எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து பொய்யும், துரோகமும் தவிர வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? – முதல்வர் ஸ்டாலின்
CM MK Stalin: தென்காசியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “ எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து பொய்யும் துரோகத்தையும் தவிர வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? நெல் கொள்முதலில் அடிப்படை அறிவே இல்லாமல் பொய் சொல்லிக்கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அவருடைய வரலாறு பொய்யும் துரோகமும் தான்” என குறிப்பிட்டுள்ளார்.
தென்காசி, அக்டோபர் 29, 2025: எடப்பாடி பழனிசாமியிடமிருந்து பொய்யும் துரோகத்தையும் தவிர வேறு என்ன எதிர்பார்க்க முடியும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தென்காசி மாவட்டத்திற்கு அரசு முறைப் பயணமாக சென்றார். அங்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் வாகனங்களை வழங்கினார். அப்போது நெல் கொள்முதல் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பி வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.
நெருங்கும் 2026 சட்டமன்ற தேர்தல்:
2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அரசியல் கட்சிகள் தரப்பில் அதற்கான பணிகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக எடப்பாடி பழனிசாமி மாவட்டம் தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் வடகிழக்கு பருவமழையால் நெல் கொள்முதல் மையங்கள் பாதிக்கப்பட்டதும், நெல் பயிர்கள் நீரில் மூழ்கியதையும் நேரில் சென்று பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார்.
தென்காசியில் முதல்வர் ஸ்டாலின்:
மலைச்சாரலால் குளிர்ந்த தென்காசி மாவட்ட மக்களின் மனம் குளிர்விக்கும் பத்து முத்தான அறிவிப்புகளை வெளியிட்டு, 1,020 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினேன்.
தென்காசி மாவட்டத்தில் நமது #DravidianModel அரசின் திட்டங்களில் இடம்பெறாத ஊரே இல்லை எனுமளவுக்கு நாம் செய்து வரும்… pic.twitter.com/asYyABLHrM
— M.K.Stalin – தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) October 29, 2025
இது ஒருபுறம் இருக்க, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி, மாவட்டம் தோறும் சென்று கள ஆய்வையும் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தென்காசி மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக பயணம் மேற்கொண்டார். நிகழ்ச்சிகளை முடித்து பொதுமக்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
மேலும் படிக்க: ஊழலுக்கு உடந்தையாக மாறிய திமுக.. 2,538 பதவிகளுக்காக ரூ. 888 கோடி லஞ்சம்- அண்ணாமலை காட்டம்..
“வடக்கே ஒரு காசு என்றால் தெற்கே ஒரு தென்காசி என சொல்லும் அளவிற்கு பொறுமை வாய்ந்த நகரம் இது. தூரலும் சாரலும் கொண்டு மக்களை குளிர்விக்கும் மண் தென்காசி. திமுக ஆட்சியில் ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் தினசரி ஆயிரம் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுகின்றன. கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் ஒரு கோடியே 70 லட்சத்து 45 ஆயிரத்து 455 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
விரக்தியின் உச்சத்தில் எடப்பாடி பழனிசாமி:
வாரத்தின் அனைத்து நாட்களிலும் நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆனால் அதிமுக ஆட்சியில் ஒரு ஆண்டுக்கு 22 லட்சத்து 70 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது. இப்படிப்பட்ட நிலையில் திமுக அரசுக்கு மக்கள் ஆதரவு அளித்து துணையாக இருப்பதால் சிலருக்கு தூக்கம் வருவதில்லை.
எடப்பாடி பழனிசாமியின் வரலாறே பொய்யும் துரோகமும் தான்:
எடப்பாடி பழனிசாமி விரக்தி உச்சத்திற்கே சென்று, முன்னுக்கு பின் முரணான தகவல்களை பரப்பி வருகிறார். அவரிடமிருந்து பொய்யும் துரோகத்தையும் தவிர வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? நெல் கொள்முதலில் அடிப்படை அறிவே இல்லாமல் பொய் சொல்லிக்கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அவருடைய வரலாறு பொய்யும் துரோகமும் தான்.
மேலும் படிக்க: கரையை கடந்த தீவிர புயல்.. தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு.. சென்னையில் எப்படி?
மக்களை காக்க எங்களுக்கு யாரும் சொல்லித்தர தேவையில்லை. மூன்று முறை இயற்கை பேரிடரை சந்தித்தோம், மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்தோம். ஆனால் தமிழகத்திற்கு தரவேண்டிய ₹37,000 கோடி நிதியை மத்திய அரசு வழங்க மறுக்கிறது. அந்த நிதியை வழங்கினால் தமிழ்நாடு வளர்ச்சி அடைந்து விடும் என்பதால்தான் அவர்கள் தடுக்கிறார்கள்.
எந்த தொல்லை தந்தாலும் வளர்ச்சியை தடுக்க முடியாது:
மத்திய அரசு எந்தத் தொல்லை கொடுத்தாலும் தமிழ்நாட்டின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது. மேலும், தேர்தல் ஆணையம் மூலமாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் பெயரில் நமது வாக்குரிமையை பறிக்கும் சதியை நடைமுறைப்படுத்த முயற்சிக்கின்றனர்.” என பேசியுள்ளார்.