வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி: தவறான தகவல் தந்தால் ஓராண்டு சிறை!!
special intensive revision: வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்காக தமிழகத்தில் வீடு வீடாக சென்று படிவங்கள் விநியோகிக்கும் பணிகள் நேற்று முதல் தொடங்கியுள்ளன. தமிழக அரசு தரப்பில் இப்பணிகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதேசமயம், களத்தில் கட்சிக்களின் பூத் ஏஜென்டுகள் பணிபுரிந்து வருகின்றனர்.

கோப்புப்படம்
சென்னை, நவம்பர் 05: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த (SIR) கணக்கெடுப்பு படிவத்தில், தவறான தகவல் அளிக்கும் வாக்காளர்களுக்கு அபராதத்துடன் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்தவகையில், தமிழதகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் நேற்று முதல் தொடங்கியுள்ளன. இதன் ஒரு பகுதியாக, வாக்குச்சாவடி அலுவலர்கள், தேர்தல் ஆணையம் தயாரித்துள்ள கணக்கெடுப்பு படிவத்தை வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று வினியோகம் செய்து வருகின்றனர். இந்தப் பணிகள் எல்லாம் முடிந்து டிசம்பர் 9 ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். ஆட்சேபனைகள் இருந்தால் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான நாள் முதல் ஜனவரி 8 ஆம் தேதி வரை தெரிவிக்கலாம்.
இதையும் படிக்க : கோவை கூட்டு பாலியல் வன்கொடுமை.. நள்ளிரவில் 3 பேரை சுட்டுப்பிடித்து காவல்துறை அதிரடி..
படிவத்தில் என்னென்ன தகவல் இருக்கும்:
அதன்படி, வாக்குச்சாவடி அலுவலர்கள் வீடுதோறும் சென்று, தற்போதைய வாக்காளர்களுக்கு முன்பே நிரப்பப்பட்ட கணக்கீட்டுப் படிவங்களை விநியோகித்து, பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை மீண்டும் சேகரிப்பார்கள். அந்த படிவத்தில் வாக்காளர் பூர்த்தி செய்யும் பகுதியில், பிறந்த தேதி, ஆதார் எண், மொபைல் போன் எண், தந்தை அல்லது பாதுகாவலர் பெயர், அவரது வாக்காளர் அடையாள அட்டை எண், தாயின் பெயர், அவரது வாக்காளர் அடையாள அட்டை எண், துணைவரின் பெயர், அவரது வாக்காளர் அடையாள அட்டை எண், மாவட்டம், மாநிலம், சட்டசபை தொகுதி பெயர், சட்டசபை தொகுதி எண், ஓட்டுச்சாவடி எண், முகவரி போன்ற விபரங்கள் கேட்கப்பட்டுள்ளன.
ஓராண்டு வரை சிறை தண்டனை:
இதில், தவறானது அல்லது உண்மையல்ல என தெரிந்து அது குறித்த விபரங்களை பதிவு செய்வது, 1950ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படி குற்றமாகும். இதற்காக அதிகபட்சமாக ஓராண்டு வரை சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டையும் சேர்த்து விதிக்கலாம் என உறுதிமொழி அளிக்க வேண்டும். இதை உறுதிப்படுத்தும் வகையில், வாக்காளர் அல்லது அவரது குடும்ப உறுப்பினர்கள் கையெழுத்து அல்லது இடது கை பெருவிரல் ரேகையை அங்கு பதிவு செய்ய வேண்டும்.
அதேசமயம், வீடு வீடாக வரும் வாக்குச்சாவடி அலுவலர்கள் அங்கு இல்லாதவர், இடம் மாறியவர், இறந்தவர், இரட்டைப் பதிவுகள் ஆகியவற்றை அடையாளம் காண்பதுடன், புதிய தகுதியுள்ள வாக்காளர்களின் விவரங்களையும் சேகரிப்பார்கள். எந்தவொரு வாக்காளரும் விடுபடக்கூடாது என்பதை உறுதி செய்வதற்காக, பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களைப் பெறுவதற்கு வாக்குச்சாவடி நிலை அலுவலர் ஒவ்வொரு வீட்டுக்கும் குறைந்தது மூன்று முறை செல்லுவார்.
இதையும் படிக்க : கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை.. த.வெ.க கண்டன ஆர்ப்பாட்டம்.. முழு விவரம் உள்ளே..
12 கட்சிகளின் பூத் ஏஜென்ட்கள்:
அதேடு, தற்போதைய வாக்காளர்களுக்கு ஆன்லைன் வழியாக முன்பே நிரப்பப்பட்ட கணக்கீட்டுப் படிவங்களை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களையும் ஆவணங்களையும் பதிவேற்றும் வசதியும் வழங்கப்படுகிறது. அங்கீகரிக்கப்பட்ட 12 கட்சிகளின் பூத் ஏஜென்ட்களுக்கு, இப்பணியில் ஈடுபட இந்திய தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி ஓட்டுச்சாவடி அலுவலர்களுடன், 12 பூத் ஏஜென்ட்களும் வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று வருவது குறிப்பிடத்தக்கது.