Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள்.. தடை விதிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு தாக்கல்..

SIR - DMK Petition: திமுக அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதி உச்ச நீதிமன்றத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை எதிர்த்து மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், இந்த பணியை நடைமுறைப்படுத்துவதற்கு இது உகந்த காலம் அல்ல என குறிப்பிடப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள்.. தடை விதிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு தாக்கல்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 03 Nov 2025 20:21 PM IST

சென்னை, நவம்பர் 3, 2025: தமிழகம் முழுவதும் திட்டமிட்டபடி நாளை, அதாவது நவம்பர் 4, 2025, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் இந்திய தேர்தல் ஆணையம் தரப்பில் தொடங்கப்படவுள்ளன. இதற்கிடையில், திமுக தரப்பில் இந்த நடைமுறையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கழக அமைப்புச் செயலாளராக ஆர். எஸ். பாரதி இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். இந்த மனுவை மூத்த வழக்கறிஞர் என். ஆர். இளங்கோ தாக்கல் செய்துள்ளார்.

எஸ்.ஐ.ஆர் – பின்னணி என்ன?

இந்திய தேர்தல் ஆணையம் முதலில் பிஹார் மாநிலத்தில் இந்த பணியை தொடங்கியது. அந்த மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக 2025 நவம்பர் மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தீவிரமாக பணிகளை மேற்கொண்டு வருகின்றன. அங்கு சுமார் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்புகளை பதிவு செய்தன.

மேலும் படிக்க: மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு வேண்டும் – த.வெ.க தலைவர் விஜய் வலியுறுத்தல்..

தமிழகம் உட்பட 12 மாநிலங்களில் தொடங்கும் பணிகள்:

இந்த சூழலில், தமிழகம் உட்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அந்த வகையில், நவம்பர் 4, 2025 முதல் இந்த பணிகள் தொடங்கவிருக்கின்றன. இதற்கிடையில், தமிழக அரசு தரப்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில், இந்த பணியை மேற்கொள்ளக்கூடாது என்றும் கடுமையான எதிர்ப்புகள் அரசியல் கட்சிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டன.

அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம்:

“நேர்மையான தேர்தல் நடத்த வேண்டும் என்றால் உண்மையான வாக்காளர் பட்டியல் அவசியம் என்பதில் யாருக்கும் முரண்பாடு இல்லை. ஆனால் அதற்குரிய கால அவகாசம் கொடுக்கப்பட வேண்டும். தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு முழுமையான திருத்தப் பணிகள் செய்ய நினைப்பது, உண்மையான வாக்காளர்களை நீக்கும் தந்திரம் மட்டுமே,” என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். மேலும், இந்தப் பணிகள் தொடர்ந்தால் அனைத்து கட்சிகளும் இணைந்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் படிக்க: விடுபட்ட அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ.1,000: உதயநிதி ஸ்டாலின் கொடுத்த சூப்பர் அப்டேட்!!

உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த திமுக:

அந்த தீர்மானத்தின் அடிப்படையில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதி உச்ச நீதிமன்றத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை எதிர்த்து மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், இந்த பணியை நடைமுறைப்படுத்துவதற்கு இது உகந்த காலம் அல்ல, தேர்தல் ஆணையத்துக்கு இத்தகைய நடைமுறைகளை மேற்கொள்ள அதிகாரம் இல்லை, அரசியல் அமைப்பு சட்டம் வழங்கிய வரம்புகளை மீறி தேர்தல் ஆணையம் செயல்படுகிறது, என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், தகுதி உள்ள வாக்காளர்கள் நீக்கப்படுவதற்கும், தகுதி இல்லாத வாக்காளர்கள் சேர்க்கப்படுவதற்கும் வழிவகுக்கும் வகையில் இந்த நடைமுறை அமைந்துள்ளதாகவும், இதனை நடைமுறைப்படுத்தக் கூடாது என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கின் மீதான விசாரணை நவம்பர் 6 அல்லது 7, 2025 அன்று நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.