தேவாலயத்தில் நடைபெற்ற பொங்கல் விழா…2 கரும்பை ரூ.81 ஆயிரத்து ஏலம் எடுத்த நபர்…என்ன விஷேசம்!
Sugarcane Auctioned: சிவகங்கை மாவட்டத்தில் தேவாலயத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் ஒரு கரும்பு ரூ. 81 ஆயிரத்துக்கு ஏலம் விடப்பட்டது. 2- ஆவது கரும்பு ரூ. 15 ஆயிரத்துக்கு ஏலம் போனது. இதில் என்ன ஸ்பெஷல் உள்ளது என்பதை பார்க்கலாம் .

ரூ.81 ஆயிரத்துக்கு கரும்பு ஏலம்
சிவகங்கை மாவட்டம், கல்லல் அருகே உள்ளது பாடத்தான் பட்டி கிராமம். இந்த கிராமத்தில், புனித வனத்து அந்தோனியார் தேவாலயம் அமைந்துள்ளது. இந்த தேவாலயத்தில், ஆண்டு தோறும் பொங்கல் விழா பாரம்பரியமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதே போல, இந்த ஆண்டும் தேவாலயம் முன் சமத்துவ பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக, சிறப்பு திருப்பலி, புனித வனத்து அந்தோணியார் வீதி உலா ஆகியவை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, கரும்பு தொட்டிலில் குழந்தைகளை வைத்து தேவாலயத்தை சுற்றி வந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில், ஒரு கரும்பு தொட்டிலுக்கு சுமார் 5 கரும்புகள் பயன்படுத்தப்படும். அதன்படி, பக்தர்கள் கரும்பு தொட்டில் மூலம் நேர்த்திக் கடனை செலுத்தி விட்டு 5 கரும்பில் ஒரு கரும்பை எடுத்து விட்டு மீதமுள்ள 4 கரும்பை தேவாலயத்தில் கொடுத்து விடுவர்.
ரூ.101-க்கு ஆரம்பித்த கரும்பு ஏலம்
இந்த கரும்புகளை தேவாலய நிர்வாகம் மற்ற பக்தர்களுக்கு ஏலம் விடுவது வழக்கமாகும். அதன்படி, இந்த ஏலத்தில் முதல் கரும்பை ஏலம் எடுக்கும் நபர்களுக்கு நினைத்த காரியம் நிறைவேறும் எனவும், கேட்டது கிடைக்கும் எனவும் பக்தர்கள் மத்தியில் நம்பிக்கை இருந்து வருகிறது. அதன்படி, முதல் கரும்பு ரூ.101-க்கு தேவாலய நிர்வாகம் சார்பில் ஏலம் தொடங்கப்பட்டது. ஒவ்வொரு பக்தர்களும் தங்களுக்கான விலையை கூறி கரும்புகளை ஏலத்தில் எடுக்க முயன்றனர்.
மேலும் படிக்க: தமிழக சட்டப்பேரவை கூட்டம்…அரசியல் பரபரப்புக்கு மத்தியில் இன்று கூடுகிறது!
முதல் கரும்பை ரூ.81 ஆயிரத்துக்கு ஏலம் எடுத்த நபர்
அதன்படி ரூ.101- இல் தொடங்கிய ஏளமானது 10 ஆயிரம், 20 ஆயிரம் என கூடிக்கொண்டே சென்றது. இறுதியாக, கோயம்புத்தூரை சேர்ந்த அருண் என்பவர் முதல் கரும்பை ரூ.81 ஆயிரத்துக்கு ஏலம் எடுப்பதாக கூறினார். அதன் பின்னர், கூடுதல் தொகைக்கு வேறு யாரும் ஏலம் எடுப்பதாக கூறவில்லை. இதனால், ஏலம் இறுதி செய்யப்பட்டு ரூ.81 ஆயிரத்துக்கு முதல் கரும்பு ஏலம் விடப்பட்டது. இதே போல, 2- ஆவது கரும்பை ரூ.15 ஆயிரத்துக்கு ஆரோக்கியதாஸ் என்பவர் ஏலம் எடுத்தார்.
2024- ஆம் ஆண்டு ரூ.1.75 லட்சத்துக்கு கரும்பு ஏலம்
புனித வனத்து அந்தோணியார் தேவாலயத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற பொங்கல் விழா நிகழ்ச்சியில், இதேபோல, கடந்த ஆண்டு கரும்பு ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்தில் முதல் கரும்பு ரூ. 51 ஆயிரத்துக்கும், கடந்த 2024- ஆம் ஆண்டு ரூ.1.75 லட்சத்துக்கும் ஏலம் போனது குறிப்பிடத்தக்கது. இந்த தேவாலயத்தில் கரும்பு ஏலம் விடப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த கரும்பை ஏலம் எடுக்கும் நபருக்கு நினைத்தது நிறைவேறும் என்ற நம்பிக்கை அந்த தேவாலய பக்தர்கள் இடையே இருந்து வருவதால் ஆண்டுதோறும் பின்பற்றப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க: சென்னை வேளச்சேரி டெலிவரி ஊழியர் மீது சரமாரி தாக்குதல்.. அச்சம் நிறைந்த பூமியாக்கிய திமுக – நயினார் நாகேந்திரன் கண்டனம்..