Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

புதுச்சேரி காண்ட்ராக்டர் கொலை வழக்கு – திருமணத்தை மீறிய உறவு காரணமா? வெளியான பரபரப்பு தகவல்

Puducherry contractor murder case : சென்னை அசோக் நகர் பகுதியில் புதுச்சேரியைச் சேர்ந்த அரசு ஒப்பந்ததாரர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொலைக்கான காரணம் திருமணத்திற்கு மீறிய உறவு என போலீஸ் விசாரணையில் வெளிவந்துள்ளது.

புதுச்சேரி காண்ட்ராக்டர் கொலை வழக்கு – திருமணத்தை மீறிய உறவு காரணமா? வெளியான பரபரப்பு தகவல்
தனஞ்செயன் - சுகன்யா
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 30 Oct 2025 20:43 PM IST

சென்னை (Chennai) அசோக் நகர் பகுதியில் புதுச்சேரியைச் சேர்ந்த அரசு ஒப்பந்ததாரர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொலைக்கான காரணம் திருமணத்திற்கு மீறிய உறவு என போலீஸ் விசாரணையில் வெளிவந்துள்ளது. புதுச்சேரி முத்தலியார்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ். 31 வயதாகும் இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.  அவர் புதுச்சேரி (Puducherry) பொதுப்பணித்துறையில் கழிவுநீர் அகற்றும் ஒப்பந்தத்தை பெற்றிருந்தார்.  இந்த நிலையில், அக்டோபர் 29, 2025 அன்று  பிரகாஷ் தனது உதவியாளர் சுகன்யாவுடன் கழிவுநீர் வாகனத்தின் உதிரி பாகங்கள் வாங்குவதற்காக சென்னை வந்திருந்தார்.

இந்த நிலையில் மதியம் 3 மணியளவில் அசோக் நகர் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் உணவு உண்ட பிறகு, அவர் தன் காரில் ஏறி அமர்ந்தபோது, ஒரு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர், திடீரென கத்தியை எடுத்து, பிரகாஷை மார்பில் குத்தி கொலை செய்துவிட்டு தப்பி சென்றார். இதனால் பகல் நேரத்தில் மிகுந்த பரபரப்பான சாலையில் நடைபெற்ற இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிக்க : இரவில் வீட்டில் உறங்கியபோது தீ விபத்து.. பெண் பலி! செல்போன் சார்ஜர் காரணமா?

போலீஸ் விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்

பிரகாஷ் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தகவலறிந்து வந்த அசோக் நகர் போலீசார்,  பிரகாஷின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பினர். இதனைத் தொடர்ந்து, சிசிடிவி காட்சிகள் மற்றும் சாட்சியங்கள் மூலம் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில், விசாரணையின் அடிப்படையில் போக்குவரத்துத்துறை ஊழியர் தனஞ்செயன் மற்றும் சுகன்யா, குணசுந்தரி ஆகியோரை கைது செய்தனர்.

இந்த நிலையில் தனெஞ்செயனிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியானது.  தனஞ்செயனுக்கும் சுகன்யாவுக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்ற நிலையில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் தனஞ்செயனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சுகன்யா தன் குழந்தைகளுடன் புதுச்சேரியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். தனெஞ்செயன் எவ்வளவு வற்புறுத்தியும் சுகன்யா அவருடன் சேர்ந்து வாழ சம்மதிக்கவில்லை.

இந்த நிலையில் சுகன்யாவுக்கும் அவரது பள்ளி தோழரான புதுச்சேரி பொதுப்பணித்துறையில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றும் பிரகாஷிற்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். இதனால் பிரகாஷின் மனைவியும் தனது குழந்தைகளுடன் பிரிந்து சென்றுவிட்டார். பிரகாஷ் மற்றும் சுகன்யாவின் பழக்கம், சுகன்யாவின் கணவரான தனஞ்செயனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இதையும் படிக்க : காரில் கடத்தப்பட்ட ஃபைனான்சியர் … சினிமா பாணியில் துரத்தி பிடித்த காவல்துறை – பரபரப்பு சம்பவம்

இந்த நிலையில் தான் பிரகாஷும், சுகன்யாவும் சென்னை வந்த நிலையில் சுகன்யாவின் உறவினரான குணசுந்தரியை சந்தித்திருக்கின்றனர். இருவரும் உணவகத்தில் உணவருந்திய போது குணசுந்தரி மூலம் இந்த தகவல் தனஞ்செயனுக்கு தெரியவந்திருக்கிறது. இதனையடுத்து சம்பவ இடத்துக்கு தன் வீட்டில் இருந்து கத்தியை எடுத்து வந்த தனஞ்செயன், காரில் சீட் பெல்ட் அணிந்திருந்த பிரகாஷை சராமரியாக குத்தியிருக்கிறார். இதனால் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பிரகாஷ் உயிரிழந்திருக்கிறார்.

மனைவியும் உறவினரும் கைது

விசாரணையில், கொலைக்குப் பின்னணி மற்றும் பிரகாஷின் இருப்பிடத்தை தனஞ்செயலியனுக்கு அறிவித்தது அவரது மனைவி சுகன்யா மற்றும் உறவினர் குணசுந்தரி எனத் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மூவரையும் கைது செய்து, கொலை வழக்கில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். திருமணத்தை மீறிய உறவால் ஒரு குடும்பமே பாதிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.