சிவகங்கை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு… 7 ஆண்டுகளுக்கு பிறகு வழங்கப்பட்ட தீர்ப்பு – தமிழக அரசு ரூ.5 லட்சம் வழங்க உத்தரவு
Sivaganga POCSO Case: கடந்த 2018 ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டம் காளையோர் கோவிலில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு தமிழ்நாட்டையே உலுக்கியது. இந்த நிலையில் கிட்டத்தட்ட 7 வருடங்களுக்கு பிறகு இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.
சிவகங்கை அக்டோபர் 29: மதுரை மாவட்டம் கே.புதூர் அருகே உள்ள கொடிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு, சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பகுதியில் தங்கி கட்டிடப்பணியில் ஈடுபட்டு வந்தார். அப்போது அந்த பகுதியில் வசித்து வந்த 17 வயது சிறுமியிடம் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி, அவளை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில் சிவக்குமார் கைது செய்யப்பட்டு அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கில் அக்டோபர் 28, 2025 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கட்டிட தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை
இந்த நிலையில் சிறுமியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், காளையார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சிவக்குமாரின் மீதான குற்றம் உறுதியான நிலையில், போக்சோ சட்டத்தின் கீழ் சிவக்குமார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார்.
பின்னர் இந்த வழக்கு சிவகங்கை மாவட்ட போக்சோ விரைவு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில் அனைத்து தரப்பு விசாரணையும் முடிந்த நிலையில், இந்த வழக்கில் அக்டோபர் 28, 2025 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கோகுல் முருகன், குற்றம் நிரூபிக்கப்பட்டதை உறுதி செய்தார். இதனையடுத்து குற்றவாளி சிவக்குமாருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
தமிழக அரசு ரூ.5 லட்சம் வழங்க உத்தரவு
மேலும், பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமிக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். கிட்டத்தட்ட 7 வருடங்களாக நடைபெற்று வந்த வழக்கில் தற்போது சிறுமிக்கு நீதி வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என்பதை மேலும் உறுதி செய்வதாக அமைந்தது.



