வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள்.. தமிழகத்தில் இன்று முதல் தொடக்கம்.. வாக்காளர்கள் என்ன செய்ய வேண்டும்?
SIR - Tamil Nadu: வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள், திட்டமிட்டபடி நவம்பர் 4, 2025 முதல் தொடங்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பின் படி, 04.11.2025 முதல் 04.12.2025 வரை வீடு வீடாக வாக்காளர் கணக்கெடுப்பு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
                                சென்னை, நவம்பர் 4, 2025: தமிழகத்தில் திட்டமிட்டபடி இன்று, அதாவது நவம்பர் 4, 2025 முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகள் தொடங்க உள்ளது. இதற்கு முன்னதாக பீகார் மாநிலத்தில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது, 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்புகளை பதிவு செய்தன. இந்நிலையில், இன்னும் சில நாட்களில் பீகார் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பின் படி, தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
SIR – திமுக சார்பில் மனு தாக்கல்:
இந்த அறிவிப்பு வெளியாகியதிலிருந்து, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் இதற்கு கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றன. அரசியல் கட்சிகள் தரப்பில், இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், இத்தகைய திருத்தப் பணிகளை மேற்கொள்ளக்கூடாது; இதற்கான நேரம் இது அல்ல,” என வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த பணிகளை நிறுத்தக் கோரி, திமுக அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதி மனு ஒன்றை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவின் விசாரணை நவம்பர் 6 அல்லது 7 ஆம் தேதியில் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திட்டமிட்டப்படி நடைபெறும் பணிகள்:
எனினும், இந்த பணிகள் திட்டமிட்டபடி நவம்பர் 4, 2025 முதல் தொடங்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பின் படி, 04.11.2025 முதல் 04.12.2025 வரை வீடு வீடாக வாக்காளர் கணக்கெடுப்பு நடைபெறும். வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று, தற்போதுள்ள வாக்காளர்களின் ஏற்கனவே உறுதிசெய்யப்பட்ட விவரங்களுடன் கூடிய கணக்கீட்டுப் படிவங்களை இரண்டு நகல்களில் வழங்குவார்கள். வாக்காளர்கள் அவற்றை நிரப்புவதற்கு BLO-க்கள் உதவுவார்கள். வீடு பூட்டியிருப்பதாக BLO கண்டால், குறைந்தது மூன்று முறை அந்த வீட்டிற்குச் சென்று முயற்சி மேற்கொள்வார்.
வாக்காளர்கள் முன் நிரப்பப்பட்ட படிவங்களை இணையவழியிலும் (Online Mode) பதிவேற்றம் செய்யலாம். BLO வருகை விவரங்கள் மற்றும் சரிபார்ப்பு நடைமுறை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் வருகை தேதிகள் முன்கூட்டியே அறிவிக்கப்படும். இவை வாக்காளர் பதிவு அலுவலர்களால் தங்கள் பகுதிகளில் பரவலாக விளம்பரப்படுத்தப்படும். BLO-கள் நிரப்பப்பட்ட படிவங்களை பெறும்போது, ஒரு நகலை தமக்குத் தக்கவைத்து, பெற்றுக்கொண்டதற்கான ஒப்புக்கொள் சீட்டை மற்றொரு நகலில் வழங்குவார்கள்.
Also Read: கொளுத்தும் வெயில்.. 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து பதிவான வெப்பநிலை..
டிசம்பர் 9 வெளியாகும் வரைவு வாக்காளர் பட்டியல்:
இணையவழியில் சமர்ப்பிக்கப்பட்ட படிவங்களும் BLO-க்களால் சரிபார்க்கப்படும். வாக்காளர்கள் தங்கள் பெயர்கள், பெற்றோர் அல்லது தாத்தா-பாட்டி பெயர் போன்ற விவரங்களையும் சரியாக நிரப்ப வேண்டும். BLO-க்கள் இதற்கும் உதவுவார்கள்.
வீடு தோறும் கணக்கெடுப்பு காலத்தில் முறையாக நிரப்பப்பட்ட படிவங்களை சமர்ப்பித்த அனைத்து வாக்காளர்களின் பெயர்களும் 09.12.2025 அன்று வெளியிடப்படும் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறும்.
இணையவழியில் சமர்ப்பிக்கப்பட்ட படிவங்களும் இதில் அடங்கும். ஏற்குறைகள் மற்றும் மறுப்புரைகள் – டிசம்பர் 9 முதல் ஜனவரி 8 வரை கணக்கெடுப்பு காலத்தில் படிவங்களை சமர்ப்பிக்காத வாக்காளர்கள், 09.12.2025 முதல் 08.01.2026 வரை படிவம் 6 மற்றும் உறுதிமொழிப் படிவத்துடன் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
முழுமையான விவரங்களை வழங்காத வாக்காளர்களுக்கு, வாக்காளர் பதிவு அலுவலர் அல்லது உதவி அலுவலர் விசாரணை மேற்கொள்வார். அந்த விசாரணையின் போது, தேவையான ஆவணங்களை (கணக்கீட்டுப் படிவத்தின் பின்புறத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவை) சமர்ப்பிக்கலாம்.
Also Read: கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை.. த.வெ.க கண்டன ஆர்ப்பாட்டம்.. முழு விவரம் உள்ளே..
அனைத்து வாக்காளர்களும் 04.11.2025 முதல் 04.12.2025 வரையிலான கணக்கெடுப்பு காலத்தில், தேவையான படிவங்களை நிரப்ப, BLO-களின் உதவியைப் பெற, முறையாக நிரப்பப்பட்டு கையொப்பமிடப்பட்ட படிவங்களை BLO வருகையின் போது சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அடுத்த ஆண்டு வெளியிடப்படும் இறுதி வாக்காளர் பட்டியல்:
இதுவரை, வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிரத் திருத்தம் தொடர்பாக, மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தலைமையில் 39 கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகள் சார்பாக 932 பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
மேலும், வாக்காளர் பதிவு அலுவலர்கள் தலைமையில் 241 கூட்டங்கள் நடத்தப்பட்டு, அதில் 3346 பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து, வரைவு வாக்காளர் பட்டியல் – டிசம்பர் 9, 2025, ஏற்குறைகள் மற்றும் மறுப்புரைகள் – டிசம்பர் 9, 2025 முதல் ஜனவரி 8, 2026 வரை
இறுதி வாக்காளர் பட்டியல் – பிப்ரவரி 7, 2026 வெளியிடப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.