துணைவேந்தர் நியமன வழக்கு – தமிழக அரசுக்கு ஆதரவாக வந்த தீர்ப்பு – என்ன நடந்தது?
Vice-Chancellors Appointment Case : தமிழக அரசு பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கை 6 வாரங்களுக்குள் முடித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை, பிப்ரவரி 4 : தமிழக பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தடை உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும், இந்த வழக்கை ஆறு வாரங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசு பல்கலைக்கழகங்களில் வேந்தராக இருந்த ஆளுநரின் அதிகாரங்களை மாற்றி, அந்த அதிகாரங்களை தமிழக முதல்வருக்கு வழங்கும் வகையில் தமிழக அரசு சட்ட திருத்தங்களை மேற்கொண்டது. இந்த சட்டங்களின் மூலம் பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் பொறுப்பு தமிழ்நாடு முதல்வருக்கு வழங்கப்பட்டது.
துணைவேந்தர் நியமன வழக்கு
ஆளுநர் இந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க மறுத்த நிலையில், அரசியலமைப்பின் சிறப்பு அதிகாரங்களை பயன்படுத்தி, உச்ச நீதிமன்றம் மொத்தம் 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கியது. இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு அந்த சட்டங்களை அரசாணையாக வெளியிட்டது.
இதையும் படிக்க : காங்கிரஸுக்கு கூடுதல் தொகுதிகள்…திமுக மூத்த நிர்வாகிகள் போர்கொடி?மாறும் கூட்டணி கணக்கு!
இதனை எதிர்த்து, திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த பாஜக உறுப்பினர் வெங்கடாசலபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், கடந்த 1994 ஆம் ஆண்டில் முன்மொழியப்பட்ட திருத்தச் சட்டம் இன்னும் நிலுவையில் இருக்கும் நிலையில், அதை திரும்பப் பெறாமல் புதிய சட்டங்களை அரசு நிறைவேற்றியது சட்ட விதிகளுக்கு எதிரானது என அவர் தனது மனுவில் குறிப்பிட்டார். மேலும், பல்கலைக்கழக மானியக் குழு விதிகளுக்கு முரணாக இந்த சட்டங்கள் உள்ளன என்றும், துணைவேந்தர் நியமன அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்குவது சட்டவிரோதம் என்றும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
தமிழக அரசுக்கு ஆதரவாக வந்த தீர்ப்பு
இந்த வழக்கு கடந்த 2025 ஆம் ஆண்டு மே மாதம் சென்னை உயர் நீதிமன்ற விடுமுறை கால அமர்வில் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், துணைவேந்தர் நியமன அதிகாரத்தை மாநில அரசுக்கு மாற்றிய சட்டங்களுக்கு இடைக்கால தடை விதித்தனர். இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம் விதித்த இடைக்கால தடையை தற்போது ரத்து செய்துள்ளது. இதன் மூலம், தமிழ்நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்கும் பொறுப்பு தமிழக முதல்வருக்கு வழங்கப்படுவதை உறுதி செய்தது.
இதையும் படிக்க : மு.க.ஸ்டாலின் 2-ஆவது முறையாக முதல்வர் ஆவதை யாராலும் தடுக்க முடியாது…அமைச்சர் பி.கே.சேகர்பாபு
மேலும், இந்த வழக்கு மீதான விசாரணையை 6 வாரங்களுக்குள் முடிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பு, தமிழ்நாடு அரசின் நிர்வாகத்துக்கு முக்கியமான திருப்பமாக பார்க்கப்படுகிறது.