‘இபிஎஸ் மட்டுமே எங்கள் எதிரி’ டிடிவி தினகரன், செங்கோட்டையன், ஓபிஎஸ் கூட்டாக பேட்டி!
TTV, OPS, Sengottaiyan: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரனுடன் செங்கோட்டையன் ஒன்றாக சென்று தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார். தொடர்ந்து, அதிமுகவை ஒன்றிணைக்கவும், துரோகத்தை வீழ்த்தி ஜெயலலிதா ஆட்சியை உருவாக்க மூவரும் ஒன்றிணைந்துள்ளதாக கூட்டாக கூறியுள்ளனர்.
ராமநாதபரம், அக்டோபர் 30: பிரிந்து கிடக்கும் அதிமுகவினரை ஒருங்கிணைக்கவே பசும்பொனில் மூவரும் இணைந்துள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். பசும்பொன் தேவர் நினைவிடத்தில் டிடிவி தினகரன், செங்கோட்டையன், ஓபிஎஸ் ஆகிய மூவரும் கூட்டாக மரியாதை செலுத்தினர். மதுரையில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்துடன் காரில் ஒன்றாக வந்த செங்கோட்டையன், ராமநாதபுரம் வந்ததும் திறந்தவெளி வேனுக்கு அவர்கள் இருவரும் மாறினர். அங்கிருந்து தொண்டர்கள் படையுடன் பசும்பொன் நோக்கி வேனிலேயே இருவரும் சென்றனர். தொடர்ந்து, முத்துராமலிங்கத் தேவர் சிலை அருகே வந்ததும், அங்கு வந்த டிடிவி தினகரனுடன் அவர்கள் இருவரும் இணைந்துக்கொண்டனர். பின்னர் அவர்கள் ஒன்றாக சென்று தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.
Also read: ஒரே வேனில் ஓபிஎஸ், செங்கோட்டையன்.. இதுதான் இபிஎஸ் ரியாக்ஷன்!
அதிமுகவை ஒருங்கிணைக்கும் முயற்சி தொடரும்:
தொடர்ந்து மூவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த போது ஓபிஎஸ் கூறியதாவது, பிரிந்து கிடக்கும் அதிமுகவினரை ஒருங்கிணைக்கவே பசும்பொனில் மூவரும் இணைந்துள்ளதாகவும், அதிமுகவை ஒருங்கிணைக்கும் முயற்சி தொடரும் என்றும் அவர் கூறினார். மேலும், பிரிந்திருக்கும் அதிமுக சக்திகள் சேரவில்லை என்றால் தான் மக்கள் மீண்டும் திமுக ஆட்சியை தேர்தெடுப்பார்கள் என்றே தான் கூறியதாகவும், மீண்டும் திமுக ஆட்சி வரும் என்று சொல்லவில்லை என தெளிவுப்படுத்தினார்.
மூவரும் இணைந்து தேர்தலில் பணியாற்றுவோம்:
தொடர்ந்து பேசிய டிடிவி தினகரன், கொங்கு நாட்டில் இருந்து தென்னாட்டிற்கு வருகை தந்துள்ள செங்கோட்டையனை வரவேற்பதாகவும், எம்ஜிஆர் காலத்தில் இருந்து அதிமுகவில் உள்ள மூத்த உறுப்பினர் செங்கோட்டையன் தங்களுடன் வந்தது ஜெயலலிதாவின் தொண்டர்களை பாதுகாக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் மூவரும் ஒன்றிணைந்துள்ளதாகவும், மூவரும் சட்டமன்ற தேர்தலில் ஒன்றாக இணைந்து பணியாற்றுவோம் என்று கூறினார்.
Also read: ரூ.3கோடி பட்ஜெட்.. முத்துராமலிங்கத் தேவர் பெயரில் திருமண மண்டபம்.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
சசிகலாவும் எங்களுடனே இருக்கிறார்:
துரோகத்தை வீழ்த்தி ஜெயலலிதாவின் ஆட்சியை உருவாக்க ஒன்று சேர்ந்துள்ளோம் என்றார். அதோடு, எடப்பாடி பழனிசாமி மட்டுமே எங்கள் எதிரி, அவரை தவிர வேறு யாரையும் நாங்கள் எதிரியாக கருதவில்லை என்றார். மேலும், போக்குவரத்து நெரிசல் காரணமாக சசிகலா எங்களுடன் இணைந்து வருகை தர முடியவில்லை. ஆனால், அவரும் தங்களுடனே இருப்பதாக அவர் கூறினார்.
எனினும், அவர்கள் மூவரும் செய்தியாளர்கள் சந்தித்து சென்ற 5 நிமிடங்களில் சசிகலா முத்துராமலிங்கத் தேவர் நினைவிடம் வந்தார். தொடர்ந்து, தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவர், அங்கு சிறிது நேரம் தியானத்திலும் ஈடுபட்டார்.