியா ஊருக்கு போகணுமா? – போலீசார் சொன்ன அட்வைஸ்!

Chennai Traffic Changes: 2025 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை புறநகர் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க தாம்பரம் காவல் துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அக்டோபர் 17, 18, 21, 22 தேதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கிளாம்பாக்கத்திலிருந்து சிறப்புப் பேருந்துகளும், கூடுதல் மின்சார ரயில்களும் இயக்கப்படுகிறது.

Diwali 2025: தீபாவளிக்கு ஈஸியா ஊருக்கு போகணுமா? - போலீசார் சொன்ன அட்வைஸ்!

தீபாவளி - போக்குவரத்து மாற்றம்

Updated On: 

16 Oct 2025 07:22 AM

 IST

சென்னை, அக்டோபர் 16: 2025 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகை நெருங்கியுள்ள நிலையில் சென்னை புறநகர் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு தாம்பரம் மாநகர காவல்துறை மிக முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 20ஆம் தேதி திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சென்னையில் வசிக்கும் மற்றும் பணியாற்றி வரும் வெளியூர் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணப்பட திட்டமிட்டு வருகின்றனர். ரயில்கள், அரசு பேருந்து, தனியார் பேருந்து, சொந்த வாகனங்கள் என பலவித முறைகளில் மக்கள் பயணப்படும் நிலையில் மிகப்பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் ஒவ்வொரு ஆண்டும் ஏற்படுவது வழக்கம்.

இதனை சமாளிக்க போக்குவரத்து போலீசாரும் உரிய அறிவுரைகளை வழங்கி வருகிறார்கள். அந்த வகையில் சென்னையின் புறநகர் பகுதியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 17,18 மற்றும் அக்டோபர் 21,22 ஆகிய நான்கு நாட்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தாம்பரம் மாநகர காவல் துறையினர் அறிவித்துள்ளனர்.

Also Read: ஆம்னி பேருந்து கட்டணக் கொள்ளை.. புகாரளிக்க எண்கள் அறிவிப்பு!

பயணிகளுக்கு அறிவிப்பு

புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், சீர்காழி, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு பயணிக்கும் பயணிகள் நெரிசலற்ற பயணத்தை மேற்கொள்ள ஓஎம்ஆர் மற்றும் இசிஆர் வழித்தடங்களை புறப்படுவதற்கும், ஊருக்கு சென்று திரும்பி வருவதற்கும் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதே போல் சாலையில் ஏற்படும் நெரிசலை தவிர்க்க சிறப்பு மின்சார ரயில்கள் வழக்கமான இடைவெளியில் இயக்கப்படும் எனவும், பயணிகள் வசதிக்காக கிளாம்பாக்கம் நூற்றாண்டு பேருந்து நிலையத்திலிருந்து பல்வேறு சிறப்பு பேருந்துகள் அக்டோபர் 16ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை இயக்கப்பட உள்ளதால் அதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Also Read: தீபாவளி டிமாண்ட் ; கட்டணத்தை அதிரடியாக குறைத்த ஆம்னி பேருந்துகள் ; எவ்வளவு தெரியுமா?

மேலும் அக்டோபர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் தீபாவளி விடுமுறை முடிந்து சென்னைக்குள் திரும்பும் மக்களின் பயணத்தை விரைவுப்படுத்தும் வகையில் காட்டாங்குளத்தூர், மறைமலைநகர் மற்றும் பொத்தேரி ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து கூடுதலாக புறநகர் ரயில்கள் இயக்கப்படுகிறது. எனவே பயணிகள் இந்த ரயில் சேவை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

கனரக வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை

அக்டோபர் 17 மற்றும் 18ம் தேதிகளில் பிற்பகல் 2 மணி முதல் கனரக வாகனங்களுக்கான போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னை மற்றும் ஆவடி பகுதிகளிலிருந்து வரும் வாகனங்கள் பூந்தமல்லியில் இருந்து திருப்பி விடப்பட்டு ஸ்ரீபெரும்புதூர், திருவண்ணாமலை, திருக்கோவிலூர் வழியாக ஜிஎஸ்டி சாலையை சென்று தங்கள் இலக்கை அடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் மதுரவாயல் பகுதியில் இருந்து தாம்பரம், ஜிஎஸ்டி சாலை நோக்கி வரும் வாகனங்கள் மதுரவாயலில் திருப்பி விடப்பட்டு ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருக்கோவிலூர் வழியாக சென்று ஜிஎஸ்டி சாலையை அடைய வேண்டும்.காஞ்சிபுரத்திலிருந்து வாலாஜாபாத் வழியாக ஓட்டேரி நோக்கி வரும் வாகனங்கள் ஒரகடம் சந்திப்பில் திரும்பி ஸ்ரீபெரும்புதூர், திருவண்ணாமலை, திருக்கோவிலூர் வழியாக ஜிஎஸ்டி சாலையை சென்று அடையலாம்.

அதேபோல் அக்டோபர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் பிற்பகல் 2 மணி முதல் செங்கல்பட்டு வழியாக வரும் கனராக வாகனங்கள் அனைத்தும் காஞ்சிபுரம் சாலை வழியாக திரும்பி வாலாஜாபாத், காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் வழியாக பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வந்து சென்னைக்குள் வரலாம்.

சிங்கப்பெருமாள் கோயில் வழியாக வரும் கனரக வாகனங்கள் ஒரகடம் சந்திப்பில் திரும்பி ஸ்ரீபெரும்புதூர் வந்து மீண்டும் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மூலம் சென்னைக்குள் வரலாம். இந்த நேரத்தில் இரும்புலியூர் பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் உடனடியாக வண்டலூர் வெளிவட்டச் சாலை மற்றும் மதுரவாயல் புறவழிச்சாலை வழியாக வாகனங்கள் திருப்பி விடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.