செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கம்? அதிரடி முடிவெடுக்கும் இபிஎஸ்!!
EPS decision on sengottiyan: தன்னை கட்சியில் இருந்து நீக்கினால் மகிழ்ச்சி என நேற்றே செங்கோட்டையன் கூறியிருந்தார். எம்ஜிஆர் காலத்தில் இருந்து கட்சியில் இருக்கும் அவர், அடுத்தடுத்த நகர்வுகளையும் யோசித்தே ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்திருப்பார் என்றும், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அறிவிப்பு வெளிவந்த பின் செங்கோட்டையன் தனது நகர்வு குறித்து தெளிப்படுத்துவார் எனத் தெரிகிறது.

இபிஎஸ் - செங்கோட்டையன்
அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையனை அக்கட்சியில் இருந்து நீக்குவது தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகும் என கூறப்படுகிறது. தேவர் ஜெயந்தியையொட்டி, நேற்றைய தினம் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரனுடன் இணைந்து செங்கோட்டையன் பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். அதோடு, எடப்பாடிக்கு எதிராக மூவரும் ஒன்றிணைந்துள்ளதாகவும் அவர்கள் கூறினர். அதேசமயம், இவர்கள் மூவரும் ஒன்றிணைவதால், தங்களை ஒன்றும் செய்ய முடியாது என்றும் இப்படியான துரோகிகளால் தான் அதிமுக வெற்றி வாய்ப்பை இழந்தது எனவும் எடப்பாடி பழனிசாமி சாடியிருந்தார். இவ்வாறு இரு தரப்பும் ஒருவரை ஒருவர் மாறி மாறி சாடிக்கொண்டது குறித்தும், எடப்பாடியின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது குறித்தும் விரிவாக பார்க்கலாம்.
தேவர் நினைவிடத்தில் தலைவர்கள்:
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 118வது பிறந்தநாள் மற்றும் குருபூஜையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அமைந்துள்ள அவருடைய நினைவிடத்திற்கு நேற்றைய தினம் பல்வேறு அரசியல் தலைவர்களும் நேரில் சென்று மரியாதை செலுத்தினர். குறிப்பாக தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், அனைத்து கட்சித் தலைவர்களும் நேற்று பசும்பொன்னில் திரண்டிருந்தனர். அந்தவகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின், துணைகுடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட தலைவர்கள் நேற்று பசும்பொன் சென்று தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
Also read: ரூ.3கோடி பட்ஜெட்.. முத்துராமலிங்கத் தேவர் பெயரில் திருமண மண்டபம்.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
யாரும் எதிர்பாராத அரசியல் திருப்பம்:
குறிப்பாக நேற்றைய தினம் யாரும் எதிர்பாராத வகையில், மதுரையில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்துடன் ஒரே காரில் ஒன்றாக பயணித்து செங்கோட்டையன் ராமநாதபுரம் சென்றார். அதோடு, ராமநாதபுரத்தில் இருந்து திறந்தவெளி வேனில் இருவரும் சென்றனர். அதைத்தொடர்ந்து, பசும்பொன்னில் டிடிவி தினகரனும் இவர்கள் இருவருடன் இணைந்துக்கொண்டார். தொடர்ந்து, பிரிந்து கிடக்கும் அதிமுகவினரை ஒருங்கிணைக்கவே மூவரும் ஒன்றிணைந்துள்ளதாக அவர்கள் கூட்டாக தெரிவித்தனர். அதோடு, இவர்களுக்கு பின்னால் வந்த சசிகலாவும் இந்த அணியினருக்கு ஆதரவு தெரிவித்து, “அதிமுகவை ஒன்றிணைப்பதை நான் நிச்சயமாக செய்வேன். சர்ப்ரைசாக எல்லாமே நடக்கும். வெயிட் அன்ட் சீ” என்று சவால் விடுத்துச் சென்றார்.
செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கம்?:
அதிமுக கட்சி விதிகளை மீறி, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரனுடன் ஒன்றாக இணைந்த செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்குவதற்கு எந்தத் தயக்கமும் இல்லை. கட்சிக்குத் துரோகம் செய்த யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். 2021ல் அதிமுக வெற்றி பெறாததற்கு காரணம் இப்படியான துரோகிகள் இருந்ததால் தான். தற்போது கட்சியில் உள்ள களைகள் கண்டறியப்பட்டு அகற்றப்பட்டுள்ளன என்றார். அதோடு, ஓ.பன்னீர்செல்வத்துடன், செங்கோட்டையனும், டிடிவி தினகரனும் சேர்வது எதைக் குறிக்கிறது என்றால், அவர்கள் திமுகவின் பி டீமை சேர்ந்தவர்களாக இருப்பதை காட்டுகிறது என்றும் சாடியிருந்தார்.
உண்மையான அதிமுக நாங்கள் தான்:
மேலும், அவர்கள் மூவரும் ஒன்றிணைவது வேஸ்ட். அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. எங்களிடம் இருப்பதே உண்மையான அதிமுக என்றும், எங்களிடம் இருப்பவர்கள் அசையாமல் இருக்கின்றனர். ஏற்கனவே இவர்கள் மூன்று பேரும் சேர்ந்து போட்ட திட்டத்தினால், கடந்த தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது என்றும் சரமாரி குற்றச்சாட்டை முன்வைத்தார்.
Also read: விஜய்யுடன் கூட்டணி அமைக்க பாஜக முயற்சி?.. உண்மையை போட்டுடைத்த அமித்ஷா!!
இந்நிலையில், செங்கோட்டையன் கட்சியில் இருந்து நீக்கப்படுவதற்கான அறிவிப்பு இன்று வெளியாகலாம் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். ஏனெனில், கட்சியை தன் வசம் வைப்பதற்காக எடப்பாடி பழனிசாமி எந்த அதிரடி முடிவையும் இருப்பார் என்றும் அது செங்கோட்டையனாக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் சரி என்று கூறுகின்றனர்.