ராமேஸ்வரத்தில் விமான நிலையம் அமைக்கும் பணி…முன் சாத்தியக்கூறுகள் ஆய்வு!
Rameswaram airport: ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்ட இரு இடங்களில் இந்திய விமான நிலைய ஆணையம் முன் சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்தது. இதைத் தொடர்ந்து, விமான நிலையத்துக்கான இறுதி இடம் தேர்வு செய்யப்படும் என்று தெரிகிறது.
ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என்று கடந்த மார்ச் மாதம் தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி, இந்தப் பகுதியில் உள் கட்டமைப்பை வலுப்படுத்தவும், சுற்றுலாவை ஊக்குவிக்கவும் கடந்த ஜூலை மாதம் புதிய விமான நிலையம் அமைப்பதற்காக 5 சாத்தியமான இடங்கள் தேர்வு செய்ய்பட்டன. இதில், உச்சிப்புளி அருகே ஒரு இடமும், கீழக்கரை அருகே மற்றொரு இடமும் என 2 இடங்களை அரசு தேர்வு செய்து பட்டியலிட்டது. இதைத் தொடர்ந்து, அந்த 2 இடங்களில் உள்ள சாதக, பாதகங்களை ஆராய்வதற்காக முன் சாத்தியக்கூறு ஆய்வை மேற்கொள்ளுமாது இந்திய விமான நிலைய ஆணையத்திடம் தமிழக அரசு அறிவுறுத்தி இருந்தது.
இரு இடங்களில் விமான நிலைய ஆணையம் ஆய்வு
இந்த நிலையில், அண்மையில் இந்திய விமான நிலைய ஆணையத்தின் குழு மேற்கண்ட உச்சிப்புளி மற்றும் கீழக்கரை அருகே உள்ள இடங்களை சுற்றி உள்ள கிராமங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டது. இதில், முதல் இடமான உச்சிப்புளி அருகே உள்ள பெருங்குளம், கும்பரம் மற்றும் வளம்தரவை ஆகிய கிராம பகுதிகளுக்கும் அந்தக் குழு நேரில் ஆய்வு சென்று முன் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்தது. இதைத் தொடர்ந்து, கீழக்கரை அருகே உள்ள இடத்தில் அண்டை கிராமங்களான மணிக்கணேரி மற்றும் மாயா குளம் ஆகிய கிராமங்களிலும் முன் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்தது.
மேலும் படிக்க: 2வது முறையும் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுப்பு.. திருப்பரங்குன்றத்தில் நீடிக்கும் பதற்றம்!
இந்திய கடற்படைக்கு சொந்தமான இடம்
இதில், உச்சிப்புளி அருகே உள்ள இடமானது இந்திய கடற்படை விமான நிலையமாக ஐஎன்எஸ் பருண்டு அருகே அமைந்துள்ளது. இந்த இடத்தை தமிழக அரசு தேர்வு செய்தால் இந்திய கடற்படையின் அனுமதி வாங்க வேண்டும். எனவே, இந்திய விமான நிலைய ஆணையத்தின் முன் சாத்தியகுறு ஆய்வை சமர்ப்பித்து பரிந்துரைகளை வழங்கிய பிறகே தமிழக அரசு இடத்தை தேர்வு செய்ய முடியும். மேலும், இந்த விமான நிலையம் அமைப்பதற்கு 600 ஏக்கர் நிலம் தேவைப்படும் என்று கூறப்படுகிறது.
சுற்றுலாப் பயணிகள்-பொதுமக்களுக்கு வரப்பிரசாதம்
இந்தப் பகுதியில் விமான நிலையம் அமையும் பட்சத்தில் இந்த பகுதி மிகுந்த வளர்ச்சி அடைவதுடன், சுற்றுலாவும் மேம்படும். இந்த பகுதிகளில், ஸ்ரீ ராமநாத சுவாமி கோவில், 108 திவ்ய தேச கோயில்களில் ஒன்றான ஆதி ஜெகநாதர் பெருமாள் கோவில், மங்கல நாத சுவாமி கோயில், கோதண்ட ராமர் கோயில் உள்ளிட்ட பல்வேறு பிரபலமான கோயில்கள் அமைந்துள்ளன. எனவே, ராமேஸ்வரத்தில் விமான நிலையம் அமைப்பது சுற்றுலா பயணிகளுக்கும், ராமேஸ்வரம் மற்றும் அண்டை மாவட்ட மக்கள் மிகுந்த பயனடைவார்கள்.
மேலும் படிக்க: இண்டிகோ விமான ரத்து விவகாரம்…ஊழியர்களுக்கு சிஇஓ திடீர் கடிதம்!



