விஜய் பரப்புரை… ஈரோட்டில் பள்ளிக்கு விடுமுறை
TVK Vijay: ஈரோட்டில் டிசம்பர் 18, 2025 அன்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார். இந்த நிலையில், விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே உள்ள தனியார் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அன்று நடைபெறவிருந்த அரையாண்டு தேர்வும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

விஜய்
ஈரோடு, டிசம்பர் 16: ஈரோட்டில் (Erode) டிசம்பர் 18, 2025 அன்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார். இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதில் பங்கேற்பதற்காக விஜய் தனி விமானம் மூலம் கோவை வந்து அங்கிருந்து சாலை மார்க்கமாக நிகழ்ச்சி நடைபெறவிருக்கும் விஜயமங்கலம் அருகே பரப்புரை நடைபெறும் இடத்துக்கு வருகிறார். இதற்காக 16 ஏக்கர் அளவிவான இடம் தேர்ந்தெடுக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிகழ்ச்சியில் 35, 000 பேர் அளவுக்கு பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஈரோடு தவிர்த்து பிற மாவட்டங்களை சேர்ந்தவர்கள் நிகழ்ச்சிக்கு வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பள்ளிக்கு விடுமுறை
இந்த நிலையில், விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே உள்ள தனியார் பள்ளிக்கு வருகிற டிசம்பர் 18, 2025 அன்று வியாழக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் டிசம்பர் 18, 2025 அன்று நடைபெற இருந்த அரையாண்டு தேர்வு வருகிற டிசம்பர் 26, 2025 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : போலி மருந்து விவகாரம்…முதல்வர் பதவி விலக வேண்டும்…வே.நாராயணசாமி போர்க்கொடி!
ஈரோட்டில் விஜய்யின் பரப்புரை நிகழ்ச்சியில் பங்கேற்கும் தொண்டர்களின் பாதுகாப்பிற்காக இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும் காவல்துறையினர் கூட்டத்தை கண்காணிக்கும் வகையில் தனி அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், நிகழ்ச்சிக்கு வருபவர்களின் வசதிக்காக 20 தண்ணீர் தொட்டிகள், கழிப்பறை வசதிகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் முன்னெச்சரிக்கையாக ஆம்புலன்ஸ்கள், தீயணைப்பு வாகனங்கள் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு கொண்டுவரப்படவுள்ளன.
முன்னேற்பாடுகள் தீவிரம்
குறிப்பாக நிகழ்ச்சியை முற்றிலும் கண்காணிக்கும் வகையில் சிசிடிவி கேமராக்கள் அமைக்க காவல்துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் தொண்டர்களின் வாகனங்களை நிறுத்தவும் வாகன காப்பகம் அமைக்கப்பட்டு வருகின்றன. தொண்டர்கள் வந்து செல்ல, நான்கு திசைகளிலும் வழிகள் அமைக்கப்படவுள்ளன. இந்த நிலையில் மேற்கு மண்டல செயலாளர் செங்கோட்டையன் தலைமையில் அதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட நிகழ்ச்சி நடைபெற்றுவருகின்றன.
இதையும் படிக்க : 2026 சட்டமன்ற தேர்தல்…தவெக-பாஜகவுக்கு…வைகோ மறைமுக எச்சரிக்கை!
தொண்டர்கள் மரங்கள் மற்றும் அருகில் உள்ள வீடுகளின் மேல் ஏறக்கூடாது என கட்சியினர் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் பரப்புரை நடைபெறும் இடத்துக்கு அருகில் நெடுஞ்சாலை இருப்பதால் தவெக தொண்டர்கள் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் வகையில் நடந்து கொள்ளக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தைக் கருத்தில் கொண்டு அசம்பாவிதங்கள் எதுவும் நடந்துவிடக் கூடாது என்பதில் கட்சி தலைமை கவனத்தில் கொண்டுள்ளது. மேலும் கொங்கு மண்டலத்தில் தவெகவிற்கு வலுசேர்க்கும் விதமாக இந்த பரப்புரையை செங்கோட்டையன் மிகுந்த கவனமுடன் ஏற்பாடு செய்து வருகிறார்.